Published:Updated:

ஆன்லைன் ஆப்களுக்குப் போட்டி தரும் புதுக்கோட்டை ‘சேவகன்’!

‘சேவகன்’ குழுவுடன் சத்யராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
‘சேவகன்’ குழுவுடன் சத்யராஜ்

ஆன்லைன் பிசினஸ்

ஆன்லைன் நிறுவனம் என்றாலே டெல்லி, மும்பை, பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் நடத்த வேண்டுமா? நாங்களும் களத்தில் இறங்கி கலக்குவோம் என்று புதுக்கோட்டையில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது ஆன்லைன் சேவை நிறுவனம் ஒன்று. புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் நடத்தும் ‘சேவகன்’ என்கிற ஆன்லைன் ஃபுட் ஆப், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற பெரும் நிறுவனங்களுக்குக் கடும் போட்டியைத் தந்துவருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சத்யராஜை நாம் சந்தித்துப் பேசினோம். அவர் தன்னுடைய பிசினஸ் பயணத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார்.

‘சேவகன்’ குழுவுடன் சத்யராஜ்
‘சேவகன்’ குழுவுடன் சத்யராஜ்

“நான், பொறந்து வளர்ந்தது எல்லாம் புதுக்கோட்டைக்குப் பக்கத்துல உள்ள மணமேல்குடிக்கு அருகே இருக்கிற விச்சூர்ங்கிற கிராமம். ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம்தான். கஷ்டப்பட்டுத்தான் பி.எஸ்ஸி, எம்.சி.ஏ படிச்சேன்.

படிச்சு முடிச்ச உடனேயே சென்னைக்கு வேலை தேடி போயிட்டேன். ஐ.டி பீல்டுல வேலை. அந்த வேலையில பெருசா இன்ட்ரஸ்ட் இல்லை. சொந்தமா பிசினஸ் செய்யணும்ங்கிறது தான் என்னோட ஆசை. அந்த நேரத்துலதான், “வெளிநாட்டுக்குப் போயி வேலை பாரு. அங்க சம்பாதிச்சப் பணத்தை வச்சு பிசினஸ் செய்ய லாம்னு” என் நண்பர்கள் ஐடியா கொடுத்தாங்க.

நான் முயற்சி செஞ்சேன். சிங்கப்பூர்ல வேலை கிடைச்சது. அங்க மூணு வருஷம் வேலை பார்த்தேன். குடும்பத் தேவைகள் போக கொஞ்சம் சேமிச்சு வச்சேன். சொந்த ஊருக்கு வந்ததும் அத வச்சு என்ன செய்ய லாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல தான் என் காலேஜ் ஃபிரண்ட் கோபிநாத்தை சந்திச்சேன். அவரு, ஆன்லைன் பிசினஸ் சம்பந்தமான பல ஐடியாக்களைக் கொடுத்தாரு. அவரு கொடுத்த ஐடியாவுல இருந்து உருவானது தான் சேவகன் ஆப். அந்த ‘ஆப்’பை டிசைன் செஞ்சு கொடுத்ததும் அவருதான்.

இந்த பிசினஸ்ல பெரும் பெரும் நிறுவனங்கள் எல்லாம் இருக்கிறப்ப, நாம் எப்படி ஜெயிக்க முடியும்னு யோசிச்சேன். ஆனா, வெளியூர்க் காரங்க நம்மூர்கள்ல வந்து தைரியமா இந்தத் தொழிலைச் செய்றப்ப, உள்ளூர்க்காரங்க நம்மாலயும் கண்டிப்பாக இதுல சாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கையோட தொடங்கினேன்.

மத்தவங்களுக்கு சர்வீஸ் செய்றதுக்குதான் நாம இருக்கோம்ங்கிற அர்த்தத்துல என் நிறுவனத்துக்கு ‘சேவகன்’னு பெயர் வச்சேன். கஷ்டப்படுகிற குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பையன்களை மொதல்ல வேலைக்கு எடுத்துக்கிட்டேன். 2020, அக்டோபர் மாசம் சொந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்தே இந்த பிசினஸை ஸ்டார்ட் பண்ணேன். என்னோட சேர்த்து மூணு பேரும் சேர்ந்து டெலிவரி பண்ண ஆரம்பிச்சோம்.

அந்த அக்டோபர் மாசம் மொத்தமாவே 17 ஆர்டர்தான் கிடைச்சது. அதுல எட்டு என் நண்பர்களோட ஆர்டர். இது நான் எதிர்பார்த்ததுதான். ஆனாலும், இவ்வளவு கம்மியா ஆர்டர் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

அதற்கப்புறம் கஷ்டமர்களை அதிகப்படுத்துறதுக்கான வேலையில இறங்குனேன். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டான்னு ‘சேவகன்’ ஆப் பத்தின கார்டு, மெசேஞ்சர், ஆஃபர்ன்னு போட்டு ஆப்பை இன்ஸ்டால் பண்ண வச்சேன். மக்கள்கிட்ட சேவகனைக் கொண்டு போய் சேர்க்க நண்பர்களும் ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க.

இதுக்கப்புறம் ஹோட்டல்களைத் தேடிப் போக ஆரம்பிச் சேன். சாப்பாட்டைச் சாப்பிட்டுப் பார்த்து ஹோட்டல்களைத் தேர்வு செஞ்சேன். ஆச்சி மெஸ், எஸ்.ஆர் பழமுதிர்ச்சோலை, மீட் அண்ட் ஈட்ன்னு நான் அப்ரோச் பண்ண எல்லாருமே நம்ம ஊர்க்காரர்னு சொல்லி எனக்கு ரொம்பவே ஊக்கம் கொடுத்தாங்க. அதோட மத்தவங்களுக்குக் கொடுக்கிற விலையோட கொஞ்சம் விலையும் கொறச்சே கொடுத்தாங்க. அதனால, எங்க கஷ்டமர்களுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிடுற விலைக்கே என்னால வீட்டுல டெலிவரி பண்ண முடிஞ்சது. அப்பவும் சரி, இப்பவும் சரி 16% வச்சு விற்கிறேன். சில ஹோட்டல்கள் கொஞ்சம் சலுகை கொடுத்தா அதை பிளாட் ஆஃபரா கொடுத்திடுவேன்.

பொதுவா, கஷ்டமர்ங்க விரும்புகிற சின்னச் சின்ன ஹோட்டல்கள் எல்லாம் மத்த ஆப்ல இருக்காது. ஆனா, நான் சின்னச் சின்ன ஹோட்டல்களையும் சேர்க்க ஆரம்பிச்சேன். தவிர, ஹோட்டல்களிலிருந்து உணவை மட்டும் கொண்டு போய் கொடுப்பதுடன் நின்றுவிடாமல், சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மட்டன், சிக்கன், வீட்டுக்குத் தேவையான சிறுதானிய திண்பண்டங்கள், பழங்கள் இயற்கை உணவுகள்னு பல விஷயங்களையும் ‘சேவகன்’ ஆப் மூலமா கொண்டு வந்து கொடுக்கிற மாதிரி செஞ்சேன். இப்படி பல புதுமையான விஷயங்களை செஞ்சதால, மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சது.

ஆன்லைன் ஆப்களுக்குப் போட்டி தரும் புதுக்கோட்டை ‘சேவகன்’!

அக்டோபர்ல கொஞ்சம் ஆர்டர் கம்மியா இருந்தாலும், அடுத்தடுத்த மாசங்கள்ல ஆர்டர்கள் அதிகமாக ஆரம்பிச்சது. இப்ப ஏழு பேரு வேலை பார்க்கிறார்கள். என்னோட சேர்த்து மொத்தம் எட்டு பேரு டெலிவரி பாய்ஸ் இருக்கோம். யாராவது ஒருத்தர் லீவு போட்டாலும் கூடுதலா ஒருத்தருக்கு பிரஷ்ஷர் ஆகிடும். அந்த சமயத்துல நானே டெலிவரி பாயாக மாறிடுவேன். நம்மளத் தேடி வர்ற ஒரு கஷ்டமரைக்கூட இழந்திடக் கூடாதுங்கிறதுல தெளிவா இருப்பேன். அதனால நான் முதலாளிங்கிற ஈகோ எல்லாம் பார்க்குறதில்ல.

இன்னைக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 ஆர்டர் வருது. ஒரு நாளைக்கு கொறஞ்சது 30 பேர்கிட்டயாவது பேசி, எங்க சர்வீஸ் பத்தி ஃபீட் பேக் வாங்கிடு வேன். ‘சேவகன்’ ஆப்ல கீழ க்ளிக் பண்ணியதும் என்னோட நம்பர்தான் இருக்கும். எனக்கு நேரடியா கால் பண்ணலாம்; வாட்ஸ்அப்பும் அனுப்பலாம். ஏதாவது புகார் வந்தா, உடனே அதை சரி செஞ்சுடுவேன்.

எங்களுக்கு வர்ற புகார்ல, பொதுவா ஹோட்டல் மேலதான் புகார் வரும். உடனே அவங் களுக்கு அதைத் தெரியப் படுத்துவேன். ஹோட்டல்காரங்க அந்தப் புகாரை சீரியஸா எடுத்து சரிபண்றாங்களான்னு ஃபாலோ பண்ணுவேன். நாங்க சொன்ன புகாரை அவங்க கண்டுக்கலன்னா, அந்த ஹோட்டலை ஆப்ல இருந்து எடுத்துடுவேன். அதே மாதிரி, எங்க சர்வீஸ் பாய்ஸ்களையும் நடத்துவேன். கஸ்டமர்கள்கிட்ட இருந்து அவங்களைப் பத்தி எந்த கம்ப்ளைன்டும் வரக்கூடாதுன்னு எதிர்பார்ப்பேன். அப்படி வந்தா உடனே ஆக்‌ஷன்தான்.

நாங்க கொடுக்குற சர்வீஸ்ல இன்னும் புதுசா ஏதாவது கொண்டு வரலாமான்னு யோசிப்பதான், ஃபிரஷ் மீன்களை சப்ளை செய்யலாம் என்கிற ஐடியா வந்துச்சு. இப்ப புதன் கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள்ல கட்டுமாவடி மொத்த மார்க் கெட்டில இருந்து ஃபிரஷ்ஷா மீன் வாங்கி வந்து வாடிக்கையாளர்கள் கிட்ட கொடுக்கிறோம். மீன் வாங்குறவங்க, ஒரு நாளைக்கு முன்னாலயே ஆர்டர் போட்டுரு வாங்க. அதனால மார்க்கெட்ல வியாபாரிகளுக்கு முன்னாலயே சொல்லிவச்சு, ஃபிரஷ் மீன் வாங்கித் தர்றோம்.

மீன் விற்பனை ரொம்ப நல்லா போயிக்கிட்டு இருக்கு. அதே மாதிரி, சிக்கன், மட்டன் கறி எல்லாமே வீடு தேடிப் போய்க் கொடுக்கிறதால, மக்கள் மத்தியில ரொம்ப சீக்கிரமா போய் சேர்ந் திட்டோம்னுதான் சொல்லணும்.

கடந்த ஒரு வருஷத்துல 30,000 ஆர்டர் வரையிலும் தந்திருக்கோம். 13,000-க்கும் அதிகமானவங்க எங்களோட ஆப்பை இப்ப இன்ஸ்டால் பண்ணியிருக்காங்க.

இப்ப புதுக்கோட்டையைத் தாண்டி, அறந்தாங்கிக்கு ‘சேவ கனை’க் கொண்டு போயிருக் கோம். அடுத்து, பட்டுக்கோட்டை, திருச்சியில ‘சேவக’னோட சேவையைத் தர்றதுக்கு வேலை நடந்துகிட்டு இருக்கு.

இதுவரைக்கும் நாங்க விளம்பரத்துக்குன்னு பெருசா செலவழிக்கலை. ஆப் விளம்பரத்துக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டான்னு சோஷியல் மீடியாவைத்தான் பயன்படுத்துறோம். ஆனா, நல்ல வருமானம் கிடைக்குது. ஒருத்தருக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையிலும் சம்பளம் கொடுக்கிறேன். அது இல்லாம ஒரு மேனேஜர் இருக்காரு. இதுலயிருந்து எங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைக்குது.

காய்கறியோ, பழமோ விவசாயிகள் உற்பத்தி பண்ற பொருளுக்கு அவங்க விலையே வைக்கிறதில்லை. அவங் களுக்கான பொருளுக்கு சரியான விலை கிடைக்கிறதில்லை. இடைத்தரகர்கள்கிட்ட போய் மக்களுக்குக் கிடைப்பதால, விவசாயிகளுக்கு லாபம் இல்லை.

இந்த நிலையை மாற்றி விவசாயிக்கும் மக்களுக்கும் இடையே ஆப் மூலம் இடைத்தரகராக இல்லாமல், பாலமாக இருந்து விவசாயிக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்யணும்ங்கிறதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை. அதற்கான முயற்சியிலதான் இறங்கியிருக்கேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும்.

நீங்க செய்ற தொழிலை நேர்த்தியா, சிறப்பா செஞ்சா போதும், உங்க போட்டியாளர்களைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டியதே இல்லை’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் சத்யராஜ்.