Published:Updated:

வேலை பயம் தொழில் நஷ்டம் பண நெருக்கடி!

மன அழுத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
மன அழுத்தம்

கொரோனா கொடூரம் - உளவியல் தீர்வு!

லகை அச்சுறுத்தும் கொரோனா நமக்கு ஏற்படுத்தியிருக்கும் உயிர் பயம் வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னொரு பயமும் நம் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது. அது, நம் எதிர்காலம் குறித்த பயம். `நம் வேலை நிலைக்குமா...

செய்துகொண்டிருக்கும் தொழில் முடங்கிக்கிடக்கிறதே, அடுத்து என்ன செய்வது...’ இப்படிப் பல கேள்விகள் எழுந்து நம் எதிர்காலம் குறித்து மிகப் பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க, பலரும் நிம்மதியை இழந்துகொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்பது இன்னொரு பெரிய துயரம். இந்த நிலையில், நம் மனதை ரிலாக்ஸ் செய்துகொள்வது எப்படி, ‘இதுவும் கடந்துபோகும்’ என்று நினைத்து, நிம்மதியாக இருப்பது எப்படி என்பதை மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“இதற்கு முன்னரும் பல கொள்ளைநோய்களை, பல இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்திருக்கிறது மனிதகுலம். அவற்றைத் தாண்டியும் வந்திருக்கிறது. அப்படிப்பட்ட முன்னோர்களின் வாரிசுகள்தான் நாம் எல்லோரும். இந்த எண்ணத்தை முதலில் நம் மனங்களில் நிலைநிறுத்துவோம்.

கொரோனா காரணமாக, ஒரு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். உலகின் பல நாடுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றன. அவற்றிலிருந்து மீண்டும் வந்திருக்கின்றன. இந்த முறை இதில் ஒரு சிறு வித்தியாசம்... உலகமே இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. `நாம் மட்டும் தன்னந்தனியாக இந்த நெருக்கடியைச் சந்திக்கப்போவதில்லை’ என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது நமக்குச் சற்றுத் தெம்பைத் தரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நேரத்தில் நம் மனங்களை ஐந்து முறைகளில் பலப்படுத்த வேண்டும். உணர்ச்சிகளை நம் வசத்தில் வைத்திருப்பது, நம் திறமையின் மீது நம்பிக்கை வைப்பது, பாசிட்டிவ்வான சுயமதிப்பு, ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகம், மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவைதான் அந்த ஐந்து முறைகள். இவற்றில் நம்மை நாமே பலப்படுத்திக்கொண்டால் வேலையின்மை, தொழில் நஷ்டம் ஆகிய இரண்டையும் நிச்சயமாக நல்ல முறையில் கடந்துவிட முடியும்.

மன அழுத்தம்
மன அழுத்தம்

தற்போது நம் மனங்களில் இருப்பதெல்லாம் பயம். உண்மையில், நமக்கு வேலை போவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இருக்காது. ஆனால், ‘வேலை போய்விடுமோ’ என்று பயந்தே வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடுவோம். அதாவது, ஒரு விஷயம் நடக்காமலேயே பயத்துடனும் மனப் பதற்றத்துடனும் வேலை பார்க்கும்போது உங்கள் மூளையின் கவனம் முழுக்க அந்த பயத்தின் மேல்தான் இருக்கும். வேலையில் கவனம் இல்லாதபோது நம் பர்ஃபாமன்ஸ் பாதிக்கப்படும். அதனால் அந்த வேலையையும் தாமதமாக முடிப்பீர்கள்.

இதன் பின்விளைவுகள் என்ன தெரியுமா... உங்களுக்கு வேலை தந்திருப்பவரோ, உங்கள் நிறுவனமோ யாரை வேலையைவிட்டு நீக்கலாம் என்று யோசிக்கும்போது உங்கள் பெயரை மிக எளிதாக ‘டிக்’ செய்துவிடும். எனவே, உங்களுக்கு வேலை போவதற்குக் காரணம் கொரோனாவோ அல்லது அதன் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடியோ அல்ல; உங்கள் மனப் பதற்றம்தான்.

நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் கொரோனாவை வெல்வார்கள். இதே தியரி வரவிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பொருந்தும். வீட்டிலிருந்தே சிறப்பாக வேலை பார்ப்பவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். நாம் எல்லோரும் நம் வேலையில் கவனமாக இருந்து செய்து முடிக்க வேண்டிய நேரம் இது. இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லா விஷயங்களையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாது. சில விஷயங்கள் நம் கைகளை மீறித்தான் நடக்கும். அவற்றை ஏற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை. சில விஷயங்களை நீங்கள் நம்பும் சக்தியிடமோ அல்லது இயற்கையிடமோ விட்டுவிடத்தான் வேண்டும். நம் கட்டுப்பாட்டை மீறிய விஷயங்களில் நம்மை ஆற்றுப்படுத்திக் கொள்ளவும், அடுத்து என்னவென்று யோசிக்கவும் வேண்டுமே தவிர, புலம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை.

மன அழுத்தம்
மன அழுத்தம்

நாம் விதை போடலாம், உரம் போடலாம், தண்ணீரும் விடலாம். ஆனால், ஒரு செடி வளர்வதற்கு இயற்கையின் உதவியும் கட்டாயம் தேவை. இன்றைய நம் பிரச்னையின் தீர்வும் அதில்தான் ஒளிந்திருக்கிறது. நம் வேலை நம்மைவிட்டுப் போகாதபடிக்கு இன்னும் கடினமாக, ஸ்மார்ட்டாக உழைப்போம். பிசினஸ் செய்பவர்கள் நலிந்த தொழிலை எப்படியெல்லாம் தூக்கி நிறுத்தலாம் என இந்த ஊரடங்கு நாள்களில் யோசித்துவைக்கலாம். மீதியை இயற்கையின் கைகளிலும், காலத்தின் கைகளிலும் விட்டுவிட்டு, உழைப்பதில் நாம் கவனம் செலுத்தலாம்.

தொழிலில் நஷ்டமடைந்த வர்களையும், அடுத்து என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினர் சற்று கவனிக்க வேண்டிய நேரம் இது. அவர்கள் அடுத்து என்ன செய்வது என்ற வருத்தத்தில் இருக்கிறார்களா அல்லது மன அழுத்தத்தில் (Depression) இருக்கிறார்களா என்று கவனியுங்கள். ஏனெனில், வருத்தம் என்பது ஒரு மனநிலை. அதைக் கடந்து வந்துவிடலாம். ஆனால், மன அழுத்தம் என்பது ஒரு நோய்நிலை. இதிலும் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு நிலைகள் இருக்கின்றன.

மன அழுத்தத்தில் இருக்கும் அதே நேரத்தில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தால், அது பாசிட்டிவ்வான நிலை. அதற்கு பதில் ‘என் தொழில் போச்சு; என் வாழ்க்கையும் போச்சு; இனி என்னால வாழ முடியாது’ என்று புலம்பினால் அது நெகட்டிவ்வான நிலை. இப்படிப்பட்டவர்கள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள். `தற்கொலை செய்துகொள்வதுதான் ஒரே முடிவு’ என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் உளவியல் ஆலோசனை பெற்று, தாங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டு வர முடியும். இப்படிப்பட்ட வாய்ப்பு ஏதும் கிடைக்காதவர்களை அவர்கள் குடும்பம்தான் வழிநடத்தி, ஆறுதல்படுத்தி மீட்க வேண்டும். நிலைமை கைமீறிப் போவதற்கு முன்னர் ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

வேலை பயம் தொழில் நஷ்டம் பண நெருக்கடி!

வேலை போனாலும் சரி, தொழிலில் நஷ்டம் அடைந்தாலும் சரி, எந்த நிலைமையையும் சமாளிக்கும் திறன் மனிதனின் மூளைக்கு உண்டு. இதை ‘ஹோப்பிங் மெக்கானிசம்’ என்போம். `இதுதான் நிலைமை, இதை எப்படிச் சமாளிப்பது’ என்று யோசித்தால் அது ‘குட் ஹோப்பிங் மெக்கானிசம்.’ ‘நான் தோற்றுவிட்டேன். அதை மறக்க மது குடிக்கிறேன்’ என்பவர்கள் ‘பேட் ஹோப்பிங் மெக்கானிசம்’ பேர்வழிகள். மது, பிரச்னையை மறக்கச் செய்யும். ஆனால், தீர்க்காது. தொழிலில் நஷ்டமடைந்ததால், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்பவர்கள் இந்த வகையினர்தான்.

இதையெல்லாம் இப்போது நான் ஏன் சொல்கிறேன் என்றால், கொரோனாவுக்குப் பிறகு வரப்போகும் பொருளாதார நெருக்கடியில் பலருக்கும் இது போன்ற எண்ணங்கள் ஏற்படலாம். ஆனால், நம் எண்ணங்கள் அனைத்துமே சரியானவை அல்ல. இதை நினைவில் வைத்துக்கொண்டாலே நம் மனம் சொல்லும் அத்தனைக்கும் நாம் காது கொடுத்துவிட மாட்டோம். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களையும், வேலை போய்விடுமோ என்ற பயத்தில் இருப்பவர்களையும் தாண்டி மற்றவர்களுக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன. `இத்தனை சதவிகிதம் வேலைவாய்ப்பு போய்விடும், இத்தனை சதவிகிதம் தொழில் நஷ்டமடையும்’ என்பது போன்ற வாட்ஸ்அப் மெசேஜ்களை ஃபார்வர்டு செய்யாமலிருப்பது இந்த நேரத்தில் நல்லது. முதலாளிகளும் இந்த நேரத்தில் தங்களிடம் வேலை பார்ப்பவர்கள்மீது சற்று கரிசனத்துடன் இருக்க வேண்டும். வேலை பார்ப்பவர்களும் நிறுவனங்களின் நிலைமையைப் புரிந்து நடக்க வேண்டும்.

எம்ப்ளாயர், எம்ப்ளாயி இருவரும் கைக்கோத்துதான் இந்தப் பொருளாதார நெருக்கடியைக் கடக்க வேண்டும்.

தனிமையில் இருப்பவர்கள் `அடுத்தவர் களுக்குக் கஷ்டம் தர மாட்டேன்; நானே சமாளித்துக்கொள்வேன்’ என்ற மனப் பான்மையைத் தள்ளிவைத்துவிட்டு அடுத்தவர் களின் மனக்கதவுகளைத் தட்டி உதவி கேளுங்கள். நாம் உடல்ரீதியாகத்தான் தள்ளியிருக்க வேண்டுமே தவிர, மனரீதியாக அல்ல. அதனால் அடுத்தவரிடம் உதவி கேட்கவோ, அடுத்தவருக்கு உதவி செய்யவோ தயங்காதீர்கள். இது மட்டும்தான் தனிமையை வெல்லும் வழி’’ என்றார். `கொடூரமான இந்த கொரோனா காலம் சீக்கிரமே முடிவுக்கு வரும்’ என்ற நம்பிக்கையுடன் நம் எதிர்காலத்தை நாம் தைரியமாகச் சந்திப்போம்” என்றார்.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம்!