Published:Updated:

`ரிசர்வ் பேங்க் வார் ரூமில் என்ன நடக்கிறது தெரியுமா?' #RbiWarroom

ரிசர்வ் பேங்க் - மும்பை
ரிசர்வ் பேங்க் - மும்பை

ரிசர்வ் பேங்க் அமைத்திருக்கும் இந்த வார் ரூம் கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி வணிக தற்செயல் திட்டத்தின் (business contingency plan) கீழ் செயல்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு ரிசர்வ் வங்கியையும் விட்டு வைக்கவில்லை. மும்பையில் தற்போது 'வார் ரூம்' (war room) ஒன்றில் ரிசர்வ் வங்கி போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நிதித்துறையை மீட்கும் பணிகளில் முக்கிய ஊழியர்கள் 90 பேர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களோடு 60 முக்கிய வெளி விற்பனையாளர்களும் கூடுதல் வசதிகள் வழங்குவதற்காக 70 ஊழியர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சம் - ஊழியர்களுக்கு `வொர்க் ஃப்ரம் ஹோம்' வழங்கிய ரிசர்வ் வங்கி!
ரிசர்வ் பேங்க் வார் ரூம்
ரிசர்வ் பேங்க் வார் ரூம்

இந்த வார் ரூம், கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி வணிக தற்செயல் திட்டத்தின் (business contingency plan ) கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாடானது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலன் கருதி மிகுந்த கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பி.சி.பி (bcp) திட்டம் மூலம் 90 முக்கிய ஊழியர்களில் பாதிப் பேர் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் பணியாற்ற முடியும். மீதமுள்ள பாதிப் பேர் எப்போதும் காத்திருப்புப் பட்டியலிலேயே இருப்பர். இங்கு மேற்கொள்ளப்படும் முக்கியப் பணிகளில் கடன் மேலாண்மை, இருப்பு மேலாண்மை, பணச் செயல்பாடுகள் ஆகியன அடங்கும்.

இந்தத் திட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கியின் இதரத் தகவல் மையங்களாகிய எஸ்.எஃப்.எம்.எஸ் (SFSMS), ஆர்.டி.ஜி.எஸ் (RTGS ) மற்றும் நெஃப்ட்(NEFT) ஆகியவை செயல்படும். இதோடு மத்திய, மாநில அரசாங்கப் பரிவர்த்தனைகள் மற்றும் இதர வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக இ-குபேர் (e-Kuber) சேவையும் உள்ளது.

சாதாரணமாக, ரிசர்வ் வங்கியானது ஒரு நாளைக்கு பில்லியன் பரிவர்த்தனைகளைக் கையாளும். இதன் கிளைகள் 31 இடங்களில் பரந்து விரிந்துள்ளன. இதில் 14,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், மிக முக்கியமான பணிகளை 1,500 ஊழியர்கள் செய்கின்றனர். தற்போதுவரை கடந்த ஒரு வார காலத்தில் மும்பையில் உள்ள முதன்மை அலுவலகத்திற்கு 10 சதவிகிதப் பணியாளர்களே வருகை தந்துள்ளனர்.

வார் ரூம் பற்றி ரிசர்வ் வங்கி ஊழியர் ஒருவர், பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில், ``இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பி.சி.பி நடைமுறை உலகத்தில் உள்ள எல்லா மத்திய வங்கிகளையும்விட முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒன்றாகும். இரண்டாவது உலகப் போரின்போதுகூட இப்படிப்பட்ட நடைமுறை நம்மிடம் இல்லை. பொதுவாக 'பி.சி.பி' நடைமுறை என்பது மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் பிரச்னைகள், தீ விபத்து, இயற்கைப் பேரிடர் ஆகிய சமயங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின்போது இப்படிப்பட்ட நடைமுறை ரிசர்வ் வங்கியைத்தவிர வேறு யாராலும் மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.

`பணம் ராஜாதான்.. ஆனால் தொழில்நுட்பம் கடவுள்'- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு உற்சாகம் காட்டும் ஆர்பிஐ

கொரோனா வைரஸ் தொற்றானது நிதியாண்டின் இறுதியில் வந்துள்ளதால் பரிவர்த்தனைகளை சுலபமாக மேற்கொள்ள ரிசர்வ் வங்கி இந்தச் செயல்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இங்கு, பணி புரியும் பணியாளர்கள் அனைவரும் இந்த வார் ரூமிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இவர்களால் கடுமையான நெருக்கடிச் சூழலில் மட்டுமே இதிலிருந்து வெளியேற முடியும். இங்கு பணிபுரிய தேவையான அனைத்துப் பொருள்களும் போக்குவரத்துப் பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்பப் பணிகளை, தேர்ந்தெடுத்த திறன்மிகுந்த பணியாளர்களால் மட்டுமே கையாள முடியும்.

ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப வசதியானது வணிகம் மற்றும் சில்லறைக் கட்டணம் ஆகியவற்றோடு வரி மற்றும் இதரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் மிக முக்கியமான ஒன்று. இதனால் இந்த அசாதாரண சூழலிலும் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு செயல்படும் எல்லாப் பணியாளர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பான முறையிலேயே வைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

``இக்கட்டான காலகட்டத்திலும் நாட்டின் நிதிச் சேவை பாதிக்கப்படக்கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி கவனமாய் இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று'' என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு