Published:Updated:

விசாரணையில் சித்ரா; கண்டுபிடிக்கப்படுவாரா `இமயமலை சாமியார்'? - NSE விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

தேசிய பங்குச்சந்தை

சித்ரா 2013-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பணிக்கு சேர்ந்த முதல் நாள் வேலைக்கு வரும்போதே தன்னுடன் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை அழைத்து வந்திருந்தார்.

விசாரணையில் சித்ரா; கண்டுபிடிக்கப்படுவாரா `இமயமலை சாமியார்'? - NSE விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

சித்ரா 2013-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பணிக்கு சேர்ந்த முதல் நாள் வேலைக்கு வரும்போதே தன்னுடன் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை அழைத்து வந்திருந்தார்.

Published:Updated:
தேசிய பங்குச்சந்தை

இந்திய பங்குச் சந்தையில் மிகவும் சக்தி மிகுந்த பெண்மணி, ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் `உமென் லீடர் ஆஃப் தி இயர்' விருது, பிஸ்னஸ் டுடேயின் மிகவும் சக்தி வாய்ந்த பிஸ்னஸ் உமென் விருது என வானலாவிய அளவில் 2013-களில் புகழப்பட்டவர் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா. ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சித்ரா ராமகிருஷ்ணாவின் பெயர் மீடியாக்களில் தவறான காரணங்களுக்காக அதிக அளவில் அடிபடுகிறது.

தேசிய பங்குச் சந்தையில் நிர்வாக இயக்குநராக இருந்தபோது எப்போதும் காஞ்சிபுரம் சேலை உடுத்திக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த சித்ரா மும்பை, டெல்லியில் பங்குச் சந்தை புரோக்கர்களை சந்திக்கச் செல்லும்போதும் இதே நடைமுறையைத்தான் பின்பற்றினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்ரா 1963-ம் ஆண்டு மும்பையில் பிறந்து வளர்ந்து மும்பையிலேயே தனது படிப்பை முடித்துவிட்டு தனது 21-வது வயதில் 1985-ம் ஆண்டு ஐ.டி.பி.ஐ வங்கியில் பணிக்கு சேர்ந்தார். அங்குதான் தன் கணவரான ராமகிருஷ்ணாவைச் சந்தித்தார். இருவரும் பேசிப் பழகி திருமணம் செய்து கொண்டனர்.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1988-90-ம் ஆண்டில் ஐ.டி.பி.ஐ வங்கியிடம் பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி அமைப்பின் விதிகளை வகுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட குழுவில் சித்ராவும் இடம்பெற்றார்.

1992-ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தையில் ஹர்ஷத் மேத்தா பெரிய அளவில் ஊழல் செய்ததைத் தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. ஸ்கிரீனை பார்த்து பங்கு வர்த்தகம் செய்யும் நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பொறுப்பும் ஐ.டி.பி.ஐ வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட குழுவிலும் சித்ரா இடம் பெற்று இருந்தார். இதன் மூலம் 1994-ம் ஆண்டு தேசிய பங்குச்சந்தை செயல்படத் தொடங்கியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சித்ரா 2013-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பணிக்கு சேர்ந்த முதல் நாள் வேலைக்கு வரும்போதே தன்னுடன் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை அழைத்து வந்திருந்தார். பின்னர் ஆனந்த் சுப்பிரமணியனை தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக நியமித்துக்கொண்ட சித்ரா, அவரது வருட சம்பளத்தை ரூ.1.63 கோடியாக நிர்ணயித்தார். ஆனந்த் அதற்கு முன்பு வாங்கிய சம்பளத்தைக் காட்டிலும் 11 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டது.

அப்பதவி நியமனத்துக்கு வேறு யாரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்காமல் விதிகளை மீறி ஆனந்த் சுப்பிரமணியத்தை மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்து பணியில் நியமனம் செய்துகொண்டார். அதோடு ஆனந்த்துக்கு பங்குச் சந்தையின் போதிய முன் அனுபவமும் கிடையாது. பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டில் ஆனந்த் வருடாந்தர சம்பளம் ரூ.4.21 கோடியாக அதிகரிகப்பட்டதோடு, அவர் நிர்வாக இயக்குநருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டு, தலைமை ஆபரேடிங் ஆபீஸர் என்ற பதவி உயர்வும் கொடுக்கப்பட்டது. இதனால் அனைத்து அதிகாரிகளும் ஆனந்தின் உத்தரவைக் கேட்டுத்தான் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

இது குறித்து தேசிய பங்குச் சந்தையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சித்ரா தனக்கு விசுவாசமான ஒரு ஆள் தேவை என்பதால்தான் ஆனந்த் சுப்பிரமணியனை அப்பதவிக்குக் கொண்டு வந்தார். ஏற்கெனவே இருந்த அதிகாரிகள் அனைவரும் அதற்கு முன்பு நிர்வாக இயக்குநராக இருந்த நரையன் என்பவருக்கு விசுவாசமாக இருந்தார்கள்'' என்றார்.

வெளிச்சத்துக்கு வந்த மோசடி

ஆனந்த் சுப்பிரமணியன் சாதாரண ஆலோசகராக இருக்கும் வரை செபி எதுவும் சொல்லவில்லை. ஆனால், ஆனந்த் சுப்பிரமணியன் தலைமை ஆபரேடிங் ஆபீஸராக நியமிக்கப்பட்ட பிறகுதான் இதில் செபி நுழைந்து சித்ராவின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கும்படி தேசிய பங்குச் சந்தையிடமே கேட்டது.

ஆனால், தேசிய பங்குச் சந்தை இதில் ஆர்வம் காட்டாமல் இருந்தது. இதனால் செபியே நேரடியாகக் களத்தில் இறங்கியது. மூன்று அமைப்புக்களைக் கொண்டு செபி தனித்தனியாக விசாரணை நடத்தியது. இவ்விசாரணை அறிக்கையை தொடர்ந்து ஆனந்த் சுப்பிரமணியன் பதவியில் இருந்து விலகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தேசிய பங்குச் சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஆனந்த் சுப்பிரமணியன் பதவி விலகியவுடன் சித்ரா மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்ராவையும் பதவி நீக்கம் செய்ய தேசிய பங்குச் சந்தையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், தான் ராஜினாமா செய்துகொள்வதாக சித்ரா தெரிவித்ததால் அதை ஏற்றுக்கொண்டு எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் சித்ரா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றார்'' என்றார்.

ராஜினாமா செய்த பிறகு சித்ரா வேறு எந்த ஒரு பதவிக்கும் செல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக வெளியுலகுக்கு வராமல் இருந்தார்.

NSE
NSE

இமயமலை சாமியாருடன் ரகசிய தொடர்பு

செபி நடத்திய விசாரணையில் சித்ரா இமயமலையில் தங்கி இருக்கும் சாமியார் ஒருவரின் ஆலோசனையைக் கேட்டு முக்கிய முடிவுகள் எடுப்பது தெரிய வந்தது. இந்த ஆலோசனைகள் அனைத்தும் இமெயில் மூலமே நடந்துள்ளது. சாமியாருக்கும் சித்ராவுக்குமிடையே நடந்த 2,500 இமெயில் பரிமாற்றங்களை விசாரணை அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு 1,000 கோடி ரூபாய் அபராதமும், சித்ரா மற்றும் ரவி நாராயண் ஆகியோருக்கு சம்பளத்தில் 25 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.

சித்ரா தேசிய பங்குச் சந்தையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் நியாயமான முறையில் பங்கு வர்த்தக சாஃப்ட்வேரைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்று செபி குற்றம் சாட்டியிருந்தது. தேசிய பங்குச் சந்தையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தையும் மர்ம சாமியாரிடம் சித்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து சித்ராவிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியபோது கடந்த 20 ஆண்டுகளாக சாமியார் தன்னை வழிநடத்தி வருவதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மட்டும் அவரை சந்தித்து பேசியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு ஆனந்த் சுப்பிரமணியன் தன் தோழியின் கணவர் என்று மட்டும் சித்ரா விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

ஆனால், சித்ராவுடன் பணியாற்றிய ஒரு அதிகாரி இது குறித்து கூறுகையில், ``சித்ராவுக்கு ஆனந்த் சுப்பிரமணியனை முன் கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அதோடு இருவருக்கும் மர்ம சாமியார் குருவாக இருந்திருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

தேசிய பங்குச் சந்தையில் சுப்பு என்று அழைக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனும், மர்ம சாமியாரும் சித்ராவும் சேர்ந்து பணம் சம்பாதிக்க இது போன்று பங்குச் சந்தை ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார்களா என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

சித்ராவும் அவருக்கு முன்பு அப்பதவியில் இருந்த ரவி நாராயணும் சேர்ந்து 5 ஆண்டுகளில் யாரோ ஒருவர் பங்குச் சந்தையில் 60,000 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்ட உதவி செய்து இருப்பதாக பங்குச் சந்தை தரகர்கள் தெரிவித்தார். சித்ராவும், ரவி நாராயணும் பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே கொடுத்து மர்ம நபர்கள் லாபம் அடைய உதவி செய்திருப்பதாகவும் பங்குச் சந்தை தரகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

இந்நிலையில், ஆனந்த் சுப்பிரமணியன் பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் நள்ளிரவில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். மார்ச் 6-ம் தேதி சித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரிடமும் மூன்றாவது நபர் யார் என்று சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையின் முடிவில் மர்ம சாமியார் யார் என்பது தெரியவருமா அல்லது ஆனந்த் சுப்பிரமணியன்தான் மர்ம சாமியாரா என்பது தெரியவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism