Published:Updated:

`முதல்முறையாக நிதி ஆண்டை மாற்றியமைத்த ஆர்.பி.ஐ!’ -பின்னணி என்ன தெரியுமா?

ஆர்.பி.ஐ
ஆர்.பி.ஐ

இந்த அறிவிப்பின் மூலம் ஆர்.பி.ஐ எட்டு தசாப்தங்களாகக் கடைப்பிடித்த தனது நிதியாண்டு திட்டத்தை முதல் முறையாக மாற்றியமைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி தனது நிதி ஆண்டை இந்திய அரசின் நிதி ஆண்டுக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்துள்ளது. பொதுவாக அரசின் நிதியாண்டானது ஏப்ரல் 1-ம் தேதி ஆரம்பித்து மார்ச் 31-ம் தேதி முடியும். ஆனால், ரிசர்வ் வங்கியின் நிதியாண்டானது ஜூலை 1-ம் தேதி ஆரம்பித்து அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி முடிவடையும். தற்போது வரை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் டி ப்ளஸ் ஒன் (T plus one) என்கிற திட்டத்தைத்தான் பின்பற்றி வருகின்றன.

`ரிசர்வ் பேங்க் வார் ரூமில் என்ன நடக்கிறது தெரியுமா?' #RbiWarroom

இந்தத் திட்டத்தைப் பின்பற்றும்போது நிதியாண்டானது தொடர்ந்து இரண்டு வருடத்துக்கு இருக்கும். ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி பிப்ரவரி மாதம் நடந்த தனது கூட்டத்தில் நிதியாண்டை மாற்றி அமைக்கப்போவதாக அறிவித்தது. அதன்படி, ரிசர்வ் வங்கியின் 2019-2020 நிதியாண்டானது நடப்பு ஆண்டில் ஜூன் 30-ம் தேதிதான் முடியும்.

அடுத்த நிதியாண்டான 2020-2021 ஜூலை 1, 2020 ஆரம்பித்து மார்ச் 31, 2021-ல் முடியும். இதனால் ரிசர்வ் வங்கியின் கணக்கு வழக்குகளைப் பராமரிக்கும் வழிமுறையும் மாறும். மேலும், இவ்வாறு நிதியாண்டை அரசுக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைப்பதால் இடைக்கால ஈவுத் தொகையையும் (interim dividend) தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த அறிவிப்பின் மூலம் ரிசர்வ் வங்கி எட்டு தசாப்தங்களாகக் கடைப்பிடித்த தனது நிதியாண்டு திட்டத்தை முதல்முறையாக மாற்றியமைத்துள்ளது. 1935-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி 1940-க்கு முன் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை தனது நிதியாண்டாக அமைத்து செயல்பட்டது. பின்னர் 1940-ல் ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரை தனது நிதியாண்டாக மாற்றியது.

நிதியாண்டை மாற்றி அமைப்பதாக முன்னாள் கவர்னர் பிமால் ஜலான் தலைமையிலான குழு முடிவெடுத்தது. இதன்மூலம் இடைக்கால ஈவுத் தொகையைக் குறைவாகக் கட்டலாம். மேலும், அசாதாரண சூழலில் மட்டுமே இந்தத் தொகையைக் கட்டினால் போதும் என்றது பிமால் ஜலான் குழு. இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ``நிதி ஆண்டை மாற்றி அமைத்துள்ளதால் ரிசர்வ் வங்கி 2020 -2021க்கான ஒன்பது மாத கால இருப்பு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும். அடுத்த ஆண்டு முதல் ஏப்ரல் 1, 2021-ல் நிதியாண்டு தொடங்கும்" என்றார்.

சக்தி காந்ததாஸ்
சக்தி காந்ததாஸ்
பணப்புழக்கத்தை அதிகரிக்க, அரசாங்கப் பத்திரங்களை வாங்க முடிவு! - ரிசர்வ் வங்கி அதிரடி

இவ்வாறு அரசுக்கு ஏற்றாற்போல் நிதியாண்டை மாற்றி அமைப்பதால் பட்ஜெட் திட்டத்தை வகுக்கும்போது தேவையான பண மதிப்பீடு அளவுகளை ரிசர்வ் வங்கியால் அரசுக்கு தெரிவிக்க முடியும். இதன்மூலம் அரசால் சரியான முறையில் பட்ஜெட் திட்டத்தை வகுக்க முடியும்.

இந்தப் புதிய நிதியாண்டு நடைமுறை மூலம் இடைக்கால ஈவுத் தொகையை அரசு கேட்கும்போதெல்லாம் ரிசர்வ் வங்கி செலுத்த வேண்டிய தேவை இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நிதியாண்டான 2018-2019ல் மட்டும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 28,000 கோடி ரூபாயை இடைக்கால ஈவுத்தொகையாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு