Published:Updated:

தகரம் முதல் தங்கம் வரை... வர்த்தகத்தில் ஜொலிக்கும் ராஜ வீதிகள்! புதுக்கோட்டை ரவுண்ட்அப்

மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
மார்க்கெட்

A R E A M A R K E T

தகரம் முதல் தங்கம் வரை... வர்த்தகத்தில் ஜொலிக்கும் ராஜ வீதிகள்! புதுக்கோட்டை ரவுண்ட்அப்

A R E A M A R K E T

Published:Updated:
மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
மார்க்கெட்

புதுக்கோட்டையில் ஷாப்பிங் செய்ய நினைக்கிறவர்கள் ராஜ வீதிகளை ஒருமுறை சுற்றிவந்தால் போதும் மளிகைப் பொருள்கள் தொடங்கி, பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், ஆடைகள், புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள், மொபைல் உள்ளிட்ட எல்க்ட்ரானிக்ஸ் பொருள்கள், ஃபர்னிச்சர்ஸ் உட்பட வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கிவிடலாம்.

ஆட்டுச் சந்தை
ஆட்டுச் சந்தை

தொன்மை பேசும் ராஜ வீதிகள்...

ராஜ வீதிகளின் சிறப்புகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகச் செயலாளர் சவரிமுத்துவிடம் பேசினோம். ‘‘மன்னர்கள் வாழ்ந்த பழைய அரண்மனையின் திசைகளை வைத்துதான் அப்போதே கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி என நான்கு வீதிகளைப் பிரித்திருக்கின்றனர்.ஒவ்வொரு ராஜ வீதிகளுக்குமிடையே நான்கு வீதிகள் மொத்தமாக இந்த 16 வீதிகளுக்குள்ளே தகரம் முதல் தங்கம் வரையிலும் அனைத்துப் பொருள்களும் அடங்கிவிடுகிறது.

இந்த நான்கு வீதிகளிலும் 3,500-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. பிரபல பிராண்டட் கடைகள் அனைத்தும் கீழ ராஜ வீதியில்தான் அதிகம் இருக்கிறது. இங்குள்ள ஒரு மளிகைக் கடை நான்கு தலைமுறைகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. பாரம்பர்யம் மிக்க சில நகைக் கடைகளும் கீழ ராஜ வீதிக்குள்ளேயேதான் இருக்கிறது. மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த பாரம்பர்யமிக்க நகைக் கடைகளைத் தேடி வந்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நகைகளை வாங்கிச் செல்கின்றனர்.

அங்கிருந்து சாந்தாரம்மன் கோயில் வீதிக்குள் நுழைந்தால், பூஜை சாமான்கள் அனைத்தையும் வாங்கிவிடலாம். பழைய அரண்மனை இருந்த இடம் தற்போது தெட்சிணா மூர்த்தி மார்க்கெட்டாக இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி மார்க்கெட்டில் வாசனைப் பொருள்கள், கடுகு, சீரகத்தில் தொடங்கி சிறுதானியங்கள், நவதானியங்கள் அனைத்தும் விதமான மளிகைச் சாமான்களும் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. வித, விதமான பாத்திரங்கள், கைவினைப் பொருள்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கிறது. பழைய அரண்மனைச் சுவரையொட்டியே செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் இருக்கிறது. இங்குள்ள கடைகளிலிருந்து தினமும் ரூ.5 கோடிக்கும் குறையாமல் வர்த்தகம் நடக்கிறது” என்றார்.

சவரிமுத்து
சவரிமுத்து

வெள்ளிக்கிழமை கூடும் வெள்ளிச் சந்தை...

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய வாரச் சந்தைகளில் புதுக்கோட்டை வெள்ளிச் சந்தையும் ஒன்று. சுமார் 90 ஏக்கர் பரப்பளவிலான வெள்ளிச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கூடுகிறது. “இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும் புதிய அரண்மனை இடம் கிட்டத்தட்ட 100 ஏக்கர், அதற்கடுத்து, வெள்ளிச் சந்தை இடம்தான் அதிக பரப்பளவு கொண்டது. சுமார் 90 ஏக்கர் வரையிலும் இருக்கும் இந்த இடத்தில் தான் ஒவ்வொரு வாரமும் வெள்ளிச் சந்தை கூடுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மும்பை ஆகிய வெளி மாநிலங் களிலிருந்தும், ஊட்டியிலிருந்து கேரட், பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் வரும். காஷ்மீர், சிம்லா, நாக்பூரிலிருந்து பழங்கள் வரும். இங்கு 600-க்கும் மேற்பட்ட வியாபாரி களின் கடைகள் இருக்கிறது. மன்னர் காலத்திலிருந்தே இங்கு வெள்ளிச் சந்தையில் காய்கறி வியாபாரம் நடக்கிறது. வழக்கமாக விற்கப்படும் விலையைவிட வெள்ளிச் சந்தையில் சற்றே விலை குறைவாக இருக்கும். அறந்தாங்கி, கந்தர்வக் கோட்டை, கறம்பக்குடி போன்ற வெளியூர்களிலிருந்து பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்” என்கிறார் புதுக்கோட்டைக் காய்கனி மார்க்கெட் சங்க செயலாளர் சீனி.

சீனி
சீனி

வெள்ளிச் சந்தையில் காய்கறி விற்பனை...

தொடர்ந்து பேசிய சீனி, வெள்ளிச் சந்தையில் காய்கறியோடு, மாடு, ஆட்டுச் சந்தையும் ரொம்பவே விசேஷம். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் வெள்ளிக்கிழமை அன்றே மாடு, ஆட்டுச் சந்தையும் நடந்துக் கிட்டு இருந்துச்சு.

காலப்போக்கில் அதிகளவு வரவு இருந்ததால், மாட்டுக்கு ஒரு நாள் சந்தை, ஆட்டுக்கு ஒரு நாள் சந்தைன்னு மாறிப் போச்சு. வியாழக் கிழமை மாட்டுச் சந்தையும், வெள்ளிக் கிழமை ஆட்டுச் சந்தையும் நடக்கிறது. வெள்ளிச் சந்தையில் மட்டும் ரூ.2 கோடி வரையிலும் வர்த்தகம் நடக்கிறது. வெள்ளிச் சந்தை இடத்தைச் சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட மூங்கில் டெப்போக்கள் செயல்பட்டு வருது. மெல்லியது, கடினமானது, உயரமானது என ஏராளமான ரக மூங்கில்கள் இங்கு கிடைக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் எனச் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மூங்கில் கொ ண்டு வரப்படுகிறது. கேரளாவுக்கு இங்கிருந்து லாரிகளில் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை யைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வெள்ளி சந்தையில் கூடுகின்றனர்.

புல் சந்தை
புல் சந்தை

களைகட்டும் புல் வியாபாரம்

தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில் புதுக்கோட்டை நகராட்சி, சீமை புல் சாகுபடி செய்து கால்நடை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. அண்ணா சிலை, திருக்கோகர்ணம் உள்ளிட்ட நகரின் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் காலை 6 மணிக்குத் தொட்ங்கி 9 மணி வரையிலும் புல் கட்டுகளை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

“மன்னர்கள் காலத்தில் குதிரைப்படைகளின் தீனி தேவையைப் பூர்த்தி செய் வதற்காக, சீமைப்புல்லை வளர்த்திருக்காங்க. மன்னர் ஆட்சிக்காலத்துக்கு அப்புறமும், கால்நடை விவசாயிகளின் நலனுக்காக, நகராட்சி நிர்வாகம் விடாம இதைச் செஞ்சிக்கிட்டு இருக்கோம். மருபினி ரோடு பகுதியில் 30 ஏக்கர்ல இந்த சீமைப்புல் சாகுபடி நடக்குது. நாளொன்றுக்கு 5,000 கிலோ வரையிலும் அறுவடை செய்றோம். தினமும் அண்ணா சாலை, திருக்கோகர்ணம், திருவப்பூர், மேட்டுப்பட்டி, பிருந்தாவனம்னு நகரின் முக்கிய இடங்களில் புல் சந்தைகளை ஏற்படுத்தி தினமும் புல் கட்டுகளை விற்பனை செய்கிறோம். நாளொன்றுக்கு ரூ.30,000-மும், ஆண்டுக்கு சுமார் 30 லட்சத்துக்கும் குறையாமல் விற்பனை நடக்கிறது. என்கிறார்” நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன்.

சுப்பிரமணியன்
சுப்பிரமணியன்

கட்டுமாவடி பெரிய மீன் மார்க்கெட்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய மீன் மார்க்கெட் கட்டுமாவடி மீன் மார்க்கெட். பிரஷ்ஷா மீன் வாங்கணும்னா, எல்லாரின் சாய்ஸும் கட்டுமாவடி மார்க் கெட்டுத்தான். இங்குதான் அனைத்து வகையான உயிர் மீன்களும் கிடைக் கிறது. 11 மொத்த ஏலக்கடைகள். சிறியது பெரியதுமாக 50-க்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகள் சுற்றிலும் இருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட இறால் கம்பெனிகளும் செயல்படுகிறது. இங்கு மீமிசல், மணமேல்குடி உள்பட கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மல்லிப் பட்டினம் பகுதியிலுள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஃபிரஷ்ஷாக விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. அத்துடன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் பகுதி களிலிருந்தும் தினமும் ஏலக்கடைக்கு மீன்கள் கொண்டுவரப்படுகிறது. தினமும் ரூ.2 கோடி வரையிலும் வர்த்தகம் நடக்கிறது. புதுக்கோட்டை, கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், கந்தர்வக்கோட்டை என வெகுதொலைவிலிருந்து பொது மக்கள் நேரடியாக வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை

ஆதனக்கோட்டை முந்திரி!

புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் ஆதனக்கோட்டை கிராமத்தின் சாலை நெடுகிலும் முப்பதுக்கும் மேற்பட்ட முந்திரிப் பருப்பு தயாரிப்பு மற்றும் விற்பனைக் கடைகள் இருக்கின்றன. தலைமுறை தலைமுறையாகக் குடிசைத் தொழிலாக இதைச் செய்துவருகின்றனர். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, திருவரங்குளம், அரிமளம் ஆகிய பகுதிகளில் விளையும் முந்திரிக்கொட்டைகளை மொத்தமாக வாங்கிவந்து வறுத்தெடுத்து, சூடான நிலையிலேயே முந்திரிப் பருப்பைப் பிரித்தெடுத்து பாக்கெட்டுகளில் அடைத்து கிலோ கணக்கில் விற்பனை செய்துவருகின்றனர். விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டையை ரூ.10,000 வரையிலும் வாங்குகின்றனர். ஒரு மூட்டையிலிருந்து 15 - 20 கிலோ வரையிலும் முந்திரிப் பருப்பு எடுக்கின்றனர். கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்கின்றனர். தஞ்சாவூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குத் தேவைக்கேற்ப முந்திரிப் பருப்புகளை அனுப்பி வைக்கின்றனர். வறுத்தெடுத்த உடனேயே ஃபிரஷ்ஷாக முந்திரிப்பருப்பு கிடைப்பதால், ஆதனக்கோட்டை முந்திரி வியாபாரிகளைத் தேடிவந்து வாங்கிச் செல்கின்றனர். புதுக்கோட்டைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், ஆர்வமுடன் நேரடியாக வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். ஆதனக்கோட்டை குடிசைகளிலிருந்து நாளொன்றுக்குச் சத்தமில்லாமல் ரூ.20 லட்சம் வரையிலும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism