Published:Updated:

அள்ளிக் குவித்த அண்ணாச்சிக் கடைகளும் ஆன்லைன் தளங்களும்! கோவிட் காலத்தில் சில்லறை வணிகம்...

R E T A I L S A L E

பிரீமியம் ஸ்டோரி

உலக அளவில் அனைத்துத் தரப்பினரையும் கடந்த 20 மாதங்களாகப் பாடாய் படுத்தி வருகிறது கோவிட்-19 பெருந்தொற்று. இந்தக் கால கட்டத்தின் சந்தர்ப்ப சூழ்நிலை களாலும் தொழில்நுட்ப மேம்பாட்டாலும் நமது அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று, நுகர்வோர்களின் மனப்பாங்கும் சில்லறை வணிகத்தின் போக்கும் மிகப்பெரிய அளவில் மாறிவருவது.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

தற்சமயம் நிலவிவரும் பொருளா தாரச் சூழ்நிலை, உற்பத்தியில் தேக்கநிலை ஆகியவற்றால் ஒருவர் ஒரு பிராண்டின் மீது கொண்டிருந்த விசுவாசமும், வாங்கக்கூடிய பொருள்களின் அளவும் முறையும் இந்தக் காலகட்டத்தில் வேறுபட்டு வருவது நீல்சன், பெயின் அண்ட் கம்பெனி போன்ற சந்தை ஆய்வு ஆலோசனை நிறுவனங்கள் நுகர்வோர்களிடமும், சில்லறை வணிகர்களிடமும் தொடர்ந்து செய்துவருகிற ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் பற்றிப் பார்ப்போம்.

அண்ணாச்சிக் கடைகளும், ஆன்லைன் தளங்களும்...

68% நுகர்வோர்கள் தங்களது தேவைகளை ‘அண்ணாச்சிக் கடைகள்’ எனப் பரவலாக அறியப் படும் பாரம்பர்யமான பலசரக்குக் கடைகள் மற்றும் ஆன்லைன் கடைகள் மூலம் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அதாவது, அவர்கள் இந்த இரண்டு விதமான கடைகள் மூலமும் பொருள்களை வாங்கு கிறார்கள்.

கோவிட்-19க்கு முன் வெளியே சென்றதுபோல இப்போது செல்ல முடியாததால், பெரும்பாலும் தங்களது வசதி கருதி இருந்த இடத்திலேயே பொருள்களை வரவழைத்துக் கொள்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் நுகர்வோர் களின் விருப்பத்தை அறிவதில் அதிக கவனமும் நேரமும் செலவழித்து அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொற்று தொடர்வதால், பெரும்பாலான தனிப்பட்ட நபர்களின் பொருளா தாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், புரொமோஷன், தள்ளுபடி ஆகியவற்றுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

அள்ளிக் குவித்த அண்ணாச்சிக் கடைகளும் ஆன்லைன் தளங்களும்! கோவிட் காலத்தில் சில்லறை வணிகம்...

அதிகரித்த விற்பனை...

அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் (சமையல் எண்ணைய், தேயிலை, பருப்பு, கோதுமை மாவு, அரிசி போன்றவை) விலை அதிகரிப்பால் நுகர்வோர் பொருள்களின் சந்தை கடந்த ஆண்டு ஜனவரி – மார்ச் காலாண்டைவிட இந்த ஆண்டு ஜனவரி - மார்ச் காலாண்டில் மதிப்புரீதியில் சுமார் 9.4% வளர்ச்சி அடைந்திருக்கிறது. இத்துடன் பலரும் வீட்டிலேயே இருந்து பணியாற்றியும் படித்தும் வருவதாலும் பிஸ்கெட், காபி, பாலாடைக் கட்டி (Cheese) போன்ற வற்றின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. இதில் பாரம்பர்யக் கடைகள் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. ஆன்லைன் கடைகள் ஒற்றை இலக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. ஆனால், இதே போக்கு ஏப்ரல் – ஜூன் காலாண்டிலும் தொடருமா என்பது சந்தேகம். ஏனெனில், பெரும்பாலான மாநிலங்களில் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது.

பாரம்பர்யமான பலசரக்குக் கடை களின் வியாபாரமும், ஆன்லைன் கடைகளின் வியாபாரமும் அதிகரித்திருந் தாலும் ‘மாடர்ன் டிரேட்’ என்று சொல்லப்படுகிற சூப்பர் மார்க்கெட்டு களின் வியாபாரம் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் சுமார் 8% குறைந் திருக்கிறது. கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு நுகர்வோர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் பலசரக்குக் கடை களிலும் ஆன்லைனிலும் பொருள்களை வாங்கிவருவது இந்த சரிவுக்குக் காரணமாக இருக்கலாம்.

அசத்தும் ஆன்லைன் நிறுவனங்கள்...

உலகளவில் சில்லறை வணிகச் சந்தையில் இந்தியா நான்காவது பெரிய நாடாகும். சில்லறை வணிகத்தின் வருமானம் சுமார் 850 பில்லியன் டாலர் ஆகும். இந்தத் துறை பெரும்பாலும் அமைப்புசாரா (unorganized) நிலையிலேயே இருந்துவருகிறது. அடுத்த ஐந்தண்டுகளில் மின் சில்லறை வணிகமானது (e-retail) சுமார் 30 - 35 கோடி மக்களைச் சென்றடையும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் சுமார் 95% `பின்கோடு’களை இந்த மின் சில்லறை வணிகத்தளங்கள் சென்றடைந்திருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவிலிருக்கும் மொத்த பின்கோடுகளில் 97% பின்கோடுகளைச் சேர்ந்த இடங்களிலிருந்து குறைந்தபட்சம் ஒரு பொருளுக்காவது ஆர்டர் கிடைத்திருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

ஆன்லைனில் பொருள்களை வாங்கும் மொத்த நுகர்வோர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் நிலை (tier 2) நகரங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சார்ந்தவர்கள் சுமார் 50% ஆகும். ஐந்து ஆர்டர் களில் மூன்று ஆர்டர்கள் இந்த நகரங்களிலிருந்து வருவதாக முன்னணி மின் வணிகத் தளங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் மின்வணிகத் தளங்களின் வளர்ச்சியும் பங்களிப்பும், சில்லறை வணிகச் சந்தையில் இவை ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் முந்தைய காலங் களைவிட சற்று அதிகமாகும். இந்தியாவில் கடந்த ஐந்தாண்டு களில் இதன் வளர்ச்சி சுமார் 36 சதவிகிதமாகும். மொத்த சில்லறை விற்பனைச் சந்தையில் இதன் பங்களிப்பு ஏறக்குறைய 3.4 சதவிகிதமாகும்.

இனி என்ன செய்ய வேண்டும்?

இனிவரும் காலத்தில் அதிகமான நுகர்வோர்களைச் சென்றடைய இந்த மின் வணிகத் தளங்கள் தங்களது கட்டமைப்பு, லாஜிஸ்டிக் வசதிகள், நுகர்வோர் களின் மனப்போக்கை பகுப்பாய்வு செய்து சரியான பொருள்களை, சரியான விலையில், சரியான நேரத்தில் விற்பனை செய்வது, நிதி சார்ந்த சேவைகள், நுகர்வோர் விசுவாச (consumer loyalty) திட்டங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் முனைப் புடன் இயங்கி வருகின்றன.

மருத்துவத் துறையைப்போல, சில்லறை மின் வணிகத் தளங் களுக்கும் கோவிட் காலம் `பொன் முட்டையிடும்’ காலமாகும். கோவிட் முடிந்தபின்னும் இது தொடரவே செய்யும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு