Published:Updated:

ரகுராம் ராஜன் முதல் நாராயண் வரை; ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் யார்? ஓர் அறிமுகம்

பொருளாதார ஆலோசனைக் குழு
பொருளாதார ஆலோசனைக் குழு

கவர்னர் உரையாற்றுபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகள் கூற ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அந்த ஐந்து பொருளாதார நிபுணர்கள் பற்றிய சிறு குறிப்பு இனி...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொருளாதார ஆலோசனைகள் வழங்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் இன்று முதல்முறையாகச் சட்டசபைக் கூடியது. கவர்னர் உரையுடன் தொடங்கியது இந்தக் கூட்டம். கவர்னர் உரையாற்றுபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகள் கூற ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அந்த ஐந்து பொருளாதார நிபுணர்கள் பற்றிய சிறு குறிப்பு இனி...

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: `சிங்காரச் சென்னை 2.0 முதல் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு வரை!’ -ஆளுநர் உரை ஹைலைட்ஸ்

டாக்டர் ரகுராம் ராஜன்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ரகுராம் ராஜன், டெல்லியில் பட்டப்படிப்பும், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தவர். உலக வங்கியின் மூத்த அதிகாரியாகப் பதவி வகித்தவர். 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்பதை முன்பே கண்டறிந்து சொன்னவர் இவர்தான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பிரதமரின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார். அதன்பின் ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதிகரித்து வந்த வங்கிகளின் வாராக் கடனைக் கட்டுப்படுத்த பல முக்கியமான நடவடிக்கைகள் எடுத்தார். 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நரேந்திர மோடி பிரதமராக வந்தபின், இவருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. 2016-ல் பணமதிப்பு நடவடிக்கையை மோடி எடுக்க நினைத்தபோது, அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார் ரகுராம் ராஜன். சுப்பிரமணியம் சுவாமியும், பா.ஜ.க அமைச்சர்களும் தொடர்ந்து தந்த நெருக்குதல் காரணமாக, அவருடைய பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் ரகுராம் ராஜன்.

டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன்

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், உலக வங்கியில் முக்கியமான பதவியை வகித்தார். உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் குறித்து சொல்லித் தருபவர். வளரும் நாடுகளின் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருபவர். ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராகத் தேர்வான பின்பு, மன்மோகன் சிங்குக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன்.

அரவிந்த் சுப்ரமணியனின்
அரவிந்த் சுப்ரமணியனின்

அடுத்த மூன்று ஆண்டுக் காலத்துக்கு அவர் அந்தப் பதவியை சிறப்பாகச் செய்து முடித்தார். அவருடைய பதவிக்காலம் முடிந்தபின்னும் அவரைத் தொடர்ந்து இருக்க வற்புறுத்தியது பா.ஜ.க அரசாங்கம். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் பஞ்சாப்பில் உள்ள பல்கலைக்கழகத்தின் உயர்பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். அந்தப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பிரதாப் பானு மேத்தா மத்திய அரசை விமர்சித்ததன் விளைவாகப் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாகத் தன் பதவியையும் ராஜினாமா செய்தார் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன்.

எஸ்தர் டஃப்லோ

பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்தர் டஃப்லோ, அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியாவிலும் உலகின் வேறு நாடுகளில் மிக முக்கியமான ஆய்வுகளை நடத்தி இருக்கிறார். இவரும் இவர் கணவர் அபிஜித் பேனர்ஜியும் இணைந்து வறுமை ஒழிப்பு தொடர்பாகச் செய்த ஆய்வுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழக அரசின் கூட்டத்தொடரில் உரையாற்றும் ஆளுநர்
தமிழக அரசின் கூட்டத்தொடரில் உரையாற்றும் ஆளுநர்

ஜீன் டிரெஸ்

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் டிரெஸ், இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இந்தியாவில் உள்ள ஸ்டாட்டிஸ்ட்டிக்கல் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த துறையில் ஆர்வத்துடன் செயல்படுபவரான ஜீன் டிரெஸ், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென்னுடன் இணைந்து வறுமை ஒழிப்பு குறித்து புத்தகம் எழுதியவர். டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பொருளாதார ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்தார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டுவந்து, கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவர்தான்.

எஸ்.நாராயண்

சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.நாராயண் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. 1965 முதல் 2004-ம் ஆண்டு வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் உயர்பதவி வகித்தவர். நிதி, தொழில் மற்றும் வர்த்தகத்துறை, எரிபொருள், விவசாயம், கப்பல் போக்குவரத்து, சாலைவசதி போன்ற பல்வேறு துறைகளில் தலைமை வகித்தவர். பல்வேறு அமைச்சரவையில் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்து தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்தவர் இவர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழுவில் உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்கள் இடம்பெற்றிருப்பது மிக முக்கியமான மாற்றம் என்றே கருதலாம்!

அடுத்த கட்டுரைக்கு