Published:Updated:

"`நான் ரத்தன் டாடா பேசுகிறேன்!' ஒரு போன் காலில் தலையெழுத்து மாறிவிட்டது!"- சுவாரஸ்யம் பகிரும் தம்பதி

ரத்தன் டாடாவுடன் அதிதி மற்றும் சேதன்

"நான் ரத்தன் டாடா பேசுகிறேன்..." ஆன்லைன் மூலம் டீசல் டெலிவரி செய்யும் நிறுவனத்தின் தலையெழுத்தை மாற்றிய அந்த போன் கால்! சுவரஸ்யம் பகிரும் தம்பதி.

"`நான் ரத்தன் டாடா பேசுகிறேன்!' ஒரு போன் காலில் தலையெழுத்து மாறிவிட்டது!"- சுவாரஸ்யம் பகிரும் தம்பதி

"நான் ரத்தன் டாடா பேசுகிறேன்..." ஆன்லைன் மூலம் டீசல் டெலிவரி செய்யும் நிறுவனத்தின் தலையெழுத்தை மாற்றிய அந்த போன் கால்! சுவரஸ்யம் பகிரும் தம்பதி.

Published:Updated:
ரத்தன் டாடாவுடன் அதிதி மற்றும் சேதன்
ரெபோஸ் எனர்ஜி என்ற நிறுவனம் வாகனங்களுக்குத் தேவையான டீசலை ஆன்லைன் ஆப் மூலம் டெலிவரி செய்து வருகிறது. மகாராஷ்டிராவின் புனேவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தை அதிதி போசலே வாலுஞ், அவரது கணவர் சேதன் வாலுஞ் இருவரும் நடத்தி வருகின்றனர். இன்று வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் ரத்தன் டாடா உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?!

ஆம், புதிதாகத் தொழில் தொடங்கும் பலருக்கும் ஏதோவொரு வகையில் முன்மாதிரியாக இருந்துவருகிறார் ரத்தன் டாடா. அப்படித்தான் ரெபோஸ் எனர்ஜி நிறுவனத்தைத் தொடங்கிய காலங்களில் அதிதி, சேதன் இருவருக்கும் முன்மாதிரியாக இருந்துள்ளார் ரத்தன் டாடா. என்றாவது ஒருநாள் ரத்தன் டாடாவைப் பார்த்துவிட வேண்டும் என்று கனவுடன் இருந்த இருவரையும் ஒருநாள் சந்தித்துப் பேசியுள்ளார் ரத்தன் டாடா.

ரெபோஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தத் தன் ஆலோசனைகளைத் தருவதாக அவரிடமிருந்து வந்த அழைப்பு, அவருடனான சந்திப்பு ஆகியவற்றைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவு செய்துள்ளனர் அதிதி, சேதன் தம்பதியினர்.

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

இது பற்றிக் கூறிய அதிதி, "எங்களின் ரெபோஸ் எனர்ஜி நிறுவனத்தை வழிநடத்த, ஆலோசனை வழங்க ஒரு நல்ல ஆளுமை வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது எங்கள் இருவர் மனதிலும் இருந்த ஒரே பெயர் ரத்தன் டாடா. ஆனால் அவரைச் சந்திப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. என் கணவர் கூட 'அவர் ஒன்றும் பக்கத்து வீட்டுக்காரர் இல்லை, அதெல்லாம் முடியாத காரியம்' என்று கூறினார். இருப்பினும் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. நாங்கள் இருவரும் முறையாக வணிகக் கல்வியை (Business Education) பெற்றவர்களும் இல்லை. அதனால் ரத்தன் டாடாவைச் சந்திப்பது கடினம் என்றுதான் நிறைய பேர் கூறினார்கள். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு ஒருநாள் எங்கள் நிறுவனத்தைப் பற்றி 3D முறையில் விளக்கம் அளிக்க அனைத்தையும் தயார் செய்துவிட்டு மும்பை சென்றோம்.

அப்போது ரத்தன் டாடாவின் வீட்டிற்குச் சென்று எங்கள் கைகளால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் அதில் தொடர்பு கொள்வதற்கான முகவரியையும் இணைத்து ரத்தன் டாடாவிற்கு அனுப்பியிருந்தோம். அவரிடம் இருந்து பதில் வரும் என சுமார் 12 மணிநேரம் அவரது வீட்டின் முன்பு காத்திருந்தோம். பின்பு நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றுவிட்டோம். இரவு 10 மணி அளவில் ரத்தன் டாடாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. 'நான் ரத்தன் டாடா பேசுகிறேன், உங்கள் கடிதம் கிடைத்தது. நாம் சந்திக்கலாமா?' என்று அவர் கேட்டார். அடுத்த நாளே அவரைச் சந்தித்தோம். எங்கள் நிறுவனத்தைப் பற்றிக் கூறினோம். அவர் எங்களை நிறைய இடங்களுக்கு அழைத்துச் சென்று ஏராளமான ஆலோசனைகளை வழங்கினார். அதுதான் இன்றும் எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது" என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.