Published:Updated:

அடுத்த ரவுண்டுக்குத் தயாரான முகேஷ் அம்பானி... ₹5,550 கோடி முதலீட்டை ஈர்த்த ரிலையன்ஸ் ரீடெய்ல்!

 முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திரட்டிய நிதியின்போதே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீட்டாளர்கள், இந்நிறுவனத்தின் மீது அபார நம்பிக்கையை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ரிலையன்ஸ் ஜியோ உலக அளவில் திரட்டிய நிதி குறித்து, சில மாதங்களுக்கு முன்பு வரை பலராலும் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காலத்திலும், ரூ.1.50 லட்சம் கோடி நிதியைத் திரட்டியதால், இன்னமும் முகேஷ் அம்பானி டிரண்டிங்கில் இருந்துகொண்டிருக்கிறார்.

இது ஒறுபுறம் இருக்க, ஜியோவைப் போலவே, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துக்கும் அந்நிய நேரடி முதலீடுகளைத் திரட்ட ஆரம்பித்திருக்கிறார் முகேஷ். இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்த நிறுவனத்தின் மீது சில்வர் லேக் நிறுவனம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. தற்போது அமெரிக்காவின் கே.கே.ஆர் நிறுவனமும் ரூ.5,550 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் 1.28% பங்குகளை கே.கே.ஆர் நிறுவனம் வாங்குகிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ்
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ்

இது இந்த மாதத்திலேயே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின், சில்லறை வர்த்தகப் பிரிவில் வந்துள்ள இரண்டாவது முதலீடாகும். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக மாறியிருக்கிறது. இதன் கிளைகள் 7,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் 12,000 மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், அதன் சில்லறை வர்த்தகத்தை இன்னும் மேம்படுத்துவதற்கு உலகளாவிய முதலீட்டாளர்களை ரிலையன்ஸ் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் 15 - 20% பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.80,000 கோடி வரை நிதி திரட்ட ரிலையன்ஸ் நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதோடு சுமார் 10 வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் முதலீடு செய்தது குறித்து கே.கே.ஆரின் இணை நிறுவனர் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹென்றி கிராவிஸ், "ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் புதிய வர்த்தக தளம், நுகர்வோர் மற்றும் சிறு வணிகங்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்துவருகிறது. இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனையாளராக மாறுவதற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ், சில்லறை விற்பனையை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார்.

Reliance
Reliance

ஜியோ நிறுவனம் திரட்டிய நிதியின்போதே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீட்டாளர்கள், இந்நிறுவனத்தின் மீது அபார நம்பிக்கையை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். முகேஷ் அம்பானியின் முடிவுகள் நிச்சயமாக நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் என நினைப்பதே அதற்கு மிக முக்கியக் காரணமாகும். இதனால் இந்நிறுவனத்தின் பங்குகளில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். கே.கே.ஆர் நிறுவனத்தின் அறிவிப்புக்குப் பிறகு, 23-ம் தேதி வர்த்தக முடிவில், பங்கு விலை 19.65 ரூபாய் அதிகரித்து 2230.80 ரூபாய்க்கு வர்த்தகமானது.

அடுத்த கட்டுரைக்கு