Published:Updated:

வாழைக்குலை முதல் வகைவகையான மலர்கள் வரை... நாகர்கோவில் மார்க்கெட் ரவுண்ட்அப்!

நாகர்கோவில் மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
நாகர்கோவில் மார்க்கெட்

A R E A M A R K E T

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல்லுக்கு நாஞ்சில் நாடு, பூக்களுக்கு தோவாளை, காய்கறிக்கு வடசேரி சந்தை, மளிகைப் பொருள்களுக்கும், பாத்திரம், நறுமண பூஜைப் பொருள்கள் வாங்க கோட்டாறு மார்க்கெட் என அனைத்தும் நாகர்கோவிலைச் சுற்றியே உள்ளன.

கோட்டாறு என்னும் ஆதி வியாபாரத் தலம்...

குமரி மாவட்டத்தின் சந்தைகளின் தொடக்ககாலத் தொட்டில் கோட்டாறு எனலாம். இங்கிருந்துதான் சந்தைகள் நாகர்கோவிலின் பல இடங்களுக்கு நகர்ந்து பிரமாண்டமாக வளர்ந்து நிற்கின்றன. இப்போதைய கோட்டாறு மார்க்கெட்டில் மட்டில்லா மளிகைக் கடைகள், பளபளக்கும் பாத்திரக் கடைகள், பக்திக்கு வித்திடும் பத்தி உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகின்றன.

“ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கிரேக்கர்கள் குதிரை வியாபாரம் பண்ணின இடம் கோட்டார். இயற்கையாகவே இந்த பகுதி வியாபாரத்தலமா உருவாகியிருக்கு. இங்க சாதாரணமாகவே ஒரு நாள் குறைந்தபட்சம் 25 கோடி ரூபாய்க்கு மேல டேர்ன் ஓவர் ஆகும். மாசத் தொடக்கம், பண்டிகை நாள்களில இன்னும் அதிகமாக விற்பனை ஆகும். ஒரு நாளில் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் பொருள் விற்பனை ஆகிற கடைகள்கூட கோட்டாறில் இருக்கு. கேரள மாநிலத்துக்கும், தமிழ்நாட்டில் மதுரை வரைக்கும் கோட்டாறு மார்க்கெட்டுல இருந்துதான் பொருள்கள் போகுது’’ என்றார் கோட்டாறு வர்த்தகர் சங்க நிர்வாகி நாகராஜன்.

மார்க்கெட்
மார்க்கெட்
மார்க்கெட்

பளபளக்கும் பாத்திரக் கடைகள்...

பாத்திரங்கள் என்றால், சாதாரணமாக சமையலுக்குப் பயன்படுத்துவது மட்டுமல்ல, பூஜை அறையிலும், கோயில்களிலும் பயன்படுத்தும் கலை நயம்மிக்க பாத்திரங்களும் உள்ளன. குங்கும சிமிள் முதல் பெரிய குண்டா, வார்ப்பு என கோட்டாறில் விற்பனைக்காக வரிசைகட்டி வைக்கப்பட்டுள்ளன. பாத்திர வியாபாரம் செய்யும் நாராயண பிள்ளையிடம் பேசினோம்.

“நூறு வருஷத்துக்கு முந்தியே பாத்திரக் கடைகள் இங்க இருக்கு. கமிஷன் கடை, எண்ணெய் கடை, ஜவுளிக்கடை ஸ்தாபனங்களும் இங்க உருவானதுதான். மாட்டு வண்டி காலத்தில எல்லா வியாபாரங்களும் நடந்திட்டு இருந்தது. இந்தத் தெருவுக்கு எதிரே வண்டியில பூட்டுற மாடு அவிழ்த்து கட்டுற பேட்டை பகுதி இருந்தது. அப்பவே பார்க்கிங் ஏரியா தனியா ஒதுக்கியிருக்காங் கன்னா பாத்துக்கோங்க. இப்ப அங்க எல்லாம் வீடு வந்துட்டுது. அப்புறம் பெரிய லாரி வந்ததுனால சில ஸ்தாபனங்கள மாத்திட்டாங்க. மீனாட்சிபுரத்தில பஸ் ஸ்டாண்ட் உருவானதால பஸ்ஸில் இருந்து இறங்கினதும் பொருள் வாங்குறதுக்காக அங்கேயே வியாபார நிறுவனங்களை உருவாக்கிட்டாங்க. முன்னால பித்தளை, செம்பு பாத்திரங்கள்தான் உண்டு. இப்ப பித்தளை, செம்பு, அலுமினியம், ஸ்டீல், பிளாஸ்டிக் பொருள்கள் உருவானதுனால பல இடங்களில் கடைகள் வந்திருக்கு. காரைக்குடியில இருந்து எவர்சில்வர் பாத்திரங்கள் வருது. சென்னை, பாம்பேயில இருந்தும் பொருள்கள் வந்துகிட்டு தான் இருக்கு. கேரளாவில இருந்தும் இங்க வந்து கோயிலுக்குத் தேவையான மணி, வார்ப்பு, உருளி மற்றும் வீட்டுக்குத் தேவையான பாத்திரங்களை வாங்கிட்டு போறாங்க” என்றார்.

மலைக்க வைக்கும் மளிகைக் கடைகள்...

மளிகைப் பொருள்களில் கோட்டாறில் கிடைக்காத பொருள்களே இல்லை. இங்கிருந்துதான் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு மளிகைப் பொருள்கள் சப்ளை செய்யப் படுகிறது.

“அறுபதுக்கும் மேல் மொத்த விற்பனை நடக்கும் மளிகைக் கடைகள் கோட்டாறில் உள்ளன. சென்னை, பெங்களூர், மதுரை, சேலம்னு எல்லா இடத்துல இருந்தும் இங்க பொருள்கள் வருது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும், கேரளாவுக்கும் பொருள்கள் போகிறது. கோட்டாறில் பலசரக்கு மட்டுமே ஒருநாளில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும். அதிக அளவு பொருள்களை ஒரே இடத்துல வாங்கணும்ன கோட்டாறுதான் சிறந்த மார்க்கெட்’’ என்கிறார் கோட்டாறில் மளிகைக்கடை வைத்திருக்கும் வி.ஆர்.தாணு.

நாராயண பிள்ளை, வி.ஆர்.தாணு, ஜோக்கின் 
பெர்னாண்டோ
நாராயண பிள்ளை, வி.ஆர்.தாணு, ஜோக்கின் பெர்னாண்டோ

மீனாட்சிபுரம் நகைக்கடைகள்...

கோட்டாறின் நீட்சியாக அமைந்திருக்கிறது மீனாட்சி புரம் நகைக்கடை மார்க்கெட் வீதி. பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கும் பகுதி இது. இங்கு சிறியதும், பெரியதுமாக 200-க்கும் மேல் நகைக்கடைகள் வரிசைகட்டி நிற்கிறது. சாதாரண நாள்களில் 25 கிலோவுக்கும் மேல் நகைகள் விற்று தீருகிறது. கேரள மாடல் நகைகள் தமிழகத்தின் பிற பகுதிகளைவிட நாகர்கோவிலில் மட்டுமே அதிகமாக கொட்டிக் கி டப்பதால், மற்ற மாவட்ட மக்களும் இங்குதான் நகை வாங்க வருகிறார்கள். நகை வியாபாரி கோபால கிருஷ்ணனிடம் நாம் பேசினோம்.

“மீனாட்சிபுரமும் கோட்டாறு மார்க்கெட்டோட ஒரு பகுதிதான். முன்னாடி இதை காசுக்கடை பஜார்ன்னு சொல்வாங்க. தங்கம் விக்கிறதுனாலதான் அப்படிச் சொன்னாங்க. அப்ப எல்லாம் தரையில உக்காந்துதான் நகை விற்கிறதும், வாங்குறதும் நடக்கும். வாங்குறவங்க முன்னாடியே நகை செஞ்சு விப்பாங்க. இப்ப சென்னை, பாம்பே, கோவைன்னு பல இடங்களில் இருந்து மெஷின் நகைகள் வருது. எர்ணாகுளம், கொச்சி, ஆலப்புழா பகுதிகளில் இருந்து அதிகமா நகைகள் இங்க வருது. வேற மாவட்டங் களில உள்ள நகைகள் கட்டியா இருக்கும். ஆனா, கேரளா டிசைன்கள் லைட் வெயிட், மீடியம் வெயிட்ல நல்ல மாடலா இருக்கும். அதனால கேரளா மாடல் நகை வாங்க திருநெல்வேலி உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மீனாட்சிபுரத்துக்கு வாராங்க” என்றார்.

மார்க்கெட்
மார்க்கெட்

அலெக்சந்திரா பிரஸ் ரோடு...

மொபைல், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனைக்கு பெயர்பெற்ற அலெக்சந்திராபிரஸ் ரோடு மீனாட்சிபுரத்தை அடுத்து அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மட்டுமே இங்கு கிடைத்தன. அதன்பிறகு மொபைல் போன் தலையெடுக்கத் தொடங்கியபிறகு இப்போது மொபைல் போன் உதிரிப்பாகங்கள் குறைந்த விலையில் வாங்க மக்களின் முதல் சாய்ஸ் அலெக்சந்திரா பிரஸ் ரோடுதான்.

வடசேரி மீன் சந்தை...

வடசேரி பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது மீன் சந்தை. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது திருநெல்வேலி மாவட்டத்தின் பல கடற்கரைக் கிராமங்களில் இருந்தும் இங்கு மீன்கள் விற்பனைக்காக வருகிறது.

“வடசேரி மீன் மார்க்கெட் நாலு தலைமுறையா இருக்கிறது. ஆரம்பத்தில கொட்டகையா இருந்த இந்த மார்க்கெட்டை மாநகராட்சி இப்போது பெருசா கட்டிக் கொடுத்திருக்கு. சின்னமுட்டம், கன்னியாகுமரி, குளச்சல், கடியப் பட்டணம், மணப்பாடு, இடிந்த கரை, கூட்டப்புளி போன்ற கடற்கரை பகுதிகளில் இருந்து மீன் இங்க விற்பனைக்கு வருது. ஒருநாள், குறையாம அஞ்சு லட்சம் ரூபாய்க்கு சேல்ஸ் ஆகுது. நெத்திலியில தொடங்கி நெய் மீன்வரைக்கும் இங்க கிடைக்கும். காலை 6 மணியில இருந்து மதியம் 2 மணி வரைக்கும் அதிகமாக மீன் விற்பனை இருக்கும். சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு மேல கருவாட்டு சந்தை ஆரம்பிக்கும். சனிக்கிழமை மட்டும் ஆயிரம் கிலோவுக்கு மேல கருவாடு விற்பனை ஆகும்” என்றார் மீன் வியாபாரி ஜோக்கின் பெர்னாண்டோ.

அட்டகாசமான அப்டா மார்க்கெட்...

வடசேரி சந்தை மற்றும் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட்டில் விதவிதமான ரக வாழைக்குலைகள் மொத்தமாக அடுக்கி வைத்து விற்பனை செய்வதைப் பார்க்க முடியும். அப்டா மார்க்கெட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு மொத்த விற்பனைக்காக காய்கறிகள் போகிறது. இந்தன் மார்க்கெட்டில் மாதம் ஒரு லட்சம் டன் காய்கறிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை ஆகிறது.

மார்க்கெட்
மார்க்கெட்

தோவாளை மலர் சந்தை...

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கோயில்களுக்கும், பூஜைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். அதன் காரணமாக உருவானதுதான் தோவாளை மலர் சந்தை. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு தினசரி பூஜைக்குத் தேவையான பூக்கள் இன்றும் தோவாளையில் இருந்துதான் போகிறது. “150 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே தோவாளை பூ மார்க்கெட் இருக்கிறது. கேரளத்தின் அனைத்து பகுதிகளுக்குமே இங்க இருந்துதான் பூ போகிறது. சங்கரன்கோயில், மதுரை, ஓசூர்ல இருந்தும் பூக்கள் வருது. பிச்சி, முல்லை (மல்லிகை) பூக்களும், மஞ்ச கிரேந்தி, அரளி போன்ற பலவகை பூக்கள் இங்கேயே விளையுது. தினமும் சுமார் 50 டன் பூக்கள் இங்க இருந்து வெளியே போகுது. 50 லட்சத்தில இருந்து 1 கோடி ரூபாய் வரைக்கும் தினசரி விற்பனை ஆகும். வாரத்தின் எல்லா நாள்களிலும் தினமும் 11 மணி வரை சந்தை இருக்கும்’’ என்றார் பூ வியாபாரி செழியன். இப்படிப் பலவிதமான சந்தைகளை உள்ளடக்கியது தான் நாகர்கோவில்.