Published:Updated:

கொரோனாவால் வெகுவாகக் குறைந்த குடும்ப நிதி சேமிப்பு; பொருளாதாரம் இன்னும் ஆட்டம் காணுமா?

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இந்தியர்களின் குடும்ப நிதி சேமிப்பு இந்த கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியர்களின் குடும்ப நிதி சேமிப்பு இந்த கொரோனா நோய் தொற்றுக் காலகட்டத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குடும்ப நிதி சேமிப்பு என்பது மக்கள் தமது சேமிப்புக் கணக்குகள், காப்பீடு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட்கள் போன்றவற்றில் மொத்தமாக சேமிக்கும் தொகையைக் குறிப்பதாகும். இந்த வீட்டு நிதி சேமிப்பு ஆனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணிசமான பங்கைக் கொண்டது.

Money
Money
Photo by Disha Sheta from Pexels
ரிசர்வ் வங்கி சந்திக்கும் முப்பரிமாண சவால்கள்... என்னதான் தீர்வு? திரிசங்கு சிக்கலில் பொருளாதாரம்

சேமிக்கும் பழக்கம் என்பது நமது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியதாக இருக்கிறது. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் இது போன்று மக்கள் சேமிக்கும் பழக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதாக உள்ளது. இதன் காரணமாகத்தான் பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகப் பல நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டாலும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருந்து வருகிறது.

ஆனால், கொரோனா நோய்த்தொற்று மக்களின் பல ஆண்டுகள் சேமித்த தொகைக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது. இதைத் தற்போது ரிசர்வ் வங்கியின் தரவுகள் உறுதி செய்கின்றன.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் நாட்டின் ஜி.டி.பி-யில் 21 சதவிகிதமாக இருந்த வீட்டு நிதி சேமிப்பு, செப்டம்பர் காலாண்டில் 10.4 சதவிகிதமாகக் குறைந்தது. அது டிசம்பர் காலாண்டில் 8.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சென்ற ஜூன் காலாண்டில் ரூ.8,15,886 கோடியாக இருந்த வீட்டு நிதி சேமிப்பு செப்டம்பர் காலாண்டில் ரூ.4,91,906 கோடியாகவும், டிசம்பர் காலாண்டில் ரூ. 4,44,583 கோடியாகவும் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by energepic.com from Pexels

பங்குச் சந்தை குறியீடுகள் கொரோனா ஊரடங்கு அறிவித்த ஏப்ரல் மாதம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டாலும் குறுகிய காலத்தில் மீண்டது. இதன் மூலம் பெரு நிறுவனங்கள் கணிசமாக லாபம் அடைந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இரண்டாவது ஊரடங்கு காலகட்டத்தில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கியதால் நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு மாறாக ஊரடங்கு காரணமாக சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இதுபோன்ற தரவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், ஊரடங்கு காலகட்டத்தில் கார் உற்பத்தி செய்யும் பெருநிறுவனங்கள் இயங்கின. ஆனால், பஞ்சர் போடும் சிறு கடைகள் ஊரடங்கு காலகட்டத்தில் மூடப்பட்டன. தொடர் ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. மேலும், உலக வங்கியின் உதவியுடன் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளும் இந்தியாவில் ஏழை மக்களின் எண்ணிக்கை மிக அதிக சதவிகிதத்தில் உயர்ந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

மேலும் பணவீக்க விகிதம் கடந்த ஆறு மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. எரிபொருள் விலை என்பது அனைத்துப் பொருள்களின் விலைவாசி உடன் நெருங்கிய தொடர்பு உடையது ஆகும். அதனால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பணவீக்க விகிதத்தை மிக அதிக அளவு உயர்த்தி விடுகிறது. கடந்த 6 மாதங்களில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் பொருள்களின் விலை 50 சதவிகிதம் வரை உயர்ந்து விட்டது. எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களில் இருந்து கட்டுமான பொருள்கள் வரை விலைவாசி உயர்ந்துவிட்டது. ஒரு பக்கம் ஊரடங்கு காரணமாகப் பணவரவு குறைவது மற்றும் மற்றொரு பக்கத்தில் மிக அதிகமான விலைவாசி ஏற்றம் காரணமாக மக்களின் சேமிப்பு குறைந்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கியின் தரவுகள் மூலம் நம்மால் உணர முடிகிறது.

Money (Representational Image)
Money (Representational Image)
Photo by Karolina Grabowska from Pexels
பொருளாதாரம் - காத்திருக்கும் சவால்கள்  - “மீண்டும் ஓர் ஊரடங்கு வேண்டாம்!”

ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் சில நாடுகளில் ஏழை பணக்காரர்க்கு இடையே உள்ள விகிதாசாரம் பொதுவாக மிக அதிக அளவில் இருக்கும். அவ்வாறு இருப்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றுவிடும். மக்களின் சேமிக்கும் பழக்கம் குறைவது ஒரு எச்சரிக்கை செய்தியாகவே பார்க்கப் பட வேண்டியதாக உள்ளது.

அரசு போர்க்கால அடிப்படையில் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் முயற்சி எடுக்க வேண்டும். அதுதான் நமது நாட்டை வளமான நாடாக ஆக்குவதற்கு உதவும். இதை அரசு விரைவாகச் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு