Published:Updated:

ரஜினி கேட்ட சொத்து வரி விலக்கு சரியா... அரசிடம் சாதாரண வணிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?

ரஜினி
ரஜினி

நியாயமாக பார்த்தால், சமானியர்களைப் போலவே அவரும் சொத்து வரி விலக்கு கேட்டிருக்கிறார். ஆனால், நீதிமன்றம் சொன்னபடி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவகாசம் அளித்து, அவர்களிடம் தள்ளுபடி உண்டா, இல்லையா என்பதைத் தெரிந்தபின் வழக்கு தொடந்திருந்தால் பிரச்னையே வந்திருக்காது.

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, மத்திய அரசு நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் பொது முடக்கத்தை அமல்படுத்தியது. இதனால் திருமண மண்டப உரிமையாளர்களும், வாடகைக்கு கடை எடுத்து வியாபாரம் செய்யும் வணிகர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடைகளும், மண்டபங்களும் மூடி இருந்ததால் வருமானம் இல்லாமலும், கடைக்கு வாடகை கொடுக்க முடியாமலும் அவதிப்பட்டார்கள். இந்நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த், சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு சர்ச்சையானது.

ரஜினி என்ன கேட்டார்?

மார்ச் பிற்பாதியில் இருந்து செப்டம்பர் வரை திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த முடியாத அளவிற்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் அரசு விதித்தது. அத்துடன் திருமண மண்டபத்திற்கு புக்கிங் செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் ஆறு மாதங்களாக திருமண மண்டபங்கள் பூட்டிக் கிடந்தன. யாருக்கும் வருவாய் இல்லை. ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்திற்கும் வருவாய் இல்லை. இதன் காரணமாகவே அவர் வரி தள்ளுபடி கேட்டு மனு தாக்கல் செய்தார்.

நியாயமாக பார்த்தால், சமானியர்களைப் போலவே அவரும் சொத்து வரி விலக்கு கேட்டிருக்கிறார். ஆனால், நீதிமன்றம் சொன்னபடி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவகாசம் அளித்து, அவர்களிடம் தள்ளுபடி உண்டா, இல்லையா என்பதைத் தெரிந்தபின் வழக்கு தொடந்திருந்தால் பிரச்னையே வந்திருக்காது. ஆனால் உடனே வழக்கு தொடர்ந்ததுதான் பிரச்னை ஆனது.

``ரஜினி பிரபலம் என்கிற கண்ணோட்டத்தில்தான் பலரும் இதை அணுகுகிறார்கள். அவரிடம் பணம் இருக்கிறது அல்லது இல்லை என எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் அவரைப் போல பலர், கொரோனா நோய் தொற்று பரவலால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே, கடந்த மார்ச் மாதத்திலிருந்து இன்று வரையும் நிதிச்சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக அரசாங்கம் வரி விலக்கை அமல்படுத்தலாமே" என்பதுதான் பலருடைய ஆதங்கம்.

அழகுராமன்
அழகுராமன்
சொத்து வரி விவகாரம்: `தவறைத் தவிர்த்திருக்கலாம்; அனுபவமே பாடம்!’- ரஜினி

இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமனிடம் பேசினோம். ``ரஜினி மிகப்பெரிய சினிமா பிரபலம். அவரிடம் சொத்துகள் நிறைய இருக்கின்றன, காசு பார்ட்டி... இப்படி இருக்கும்போது எதற்காக சொத்து வரியில் விலக்கு கேட்டு வழக்கு தொடர வேண்டும்?" என்பதுதான் பலருடைய பார்வை. இந்த விஷயத்தை நாம் அப்படி அணுகக் கூடாது. அவர் ஒரு மண்டப உரிமையாளர். அதன் மூலம் வருமானம் இல்லாதபோது, நஷ்டம் ஏற்படும்போது மாநகராட்சியை அணுகி சலுகைகளை வேண்டுவதில் தவறில்லை.

ஆனால், கொரோனா பேரிடர் காலத்திலும், அவருடைய மண்டபம் இருக்கும் இடத்துக்கான சாலை வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி என அனைத்தும் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. சொத்துக்களின் மீது போடப்படும் வரியைக் கொண்டுதான், இந்த சேவை சார்ந்து வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் முதல் அனைத்துச் செலவுகளும் செய்யப்படுகின்றன. அப்படியிருக்கும்போது ரஜினி சொத்து வரியைக் கட்ட முடியாது என வழக்கு தொடர்ந்ததை நியாயப்படுத்த முடியாது. இதைப் புரிந்துகொண்டதாலேயே, பின்னர் அவருடைய வழக்கை அவர் வாபஸ் பெற்றுக் கொண்டார்" என்றவர், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் மண்ட உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பேசினார்.

ஆம்னி பேருந்து நிலையம் - மதுரை
ஆம்னி பேருந்து நிலையம் - மதுரை
Representational Image

``ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக பேருந்துகள் ஓடாத நிலையில் சாலை வரியைத் தள்ளுபடி செய்ய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத சாலை வரிக்கு தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் தனது பேருந்து சேவையை அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

வியாபாரிகளும், மண்டப உரிமையாளர்களுக்கும் இதுமாதிரியான வரிச் சலுகைகளை கொடுக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். பேரிடர் காலங்களில், கடை நடத்த முடியாமல் போனால், வியாபாரம் தடைபட்டால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி விஷயங்களில் சலுகை பெறலாம் என `பேரிடர் மேலாண்மைச் சட்டம்' சொல்கிறது. ஆனால், அந்த சட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசாங்கங்கள் அவசரச் சட்டம் பிறப்பித்து, அரசாணை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடாதவரை யாரும் சலுகையை பெற முடியாது.

ராகவேந்திரா மண்டப சொத்துவரி விவகாரம்: நீதிபதி எச்சரிக்கை - பின்வாங்கிய ரஜினி தரப்பு!

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்டிரா ஆகியவை, கொரோனா காலங்களில் மூடி வைக்கப்பட்டிருந்த கடைக்கான மூன்று மாத வாடகையை கொடுக்கத் தேவையில்லை என அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், தமிழக அரசு அதுமாதிரியான எந்தவொரு சலுகைகளையும் வியாபாரிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. வரிச் சலுகைகளை வழங்க பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அதிகாரம் இருந்தும் தமிழக அரசு முன்வந்து செய்யாமல் இருப்பது வருந்தத்தக்க விஷயம்தான்" என்றார்.

மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட சில வியாபாரிகளிடம் பேசினோம். முதலில் சென்னையைச் சேர்ந்த சிவசுப்ரமணியன், ``நான் வேளச்சேரியில் பெரிய அளவில் மூன்று பேக்கரிகளை நடத்தி வருகிறேன். ஒவ்வொரு கடைக்கும் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வாடகை மட்டுமே கொடுக்க வேண்டும். இது தவிர, இதர செலவுகளும் இருக்கின்றன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏப்ரல் மாதத்திலிருந்து ஐந்து மாதங்கள் கடைகள் மூடப்பட்டிருந்தன. வருமானம் சுத்தமாக இல்லை. ஆனால், வாடகை மட்டும் கொடுக்க வேண்டும் எனக் கடையின் உரிமையாளர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலை எனக்கு மட்டும் இல்லை. என்னைப் போன்ற பலருக்கும் ஏற்பட்டது. எங்களுடைய சங்கம் சார்பாக தமிழக அரசுக்கு மனு கொடுத்திருக்கிறோம். ஆனால், அந்த மனுவை இன்னும் அரசு பரிசீலித்ததாக தெரியவில்லை. எங்களுடைய இந்த நிதிச் சிக்கலுக்கு அரசுதான் தீர்வு தர வேண்டும்" என வருத்தத்துடன் தெரிவித்தார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அடுத்ததாக கோவையில் ஹோட்டல் வைத்து நடத்திவரும் சண்முகத்திடம் பேசினோம். ``நான் கடந்த 10 வருடங்களாக ஹோட்டல் பிசினஸில் இருக்கிறேன். நிறைய பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இதுமாதிரியான நிதிச்சிக்கலில் சிக்கியதே இல்லை. கொரோனா எங்களைப் போன்ற வியாபாரிகளின் வாழ்க்கையில் கோர தாண்டவத்தை ஆடியிருக்கிறது. இதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்றே தெரியவில்லை. கொரோனா பேரிடர் காலத்தில் ஹோட்டல் மூடியிருந்ததால், கடை வாடகை பாக்கி மட்டுமே 5.5 லட்சம் ரூபாய் இருக்கிறது. அரசு கை கொடுத்தால்தான், நாங்கள் கரையேற முடியும்" என்றார்.

இந்த வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை சீர்தூக்கி அவர்களுக்கு முடிந்த உதவியை தமிழக அரசு செய்ய முன்வரவேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு!

அடுத்த கட்டுரைக்கு