Published:Updated:

`தடைபட்ட ஏற்றுமதி; 50% வேலையிழப்பு’ - தூத்துக்குடியில் ரூ.1 கோடி உப்பு வர்த்தகம் பாதிப்பு! #Corona

உப்புக் குவியல்
உப்புக் குவியல்

கொரானா வைரஸ் எச்சரிக்கை எதிரொலியாகத் தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள உப்பு ஏற்றுமதி சரிந்துள்ளது. இதனால், உப்பு ஏற்றுமதியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது. இதனால் தூத்துக்குடியை உப்பு நகரம் எனவும் சொல்கிறார்கள்.

உப்பு வாறுகால்
உப்பு வாறுகால்

இம்மாவட்டத்தில் வேம்பார் முதல் மணப்பாடு வரையிலான சுமார் 21,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. 400 சிறிய உப்பு உற்பத்தியாளர்களும் 120 பெரிய உப்பு உற்பத்தியாளர்களும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் நேரடியாக 25,000 தொழிலாளர்களும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், ஆண்களைவிட பெண் தொழிலாளர்களே அதிகம். இங்கு உற்பத்தியாகும் உப்பு இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

உப்பு சுமந்து செல்லும் தொழிலாளர்கள்
உப்பு சுமந்து செல்லும் தொழிலாளர்கள்

இம்மாவட்டத்தில் வழக்கமாக உப்பு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், தற்போது வேகமாகப் பரவி வரும் கொரனா வைரஸ் குறித்த அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த ஒரு வாரமாக உப்பு ஏற்றுமதி பாதிப்பு அடைந்துள்ளது.

வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் உப்பு அனுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், உப்பு பண்டல்கள் குடோன்களில் தேக்கம் அடைந்ததுடன் ரூ.1 கோடி மதிப்பிலான உப்பு வர்த்தகம் சரிந்துள்ளது. தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால், உப்பு உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. கொரானா முன்னெச்சரிகையால் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

லாரிகள்
லாரிகள்

இதனால் 50 சதவிகித உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதே போல, வெளிநாடுகளிலிருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு மரத்தடிகள் இறக்குமதி மற்றும் கடல் மீன்கள் ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு