Published:Updated:

கொரோனா அச்சம் - ஊழியர்களுக்கு `வொர்க் ஃப்ரம் ஹோம்' வழங்கிய ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியில் மொத்தம் 14,000 பேர் பணிபுரிகின்றனர் இதில் 4,000 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா வைரஸ், சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இன்று காலை வரை (மார்ச் 20) 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், 5 இறப்புகளும் பதிவாகியுள்ளன. நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பணப்புழக்கத்தை அதிகரிக்க, அரசாங்கப் பத்திரங்களை வாங்க முடிவு! - ரிசர்வ் வங்கி அதிரடி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல தனியார் நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலைபார்க்கும்படி கூறியுள்ளார்கள். நோய் தொற்றின் தீவிரத்தால் ரிசர்வ் வங்கியும் தனது அலுவலகங்களில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது. ரிசர்வ் வங்கியில் மொத்தம் 14,000 பேர் பணிபுரிகின்றனர்.

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும், அவசர சூழலில் அலுவலகம் வரவேண்டியவர்கள் எங்கு இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரவிவரும் கொரோனா வைரஸால் பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அச்சுறுத்தல்களையும் கருத்தில்கொண்டு ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

`கரன்சி கவுன்டர்ஸ் (currency counters), ஆர்.டி.ஜி.எஸ். டிபார்ட்மென்ட் (RTGS department) மற்றும் அரசாங்க பரிவர்த்தனைகளில் (government transactions) பணிபுரிபவர்கள் அலுவலகத்துக்கு வரவேண்டியிருக்கும். மேலும், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களும் அவசர காலங்களில் அலுவலகத்துக்கு வரத் தயாராக இருக்க வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

பணப்புழக்கத்தை அதிகரிக்க, அரசாங்கப் பத்திரங்களை வாங்க முடிவு! - ரிசர்வ் வங்கி அதிரடி

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நான்கு துணை ஆளுநர்கள், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் அவர்களின் உடனடி அறிக்கை ஊழியர்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் உள்ளவர்கள் தலைமையகத்தில் பணியாற்றுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. அகில இந்திய ரிசர்வ் வங்கிப் பணியாளர்கள் சங்கம் இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறது. `இந்த அவசர நிலைமை குறுகிய காலத்துக்குதான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், நாடு வெற்றிகரமாக இந்த துன்பத்திலிருந்து வெளியேறும்' என்று சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு