நெஸ்லே இந்தியா நிறுவனம் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக உள்ளது. ஏற்கெனவே மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சந்தித்துவந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு, தற்போது ஜி.எஸ்.டி வரி வசூலில் தவறிழைத்தது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்புக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைத்தபோது விலையைக் குறைக்காமல் முறைகேடாக லாபமீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாதந்தோறும் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கலந்தாய்வுக்கூட்டங்களில் ஜி.எஸ்.டி வரி விகிதங்களை அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறார்கள். அப்படி மாற்றியமைக்கும்போது அதன் பலனை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும். அதன்படி விலையைக் குறைக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், ஜி.எஸ்.டியை மட்டும் குறைத்துக்காட்டி, இன்னொருபுறம் ஏற்கெனவே உள்ள விலையிலேயே விற்பனை செய்து கூடுதல் லாபமீட்டுவது, வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாகும்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பை நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் நேஷனல் ஆன்டி-ப்ராஃபிட்டரிங் அத்தாரிட்டி (என்.ஏ.ஏ) அமைப்பு, நெஸ்லே நிறுவனம், ஜி.எஸ்.டி வசூலில் தவறு செய்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. ஜி.எஸ்.டி விகிதம் குறைக்கப்பட்ட பொருள்களின் விலை குறைந்துள்ளதா என்று நெஸ்லே நிறுவனத் தயாரிப்புகளின் இருப்புப் பிரிவுகளில் என்.ஏ.ஏ அமைப்பு சோதனை செய்திருக்கிறது.

அந்தச் சோதனையில், பொருள்கள் சிலவற்றின் விலை குறைக்கப்படாமல் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. எனவே ஜி.எஸ்.டி சட்டத்தின் 171(1) பிரிவின்படி ரூ.89.7 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தில் ரூ.16 கோடியை ஏற்கெனவே அந்த நிறுவனம் தாமாக முன்வந்து செலுத்தியுள்ளது. மீதமுள்ள ரூ.73.7 கோடியை மூன்று மாத காலத்துக்குள் 18% வரியுடன் சேர்த்துச் செலுத்த வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.