Published:Updated:

சமோசா ஏற்றுமதியில் கலக்கும் சென்னையின் இளம் தம்பதி!

ஹாஜா புன்யாமின் - ஃபரிஷா
பிரீமியம் ஸ்டோரி
ஹாஜா புன்யாமின் - ஃபரிஷா

ஏற்றுமதி

சமோசா ஏற்றுமதியில் கலக்கும் சென்னையின் இளம் தம்பதி!

ஏற்றுமதி

Published:Updated:
ஹாஜா புன்யாமின் - ஃபரிஷா
பிரீமியம் ஸ்டோரி
ஹாஜா புன்யாமின் - ஃபரிஷா

நாம் எந்தத் தொழிலைச் செய்கிறோம் என்பதைக் காட்டிலும், அதைச் செயல் படுத்தக் கடைப்பிடிக்கும் வித்தியாசமான உத்திதான் நம் வெற்றியைத் தீர்மானிக்கும். அதற்கு, ஹாஜா புன்யாமின் - ஃபரிஷா தம்பதி மிகச் சிறந்த உதாரணம்.

சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹாஜாவுக்கு அடையாளமே சமோசாதான். பள்ளிப் படிப்பில் இருந்து பாதியிலேயே விலகி யவர், திருமணத்துக்குப் பிறகு, மனைவியுடன் இணைந்து ஃபிளாட்பாரத்தில் சமோசா விற்பனையைத் தொடங்கினார். உழைப்பும், இவர் கையாண்ட புதுப்புது உத்தியும் ஹாஜாவை இன்று ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளராக உயர்த்தியிருக்கிறது. உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் தன் நிறுவனத் தயாரிப்புகளை விற்பனை செய்து அசத்துகிறார்கள் இந்தத் தம்பதிகள். சென்னை, செங்குன்றத்தில் இருக்கும் ‘ஹாஃபா ஃபுட்ஸ் & ஃபுரோஸன் ஃபுட்ஸ்’ நிறுவனத்தில் இந்த வெற்றித் தம்பதியரைச் சந்தித்தோம்.

பொரிக்காத சமோசா...

“என்கூடப் பிறந்தவங்க மொத்தம் அஞ்சு பேர். சின்ன வயசுல குடும்பத்துல நிதி நெருக்கடி அதிகமா இருந்துச்சு. அதனால, சமோசா விற்பனையை ஆரம்பிச்சோம். ஆறாவது வரைதான் படிச்சேன். அப்புறமா, சமோசா தொழில்லயே முழுசா இறங்கிட்டேன்.

35 வருஷத்துக்கு முன்பு எண்ணெய்ல பொரிச்ச சமோசாவைத்தான் பலரும் விற்பனை செய்வாங்க. ஆனா, சமோசாவைத் தயார் பண்ணி அதை எண்ணெய்ல பொரிக்காம விற்பனை செஞ்சோம். வீட்டுலயே அம்மா சமோசா தயாரிக்க, அதை நானும் என் சகோதரர்களும் கடைக்கடையா கொண்டுபோய் வித்தோம்...” என ஆரம்பகால அனுபவங்களுடன் ஹாஜா நிறுத்த, திருமணத் துக்குப் பிறகு, கணவன் மனைவி இருவரும் கூட்டாக உழைத்த கதையைப் பகிர்ந்தார் ஃபரிஷா.

ஹாஜா புன்யாமின் - ஃபரிஷா
ஹாஜா புன்யாமின் - ஃபரிஷா

காலையில் வாங்கிய பாலைத்தான்...

“கல்யாணத்துக்குப் பிறகு, நாங்க தனிக் குடித்தனம் வந்துட்டோம். பகல் நேரத்துல கடைகளுக்கு சமோசா சப்ளை செஞ்சோம். சாயந்திரத்துல ஃபிளாட்பாரத்துல தள்ளு வண்டி கடையில சமோசாவைப் பொரிச்சு வித்தோம். அப்போ ரொம்பவே வறுமையில இருந்தோம். காலையில வாங்கின பால்ல அளவுக்கு அதிகமா தண்ணீரைச் சேர்த்துக் காய்ச்சி, அதைத்தான் சாயந்திரம் வரைக்கும் எங்க குழந்தைக்குக் கொடுத்துப் பசியாத்தி னோம். பொருளாதார நெருக்கடியில இருந்து மீளணும்னு வைராக்கியமா உழைச்சோம்.

ஐ.டி நிறுவனம் ஒண்ணுல சமோசாவுடன், டீ மற்றும் காபி சப்ளை பண்ற ஆர்டர் கிடைச்சது. அதுக்கப்புறமா எங்க தொழில் படிப்படியா வளர ஆரம்பிச்சது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

பாரத யுவசக்தி செய்த உதவி...

2006 வரை பல நிறுவனங்களுக்கும் ஒப்பந்த முறையில சமோசா விற்பனை செய்துவந்தவர்கள், அதன்பிறகு, தனி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். அடுத்தகட்ட தொழில் வளர்ச்சி குறித்து சொன்னார் ஹாஜா.

“பாரத யுவசக்தி நிறுவனத்தின் உதவியுடன் வங்கிக் கடன் வாங்கி, புது நிறுவனத்தை ஆரம்பிச்சோம். சமோசாவைத் தயாரிச்சு எண்ணெய்ல பொரிக்காம, குளிர் பதனக்கிடங்குல (Frozen Process) வெச்சிருந்து, தேவைக்கேத்த மாதிரி விற்பனை செய்யலாம்னு முடிவெடுத்தோம். எங்க நிறுவனத்தைப் பத்தி பலருக்கும் தெரிய ஆரம்பிச்சது. 2011-ல் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கையால சிறந்த தொழில்முனை வோருக்கான விருது வாங்கினேன். அதுக்கப்புறமா புதுப்புது ஆர்டர்கள் தேடி வந்துச்சு. காலத்துக்கு ஏத்த மாதிரி தொழில் போட்டிகளும் அதிகமாகிட்டேதான் இருக்குது. அதனாலயும், எங்களுக்கான தனித்துவத்தை உறுதி செய்யவும் புதுப்புது தயாரிப்புகளை அறிமுகப்படுத்துறோம்” என்று வெற்றி ஃபார்முலா சொல்பவர், நிறுவனத்துக்குள் அழைத்துச் சென்று உற்பத்திச் செயல்பாடுகளை விளக்கினார்.

பணியாளர்கள் கடகடவென சமோசாவைத் தயாரித்து அனுப்ப, பேக்கேஜிங் பணிகள் விறுவிறுவென நடைபெற்றன. வெஜ் சமோசா, சிக்கன், மட்டன், ஃபிஷ் உள்ளிட்ட பலவித ஃபிளேவர்களுடன்கூடிய நான்-வெஜ் சமோசா, கட்லெட், ரோல், நக்கெட்ஸ் (Nuggets) உட்பட 40-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை இந்த நிறுவனத்தில் தயாரிக்கின்றனர். இந்தத் தொழிலுடன், புதிதாக உணவகங்களையும் தொடங்கப் போகிறார்கள் ஹாஜா - ஃபரிஷா தம்பதியர்.

“ஒருத்தருக்காவது வேலை கொடுக்க முடிஞ்சா நல்லா யிருக்குமேன்னு ஆரம்பகாலத்துல ரொம்பவே ஆசைப் பட்டிருக்கோம். கடவுள் புண்ணியத்துல இப்போ 150 பேர் எங்ககிட்ட வேலை செய்றாங்க. அதுல 95% பெண்கள். சென்னையில இருக்கிற பிரலமான உணவகங்கள் பலவற்றுக்கும் எங்க தயாரிப்புகளை சப்ளை பண்ணுறோம். தவிர, கல்வி நிறுவனங்கள், நட்சத்திர உணவகங்கள்னு பல மாநிலங்கள்லயும், துபாய், இலங்கை, மலேசியா போன்ற நாடுகள்லயும் எங்க தயாரிப்புகள் விற்பனையாகின்றன.

மார்க்கெட்டிங், அக்கவுன்ட்ஸ் வேலைகளை என் கணவர் பார்த்துப்பார். ஃபேக்டரி நிர்வாக விஷயங்களை நான் பார்த்துப்பேன். சில நூறு ரூபாய்ல ஆரம்பிச்ச எங்க வர்த்தகம், இப்போ வருஷத்துக்கு கோடிகள்ல உயர்ந்திருக்கு. ஸ்கூல் படிப்பையே முடிக்காத என் கணவர், தன்னம்பிக்கைப் பேச்சாளரா ஏராளமான காலேஜ்ல பேசுறார்” - உழைப்பால் வளர்ந்த கதையை முகம் மலர ஃபரிஷா கூற, பல மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தும் வகையிலான தங்களின் தயாரிப்பு நுணுக்கங்களைப் பகிர்ந்தார் ஹாஜா.

தினமும் 50,000 சமோசா...

“தினமும் 50,000-க்கும் அதிக மான எண்ணிக்கையில, சமோசா உட்பட பலவித வெரைட்டி புராடெக்டுகளைத் தயாரிக் கிறோம். அவற்றை - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில சில மணிநேரம் வெச்சிருப்போம். அப்புறமா - 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில பதப்படுத்தி வைப்போம். ஒவ்வொருநாளும் தயாராகிற உணவுகள், பெரும் பாலும் ஒரு வாரத்துக்குள்ளேயே டெலிவரிக்கு அனுப்பிடுவோம். கனரக வாகனம், விமானம், கப்பல்னு எதுல போனாலும், எங்க தயாரிப்புகள் குளிர்சாதன வசதியுடன்தான் பயணமாகும்.

அதுக்கப்புறமா சம்பந்தப் பட்டவங்க குளிர்சாதனப் பெட்டியில வெச்சிருந்து, தேவைக்கேற்ப பொரிச்செடுத்து விற்பனை செய்வாங்க. அதனால, எங்க வாடிக்கையாளர்ளுக்கு எங்ககிட்ட வாங்குற உணவுப் பொருள்களால காலாவதி ஆகிற பிரச்னை ஏற்படாது. இன்னும் பல நாடுகளுக்கு எங்க தயாரிப் புகளைக் கொண்டு சேர்க்க ஆசைப்படுறோம். அதுக்கான முயற்சிகளை உத்வேகத்துடன் செயல்படுத்துவோம்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஹாஜா புன்யாமின்.

படம்: இ.பிரவின் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism