யு.பி.ஐ (UPI) என சுருக்கமாக அழைக்கப்படும் யுனைட்டெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் உதவியுடன் ஸ்மார்ட் போன்கள் மூலம் பணம் செலுத்தும் முறை தற்போது இந்தியாவில் அதிவேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவில் ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் UPI மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
ஆனால், இந்தியாவில் Feature Phone எனும் கீபேட் கொண்ட பேசிக் மாடல் போன்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில், கீபேட் போன்களைப் பயன்படுத்தும் மக்களும் UPI பயன்பாட்டை உபயோகிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது, ரிசர்வ் வங்கி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கீபேட் போன் வாடிக்கையாளர்கள் பயன்படும் வகையில் புதிய அம்சங்கள் கொண்ட தனித்துவமான `123PAY' யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் கீபேட் போன் உபயோகிக்கும் 40 கோடி நபர்களால் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இதன்மூலம் ஒரு பில்லியன் சில்லறை பணப் பரிவர்த்தனைகளைக் கூடுதலாக செயல்படுத்தபடுத்த இந்த தொழிநுட்பம் உதவும்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறிப்பாக, கிராமப்புற மக்கள் இப்போது UPI சேவைகளை அணுக முடியும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
இதன்மூலம், கீபேட் போன் பயனர்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டு பேசுவது (interactive voice call ), பேசிக் மாடல் மொபைல்களில் UPI-க்கான ஆப் வசதிகளைக் கொண்டுவருவது, தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பது, அருகிலிருக்கும் மொபைல்களுக்கு ஒலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது.

இது குறித்த விவரங்களை விரிவாக தெரிந்துகொள்ள பயனர்கள் www.digisaathi.info என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது டிஜிட்டல் பணம் செலுத்துவது தொடர்பான குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 14431 மற்றும் 1800 891 3333 என்ற எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இனி கீபேட் போன் வைத்திருப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்து பணம் அனுப்ப முடியும் என்பது மிகப் பெரிய முன்னேற்றம்தான்!