Published:Updated:

கூலர் பாக்ஸ் உற்பத்தியில் கலக்கும் பேராவூரணி! - கோடிக்கணக்கில் நடைபெறும் வியாபாரம்...

ENTREPRENEUR

பிரீமியம் ஸ்டோரி
ஞ்சாவூர் மாவட்டத்தின் பிரதான தொழிலே விவசாயம்தான். ஆனால், அண்மைக்காலமாக புதுப்புது தொழில்கள் உருவாகி, இந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றன. இந்த மாவட்டத்தின் கடைக்கோடி கிராமப் பகுதி என அனைவராலும் அறியப்பட்டது பேராவூரணி. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜூஸ் கூலர் பாக்ஸ் (கூல்டிரிங்க்ஸ் பெட்டி) இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் செல்வதன் மூலம் கோடிகணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது.

தென்னை விவசாயம் நிறைந்த பகுதி என்பதால், ஏராளமான கயிறு தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் பேராவூரணியில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு தொழில்கள் மூலம் பேராவூரணி வளர்ச்சியடைந்து வருவதால் இந்தப் பகுதி ‘குட்டி சிங்கப்பூர்’ என்றே பலராலும் அழைக்கப்படுகிறது.

பேரூராட்சித் தலைவர் தந்த தொழில்...

ஜெ.ஜெ சூப்பர் கூலர் பாக்ஸ் என்ற பெயரில் கூல்டிரிங்ஸ் பெட்டி உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் ராஜேந்திரனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘பேராவூரணியில் பேரூராட்சித் தலைவராக இருந்தவர் சுப்ரமணியன். இவர் ஐஸ் பேக்டரி நடத்தி வந்த நிலையில், கூலர் பாக்ஸ் வைத்து கூல்டிரிங்ஸ் கடையும் நடத்தினார். இதில் நல்ல வருமானம் வர அவரே கூல்டிரிங்ஸ் பெட்டியை சொந்தமாகத் தயார் செய்து பல இடங்களில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தினார். இதனால் முதன்முதலில் கூல்டிரிங்ஸ் பெட்டியை எங்க ஊருக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரராகவும் மாறினார்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

இவரைத் தொடர்ந்து பலரும் பல ஊர்களுக்குச் சென்று கூலர் பெட்டி அமைத்து புரூட் மிக்ஸர், லெமன், ஆரஞ்சு, கிரேப், மாம்பழம், பாதாம் பால் போன்றவற்றைத் தயார் செய்து ஜூஸ் பெட்டிக்குள் தனித்தனியாக அமைந்துள்ள சட்டியில் வைத்து குளிர்படுத்தி விற்பனை செய்யத் தொடங்கினர்.

ஃப்ரிட்ஜுக்கு மாற்றாக உருவானதே இந்த கூல்டிரிங்ஸ் பெட்டி. அரை டன் வெயிட் வரை இந்தப் பெட்டிக்குள் வைக்கலாம் என்பது இதன் சிறப்புகளில் ஒன்று. இந்தத் தொழிலில் ஈடுபட்ட பலரும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய, இதில் பலரும் தடம் பதிக்கத் தொடங்கினர். இதனால் கூலர் பெட்டிக்கான தேவை அதிகமானது. கூலர் பாக்ஸ் கிடைக்காமல் தொழிலைத் தொடங்கத் தாமதமாகிற சூழ்நிலையும் பலருக்கு உருவானது.

சினிமா துறையில் உதவி இயக்குநராக இருந்த நான், திருமணமானவுடன் கூல்டிரிங்ஸ் பெட்டிக்கு நல்ல கிராக்கி இருப்பதை உணர்ந்தது, அதில் நான் இறங்கினேன்.

1997-ல் ரூ.2 லட்சம் முதலீட்டில் கூலர் பாக்ஸ் தயார் செய்து கொடுக்கும் தொழிலைத் தொடங்கினேன். அப்போது ஒரு பெட்டி ரூ.50,000-க்கு விற்பனை யானது. நானும் தனியாக காஞ்சிபுரம் மற்றும் சென்னை தி.நகரில் ஜூஸ் கடை அமைத்தேன். பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது என்பதை உணர்ந்த பலர், இதில் காலடி எடுத்து வைத்தனர். எங்க ஊரைச் சேர்ந்த பலரும் சென்னை, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத் தின் பல மாவட்டங் களுக்கும் சென்று கூலர் பாக்ஸ் அமைத்து சொந்தமாக ஜூஸ் கடை நடத்தத் தொடங்கினர்.

கூலர் பாக்ஸ் உற்பத்தியில் கலக்கும் பேராவூரணி! - கோடிக்கணக்கில் நடைபெறும் வியாபாரம்...

குறைந்த முதலீடு, அதிக லாபம் என்பதை உணர்ந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் ஜூஸ் கடை தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் கூலர் பாக்ஸ் வாங்க பேராவூரணிக்குப் படையெடுத்தனர். இதனால் வியாபாரம் வேகமாக வளர்ந்து, கூல்டிரிங்ஸ் பெட்டிக்கான சந்தையாகவும் பேராவூரணி மாறியது.

தற்போது நான் கூல்டிரிங்ஸ் பெட்டியைத் தயார் செய்வதை சிறு தொழிற்சாலை போன்று நடத்தி வருகிறேன். கார்பெண்டர் உட்பட 30 பேருக்கு மேல் வேலை கொடுத்து வருகிறேன். என்னைப் போன்றே சிலர் பெரிய அளவிலும், சிலர் சிறிய அளவிலும் கூலர் பெட்டி தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் கூலர் பாக்ஸ் வாங்கிச் சென்று கூல் டிரிங்க்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இலங்கை போன்ற வெளிநாடு களுக்கும் செல்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

பெட்டி தயார் செய்வது எப்படி..?

செவ்வக வடிவில் அடிப்பகுதி, மேல் பகுதி என நான்கு பகுதியிலும் மரத்தினாலான சட்டத்தை அடித்துவிடுவோம். அதில் மேல் பகுதியில் ஜூஸ் ஊற்றி வைத்துக்கொள்வதற்கான சட்டி வைக்கும் வகையில் ரவுண்ட் ரவுண்டாக வட்ட வடிவிலான இடத்தை விட்டு விட்டு சுற்றிலும் பிளைவுட் வைத்து அடித்துவிடுவோம்.

அதன் மேல் சில்வர் ஷீட்டுல கவர் செஞ்சுடுவோம். பெட்டியுடன் ஜூஸைக் குளிர வைப்பதற்கான கம்பரஸரைப் பொறுத்தி, பெட்டியின் அடிப் பகுதியில் பைப் லைன் கொடுத்து அதன் வழியாக கூலிங் அனைத்து பகுதிக்கும் செல்லும் வகையில் வடிவமைத்துவிடுவோம். ஜூஸ் வைத்துக்கொள்வதற்கான சட்டி, மூடி, கரண்டி என அனைத்தையும் சில்வரில் தனியாகத் தயார் செய்து பெட்டியில் அமைக்கப் பட்டுள்ள குழியில் வைத்து விடுவோம்.

இப்படிதான் தயாராகிறது கூல்டிரிங்ஸ் பெட்டி. நாங்க பெட்டியை விற்பனை செய் வதுடன், நாங்களே சம்மந்தப் பட்ட இடத்துக்குச் சென்று தயார் செய்து தந்துவிடுவோம். இதில் முக்கியமான விஷயம், சட்டி வைக்கப்படும் பெட்டியின் அடிப்பகுதிக்குள் உப்பு நீர் ஊற்றக்கூடிய அளவில் இடம் இருக்கும். ஒரு பெட்டிக்கு சுமார் 400 லிட்டர் தண்ணீரில் உப்பு கலந்து ஊற்றிவிடுவோம். இரு இடத்தின் வழியாக ஊற்றப்படும் உப்பு நீர் சட்டி இருக்கிற அடிபகுதிக்குச் செல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

கூலிங் நீண்ட நேரம் நீடிக்கவும், கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் கிருமி நாசினியாகச் செயல்படவே உப்பு நீரைப் பயன்படுத்தி வருகிறோம். நான்கு சட்டிகள் கொண்டது தொடங்கி 12 சட்டி வரையிலான கூலர் பாக்ஸ் தயார் செய்கிறோம். பெட்டியில் ஸ்டோரேஜ் செய்துகொள்ள எனச் சிறிய அறையும் உள்ளது. மேலும், கஸ்டமர்களின் தேவைக்கேற்ப செய்து தருகிறோம்.

சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இவை தயார் செய்யப்பட்டாலும் தரம், துல்லியம், விலை போன்ற காரணங்களால் எங்க ஊர் கூலர் பெட்டிக்கு மவுசு அதிகம். அதனால்தான் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு மணி நேரம் ஓடினால் போதும் சுமார் 15 மணி நேரம் வரை கூலிங் தாங்கும் தன்மை கொண்டது.

மூன்று மாதத்தில் லாபம் நோக்கி...

கரன்ட் செலவும் அதிகமிருக்காது.10 வருடத்துக்கு எந்தப் பராமரிப்பு செலவும் இருக்காது. சீஸன் நேரமாக இருந்தால், இதில் போடுகிற முதலீட்டை மூன்று மாதத்திலேயே எடுத்துவிடலாம்.எளிய தொழில், ஜூஸ் தயார் செய்வதும் கஷ்டம் கிடையாது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு கூல்டிரிங்க்ஸ் பெட்டி அமைத்து ஜூஸ் கடை போட்டால் போதும், சொல்லிக்கொள்கிற மாதிரியான லாபம் நிச்சயம் கிடைக்கும்.

ஒரு பெட்டி ரூ.75,000 - ரூ.1.25 லட்சம் வரை விற்பனையாகிறது. இந்த கூல் டிரிங்க்ஸ் தொழில் பலரை இன்றைக்கு கோடீஸ்வரனாக மாற்றியிருக்கிறது. ரூ.2 லட்சத்தில் தொடங்கிய தொழில் இன்றைக்கு ரூ.25 லட்சம் முதலீட்டில் வெற்றிகரமான வளர்ச்சியை அடைந்து உள்ளது. அனைத்துச் செலவு போக மாதம் ரூ.2 லட்சம் லாபம் கிடைக்கிறது.

பேராவூரணியைச் சேர்ந்த சுமார் 10,000 குடும்பங்கள் இந்தத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் கூல்டிரிங்ஸ் தொழில் கைகொடுத்திருக் கிறது’’ என்றார்.

ஒரு தொழில் ஒரு ஊரையே முன்னேற்றி விடும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேண்டுமா?

பிட்ஸ்

2021-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்து இருக்கிறது. கோவிட்-19 காரணமாக ஜப்பான் பொருளாதாரம் பாதிப்பு அடைந்திருப் பதைத் தொடர்ந்து ஜப்பான் அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு