Published:Updated:

“அரசு நிதியுதவி... உடனடிப் பலன் தராது!”

என்.ஆர்.பானுமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
என்.ஆர்.பானுமூர்த்தி

பேராசிரியர் பானுமூர்த்தி சிறப்புப் பேட்டி

“அரசு நிதியுதவி... உடனடிப் பலன் தராது!”

பேராசிரியர் பானுமூர்த்தி சிறப்புப் பேட்டி

Published:Updated:
என்.ஆர்.பானுமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
என்.ஆர்.பானுமூர்த்தி
முடங்கிக்கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசாங்கம் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஐந்து கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நிதியுதவித் திட்டங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நிதிக்கொள்கை தொடர்பான ஆய்வு நிறுவனமான ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஃபைனான்ஸ் அண்ட் பாலிசி’ நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் என்.ஆர்.பானுமூர்த்தியிடம் பேசினோம். பொருளாதாரம் மற்றும் நிதிக்கொள்கை தொடர்பான விஷயங்களில் ஆழ்ந்த நிபுணத்துவம்கொண்டவர் இவர். அவருக்கு நாம் இ-மெயில் அனுப்பிவைத்த கேள்விகளும் அதற்கு அவர் அனுப்பிய பதில்களும்...

கோவிட்-19 தொற்றுநோயால் இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கோவிட்-19 தொற்றுநோய் வருவதற்கு முன்னரே இந்தியப் பொருளாதாரம் பலவீனமாகத்தான் இருந்தது. தொற்றுநோயும் அதைத் தொடர்ந்துவந்த ஊரடங்கும் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்கிவிட்டன. உள்நாட்டிலும் உலக அளவிலும் சப்ளை மற்றும் தேவையின்மீது கணிசமான பாதிப்பை இந்தத் தொற்றுநோய் உருவாக்கிவிட்டது. இப்போதிருக்கும் நிலையில், ஊரடங்கு முழுவதுமாக எப்போது விலக்கிக்கொள்ளப்படும் என்பது தெரியவில்லை. இதனால் பொருளாதார பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இப்போது சரியாக கணிப்பது கடினமானதாக இருக்கிறது. ஆனால், மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.’’

“அரசு நிதியுதவி... உடனடிப் பலன் தராது!”

பொருளாதார முடக்கத்திலிருந்து விடுபட நம் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

‘‘பாதிப்பு என்பது எல்லா இடங்களிலும் பரவலாக இருக்கும் நிலையில், `நேரடிப் பண உதவியை (Fiscal) மத்திய அரசாங்கம் செய்ய வேண்டும்’ என்றார்கள். `நமது ஜி.டி.பி-யில் 5% அளவுக்கு (ரூ.10 லட்சம் கோடி) இந்த நிதியுதவி இருக்க வேண்டும்’ என்றார்கள். ஆனால், மத்திய அரசாங்கம் இப்போது அறிவித்திருக்கும் நிதியுதவி நடப்பாண்டில் 1% அளவுக்கு மட்டுமே கூடுதலாகச் செலவழிக்கக்கூடியதாக இருக்கிறது. மக்களிடம் பணம் தந்தால் மட்டுமே குறுகியகாலத்தில் தேவையை அதிகரிக்க முடியும். ஆனால், அப்படியொரு நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவே இல்லை. அதற்கு பதிலாக, தனது பாரத்தின் பெரும்பகுதியை ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் வங்கித்துறை மீது சுமத்திவிட்டது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மக்களிடம் தேவையை அதிகரிக்க மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

‘‘அரசாங்கம் செலவு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களையெல்லாம் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். இதனால் நமது நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே நிர்ணயித்த 3.5% என்ற அளவைத் தாண்டிச் செல்லத்தான் செய்யும். மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்துதான் ஆக வேண்டும். காரணம், தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கான பணியை மாநில அரசுகள்தான் செய்கின்றன.

ஆனால், மத்திய அரசாங்கமோ ரேட்டிங்கைப் பற்றித்தான் கவலைப்படுகிறதே ஒழிய, உதவி செய்கிற மாதிரி இல்லை. மத்திய அரசாங்கம் இப்போது எடுத்திருக்கும் பல நடவடிக்கைகள் நீண்ட காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உடனடிப் பலன் எதுவும் தராது என்பதால், குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் பல பின்னடைவு களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.’’

`அமெரிக்க அரசாங்கம் செய்வதுபோல, மக்களுக்கு நேரடியாகப் பணம் தர வேண்டும்’ என்று பலரும் சொல்கிறார்கள். இது நமக்குச் சாத்தியமா?

‘‘அமெரிக்கா இப்போது செய்திருப்பதைப் போலச் செய்வதன் மூலம் குறுகியகாலத்தில் மக்களிடம் தேவையை ஏற்படுத்த முடியும். ஆனால், அது போன்ற உதவியைச் செய்வதற்கு நம் நாட்டில் பெரிய அமைப்பு எதுவுமில்லை. நம் நாட்டில் ஜன்தன்-ஆதார்-மொபைல் என்ற அமைப்பு இருக்கிறது. இதன் மூலம்தான் மத்திய அரசாங்கம் ரூ.1.70 லட்சம் கோடியை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. நம் நாட்டில் யார், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற துல்லியமான புள்ளிவிவரங்களும் இல்லை. இதனால் ‘அனைவருக்கும் பொதுவான அடிப்படை வருமானம்’ (Universa Basic Income) என்ற திட்டத்தையும் கொண்டுவர முடியாமல் இருக்கிறது.’’

என்.ஆர்.பானுமூர்த்தி
என்.ஆர்.பானுமூர்த்தி

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.20 லட்சம் கோடியில் மத்திய அரசாங்கம் நேரடியாகக் கையைவிட்டுத் தரும் பணம் எவ்வளவு?

‘‘இதைத் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. 0.6% முதல் 1.8% வரை ஒவ்வோர் ஆய்வாளரும் ஒவ்வொரு கணக்கைச் சொல்கிறார்கள். ஆனால், ஜி.டி.பி-யில் 10% அல்ல என்பது மட்டும் நிச்சயம். விவசாயத்துக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தொகை ஆர்.பி.ஐ கணக்கில் இருக்கிறது. அதை மீண்டும் கணக்கில் காட்டியதால் ஏற்பட்ட விளைவு இது என்று நினைக்கிறேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட்-19 நோய்த் தொற்றால் அரசின் வரி வருமானமும் பங்கு விலக்கு மூலம் கிடைக்கும் வருமானமும் எந்த அளவுக்குக் குறையும்?

‘‘பங்கு விலக்கல் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானம் ஏற்கெனவே குறைவாக இருக்கிறது. `இந்த ஆண்டில் ஏறக்குறைய ரூ.2.1 லட்சம் கோடி இதன் மூலம் ஈட்ட வேண்டும்’ என அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. ஆனால், இன்று நிலவும் நெருக்கடியான சூழலில் இதன் மூலம் எந்த வருமானமும் அரசுக்குக் கிடைக்காது. பொருளாதார வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் வரி வருமானத்தைத்தான் அரசாங்கம் மிகவும் நம்பியிருக்கிறது.

ஆனால், தற்போது பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருப்பதால், வரி வருமானமும் குறையும். இப்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் நிதியுதவித் திட்டங்களால் பொருளாதாரம் வளர்ச்சி காணும்பட்சத்தில், அரசின் வருமானம் அதிகரித்து, கோவிட்-19 நோய்த் தொற்றால் ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்ட அது உதவும்.’’

மத்திய அரசாங்கம் இப்போது ரூ.4.2 லட்சம் கோடியைக் கடன் வாங்க முடிவெடுத்திருப்பது வருமான இழப்பைச் சரிக்கட்டவா அல்லது கூடுதலாக இப்போது செலவு செய்வதற்காக ஏற்பட்டதா?

‘‘வருமான இழப்பைச் சரிக்கட்ட பெரும் பகுதிப் பணமும், கூடுதலாகச் செலவாகும் பணத்துக்கு ஒரு பகுதியைச் செலவழிக்கவும்தான் அரசாங்கம் கடன் வாங்குகிறது. ஆனால், இரண்டாம் காலாண்டில் மீண்டுமொருமுறை கணக்கிடும்போது இன்னும் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றே நினைக்கிறேன்.’’

“அரசு நிதியுதவி... உடனடிப் பலன் தராது!”

மாநில அரசாங்கங்கள் கூடுதலாகக் கடன் வாங்க மத்திய அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறை 10% இருக்கிறது. இதை சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் எப்படிப் பார்க்கும், ரேட்டிங் குறைவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா?

‘‘எல்லா மாநில அரசாங்கங்களின் நிதிப் பற்றாக்குறையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், பெரும்பாலான மாநில அரசாங்கங்களின் நிதிப்பற்றாக்குறை மூன்று சதவிகிதத்துக்குள்ளேயே இருப்பதால், கூடுதலாகக் கடன் வாங்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

ஏற்கெனவே அதிக வட்டியில் கடன் வாங்கும் (அரசுக் கடன் பத்திரத்துக்கு பாண்ட் மூலம் கிடைக்கும் வருமானத்துக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகை 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்க, கேரளா 8.96% வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறது) கேரளா போன்ற மாநிலங்கள் இன்னும் அதிகமாகக் கடன் வாங்கும். இந்த நேரத்தில் ரேட்டிங் நிறுவனங்கள் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த நேரத்தில் மாநில அரசாங்கங்கள் கடன் பெறுவதற்கு மத்திய அரசாங்கம் உதவ வேண்டும். இல்லா விட்டால், குறுகியகாலத்தில் மிக அதிகமான வட்டிக்குத்தான் மாநில அரசாங்கங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும்’’.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தருவதில் என்ன சிக்கல்?

‘‘சந்தையில் பணப்புழக்கம் நன்றாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய ரிசர்வ் வங்கி மும்முரமாகச் செயல்பட்டுவருகிறது. ஆனால், கடன் தருவதில் வங்கிகள் இன்னும் கட்டுப்பாட்டுடனேயே இருக்கின்றன. தவிர, யாருக்குக் கடன் தருவது என்பதை கணிப்பதில் வங்கிகள் தடுமாறுகின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த ஊரடங்கு நேரத்தில் என்ன தேவை என்பதைக் கண்டறிய துல்லியமான புள்ளிவிவரங்களும் நம்மிடம் இல்லை. 100% மத்திய அரசு உத்தரவாதம் கொண்ட கடன்களை வங்கிகள் தர வேண்டும் என்பது உண்மையில் வரவேற்கத்தகுந்த விஷயம்தான். இதனால் சிறு தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனம் அதிகரிக்கும். அவர்கள் தற்போது நிலுவையிலுள்ள கடன்களைச் செலுத்துவார்கள்.’’

“அரசு நிதியுதவி... உடனடிப் பலன் தராது!”

இந்தியா முழுக்கத் தொழிலாளர்கள் புலம்பெயர்வதால் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

‘‘தொழிலாளர்கள் பெருமளவில் புலம்பெயர்வதால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான பாதிப்பு ஏற்படும். தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலா ளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதால், சில மாநில அரசாங்கங்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படும்.

தங்கள் மாநிலங்களைவிட்டுப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்றதால், வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை சில மாநிலங்களில் அதிகமாக ஏற்படும்.

இதனால் சம்பளத்தில் மிகப்பெரிய வேறுபாடு தோன்றும். எங்கு அதிக சம்பளம் தரப்படுகிறதோ, அந்த இடத்தை நோக்கி மீண்டும் தொழிலாளர்கள் செல்லத் தொடங்குவார்கள். இவையெல்லாம் சரியாவதற்கு பல மாதங்கள் ஆகும்.’’

மத்திய அமைச்சரின் அறிவிப்பில் ஊக்குவிப்புத் திட்ட உதவிகளைவிட, சீர்திருத்தம் தொடர்பான அறிவிப்புகளே அதிகம் இருப்பதாகப் பலரும் விமர்சிக்கிறார்களே!

‘‘உண்மைதான். சில துறைகள் நீண்ட காலமாகவே வளர்ச்சிகாண முடியாதபடி இருக்கும் தடைகளைத் தகர்த்தெறியும் பல நடவடிக்கைகளை நிதியமைச்சர் அறிவித்திருக் கிறார். உதாரணமாக, விவசாயம், சுரங்கத் துறை, மின்பகிர்மான நிறுவனங்கள், தொழிலாளர் தொடர்பான சட்டங்கள், நில ஆர்ஜிதம், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு ஆகிய சீர்திருத்தங்கள் நீண்டகாலமாகவே கிடப்பில் இருக்கின்றன. இப்போதுள்ள நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசாங்கம் இந்தச் சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறது.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, இந்த சீர்திருத்தங்களால் நமது பொருளாதாரம் நீண்டகாலத்தில் பல நல்ல நன்மைகளை அடையும்.’’

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதன் மூலம், அதைச் சார்ந்துள்ள அனைவருக்கும் நன்மை கிடைக்குமா?

‘‘அரசு நிறுவனங்களைவிட தனியார் நிறுவனங்கள் திறமையாகச் செயல்படும் என்பதைத்தான் (உதாரணமாக, வங்கி, தொலைத்தொடர்பு) கடந்த 1991-ம் ஆண்டுமுதல் நாம் பார்த்துவருகிறோம்.

திறன் மிகுந்த கண்காணிப்பு இருக்கும்பட்சத்தில் தனியார் துறை சார்ந்த பணியாளர்கள் அனைவருக்குமே நல்ல பலன் கிடைக்கும்.’’
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism