Published:Updated:

`தேச விரோத சக்திகளுடன் இன்ஃபோசிஸ்!' - ஆர்எஸ்எஸ் சார்பு பத்திரிகையால் வெடித்த சர்ச்சை; என்ன பிரச்னை?

Infosys
Infosys ( Twitter Image: @Infosys )

``இன்ஃபோசிஸ் நிறுவனம் நக்சல்களுக்கும், இடதுசாரிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் உதவிவருகிறது. நாட்டின் பல்வேறு பிரிவினைவாத முயற்சிகளுக்கு இன்ஃபோசிஸ் உதவியிருப்பது ஏற்கெனவே தெரிந்ததுதான்" எனவும் அந்தக் கட்டுரை விமர்சித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு டாடா குழுமத்தை நேரடியாக விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். இப்போது இதேபோல ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பு பத்திரிகை ஒன்று இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது தொடுத்திருக்கும் தாக்கல் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து செயல்படும் வாராந்திரப் பத்திரிக்கையான `பாஞ்ஜன்யா', நேற்று வெளியிட்டிருக்கும் கட்டுரை ஒன்றில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அட்டைப்படக் கட்டுரையான அது, இன்ஃபோசிஸ் தேச விரோத சக்திகளுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம்சாட்டியிருக்கிறது.

அண்மையில் மத்திய அரசால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வருமான வரி செலுத்துவதற்கான இணையதளம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதே. ஜூன் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தளத்தில் நிறைய தொழில்ந்நுட்பக் கோளாறுகள் இருந்ததால் மக்கள் சரிவர பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்ஃபோசிஸ் சி.இ.ஓ சலில் பரேக்கிற்கு சம்மன் அனுப்பி இந்தப் பிரச்னைக்கு விளக்கமும் கேட்டிருந்தார். செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பிரச்னையை சரிசெய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

பாஞ்ஜன்யா
பாஞ்ஜன்யா
Twitter Image:// @epanchjanya
`தேசநலனைவிட உங்கள் கம்பெனி முக்கியமா?' - டாடா குழுமத்தை விமர்சித்த பியூஷ் கோயல்; நீக்கப்பட்ட வீடியோ

அதில், ``இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றேதான் வருமான வரித்துறை இணையதளம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் சரிசெய்யப்படாமல் இருக்கிறது. ஒருவேளை தேசவிரோத சக்திகள் இன்ஃபோசிஸ் மூலம் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கின்றனரா?" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ``இன்ஃபோசிஸ் நிறுவனம் நக்சல்களுக்கும், இடதுசாரிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் உதவிவருகிறது. நாட்டின் பல்வேறு பிரிவினைவாத முயற்சிகளுக்கு இன்ஃபோசிஸ் உதவியிருப்பது ஏற்கெனவே தெரிந்ததுதான்" எனவும் அந்தக் கட்டுரை விமர்சித்துள்ளது.

இந்தக் கட்டுரையும் விமர்சனங்களும் நேற்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், இந்தக் கட்டுரைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ``இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்ஃபோசிஸ் முக்கியப் பங்காற்றியுள்ளது. அந்நிறுவனம் வடிவமைத்த வருமான வரித்துறை தளத்தில் சில பிரச்னைகள் இருக்கலாம்தான். அதுகுறித்து பாஞ்ஜன்யா-வில் வெளியான கட்டுரை அந்த குறிப்பிட்ட கட்டுரையாளரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. பாஞ்ஜன்யா ஆர்.எஸ்.எஸ்-சின் பத்திரிகை அல்ல; எனவே இந்த விமர்சனங்களோடு ஆர்.எஸ்.எஸ்-ஐ இணைத்துப் பார்க்கக்கூடாது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பாஞ்ஜன்யாவின் ஆசிரியரான ஹிதேஷ் ஷங்கர் இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளோடு முழுமையாக உடன்படுவதாகவும், அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ``இன்ஃபோசிஸ் இந்தக் கூற்றுகளை மறுத்தால் முழுமையான விசாரணையை கோரட்டும். பலரும் ஆர்.எஸ்.எஸ் உடன் இந்தக் கட்டுரையை தொடர்புபடுத்துகிறார்கள். இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியதல்ல; இன்ஃபோசிஸைப் பற்றியது. அந்நிறுவனத்தின் இயலாமை பற்றியது. அவ்வளவுதான்" எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர் பிரச்னையில் வருமான வரி வலைதளம்; இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சம்மன்; என்ன நடக்கிறது?

முதலில் மத்திய அமைச்சரால் டாடா நிறுவனம் விமர்சிக்கப்பட்டது, இப்போது ஆர்.எஸ்.எஸ்-ஸின் சார்பு ஊடகம் இன்ஃபோசிஸை விமர்சித்திருக்கிறது. இப்படி அடுத்தடுத்து இரண்டு கார்ப்பரேட்டுகள் உள்நோக்கங்களுடன் விமர்சிக்கப்பட்டிருப்பது, மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு அனுப்பும் ஏதேனும் சமிக்ஞையா எனக் கேட்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அடுத்த கட்டுரைக்கு