Published:Updated:

`மல்லையா உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் ரூ.68,607 கோடி வாராக்கடன் தள்ளுபடி’ -ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்

Reserve Bank of India
Reserve Bank of India

அந்தப் பட்டியலில் மெகுல் சோக்‌ஷி, ஜுன்ஜுன்வாலா, விஜய் மல்லையா மற்றும் பாபா ராம்தேவின் ருச்சி சோயா உள்ளிட்ட 50 வாராக்கடன்தாரர்களின், ரூ.68,607 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கடனைத் திருப்பிச்செலுத்துமளவுக்கு சொத்து மதிப்பு இருந்தும் திரும்பச்செலுத்தாமல் வாராக்கடன் வைத்திருப்பவர்களை 'வில்ஃபுல் டீஃபால்ட்டர்' என்பார்கள். இப்படியான டாப் 50 வாராக்கடன் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் சாதித்தார்.

நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி
நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி
vikatan

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை, சாகேத் கோகலே என்ற சமூக ஆர்வலர் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, 2019, செப்டம்பர் 30 ஆம் தேதிவரை, டெக்னிகலாகக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 50 தொழிலதிபர்களின் பட்டியலை அளித்தது. அந்தப் பட்டியலை சாகேத் கோகலே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டு அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.

அந்தப் பட்டியலில் மெகுல் சோக்‌ஷி, ஜுன்ஜுன்வாலா, விஜய் மல்லையா மற்றும் பாபா ராம்தேவின் ருச்சி சோயா உள்ளிட்ட 50 வாராக்கடன்தாரர்களின், ரூ.68,607 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கணக்கியல்ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,578 மோசடி செய்ததில் தொடர்புடைய மெகுல் சோக்‌ஷியின் ரூ.5,492 கோடி வாராக்கடன் அடக்கம். இவர் தற்போது ஆண்டிகுவா நாட்டில் சொகுசாக செட்டிலாகி இருக்கிறார். பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்குச் சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தின் ரூ.2,212 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவின் ரூ.1943 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோட்டோமேக் நிறுவனத்தின் ரூ.2,850 கோடியும், ஆர்.இ.ஐ அக்ரோ நிறுவனத்தின் ரூ.4,314 கோடியும், வின்சம் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் ரூ.4,076 கோடியும், குடோஸ் கெமிக்கல் நிறுவனத்தின் ரூ.2,326 கோடியும் இந்தத் தள்ளுபடியில் அடங்கும். இப்படி மிகப்பெரிய அளவில் வாராக்கடன் வைத்துள்ள 50 பேரின், ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார்கள்.

டெக்னிகலாகத் தள்ளுபடி செய்வது குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ் கூறுகையில், "இனி இவர்களிடமிருந்து வசூலிக்கவே முடியாது என்று கருதும்போது, அத்தகைய வாராக்கடன் தொகைக்கணக்கை ஒவ்வோர் ஆண்டும் கணக்கில் வைத்துக்கொண்டே இருப்பது வங்கிகளுக்குச் சிரமம். வாராக்கடன் தொகைக்கு ஏற்ப புரவிஷன் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையில் வங்கிகள் இருக்கும்சூழலில், இனி வசூலிப்பதற்கு வாய்ப்பே இல்லை எனக்கருதும் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார்கள்.

தாமஸ் ஃப்ரான்கோ
தாமஸ் ஃப்ரான்கோ
vikatan

விஜய் மல்லையாவின் சொத்துக்கள் பெங்களூரில் நிறைய இருக்கின்றன. ஆனால், அவற்றை அவரின் மகன் பெயருக்கு மாற்றியுள்ளார். அவருடைய நிறுவனத்திலிருந்தே அவரது பங்கு மதிப்பைக் குறைத்து அந்த நிறுவனத்தை முடக்க முடியாதபடி செய்துள்ளார். இப்படி ஒவ்வொரு வாராக்கடன்களிலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து சொத்துக்களைக் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தக் கடன்களை ஒப்புக்கு ஒவ்வோர் ஆண்டும் கணக்கில் வைத்திருக்காமல் டெக்னிகலாகத் தள்ளுபடி செய்துள்ளார்கள். இந்த வாராக்கடன்களுக்கான சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் எனக்கூறப்பட்டாலும் அது சாத்தியமில்லாததாகவே இருக்கும். எனவே, நம் சட்டதிட்டங்களில்தான் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்" என்றார்.

தற்போது இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், "வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துள்ள 50 முன்னணி தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்காமல் நிதி அமைச்சர் மெளனம் சாதித்தார். தற்போது வெளிவந்துள்ள பட்டியலில் பா.ஜ.க வின் நண்பர்களான நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காகத்தான் மெளனமாக இருந்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டு, தான் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ இணைப்பையும் வெளியிட்டுள்ளார்.

நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி, விஜய் மல்லையா போன்றோரை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவர்களின் சொத்துக்கள் கைப்பற்றப்படும் என்றும் கூறப்பட்ட சூழலில், அவர்களின் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ள விவகாரம், அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்போதும் செயல்பாட்டில்தான் உள்ளது. எனினும் ருச்சி சோயா நிறுவனத்தின் வாராக்கடனைத் தள்ளுபடி செய்துள்ளதும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா பரவலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். மாநில அரசுகளும் நிவாரணப்பணிகளுக்காக மத்திய அரசின் உதவியைத் தொடர்ந்து கேட்டுவருகிறார்கள். இத்தகைய சூழலில், வங்கி மோசடி செய்துள்ளவர்களின் கடன்களை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்திருப்பதாக வெளியான தகவல் நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு