Published:Updated:

குறைக்கப்படாத டீசல் வரி: தமிழக அரசுக்கு வர வேண்டிய வருமானம் கர்நாடகாவுக்கு செல்கிறதா?

லாரி உரிமையாளர்கள் (File Pic)
News
லாரி உரிமையாளர்கள் (File Pic) ( Photo: Vikatan )

``தீபாவளிக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு சங்ககிரியில் லாரிகள் செய்த மொத்த டீசல் கொள்முதல் சுமார் 2-2.50 லட்சம் லிட்டர்கள். ஆனால், தீபாவளிக்குப் பிறகு இது சுமார் 1-1.5 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டது. ஏனெனில், லாரிகள் உரிமையாளர்கள் கர்நாடகாவில் டீசல் போட ஆரம்பித்திருக்கிறார்கள்."

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த நவம்பர் மாதத்தின் முதல் வாரம் வரை தினசரி தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 120 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது. அதே போல டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டி விற்பனையானது.

இந்த விலை உயர்வு சாமானிய மக்கள் முதல் லாரி மற்றும் கார் ஓட்டுநர்களை வெகுவாகப் பாதித்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்த அழுத்தம் காரணமாக நவம்பர் 4-ம் தேதி முதல் வரியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது.

Fuel (Representational Image)
Fuel (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கர்நாடகா உள்ளிட பல மாநிலங்கள் தங்களின் வரியை மேலும் குறைத்தன. குறிப்பாக, கர்நாடகா அரசு டீசல் மீதான வரியை 7 ரூபாய் வரை குறைத்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் டீசல் விலை ரூ.85-க்கு விற்பனையாகி வருகிறது.

ஆனால், தமிழக அரசு வரியைக் குறைக்காததால், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.42-க்கு விற்பனையாகிறது. டீசல் விலையைத் தமிழக அரசு குறைக்காத காரணத்தால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தமிழக அரசுக்கு அது நஷ்டத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் லாரி உரிமையாளர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதன் பின்னணியில் இருக்கும் பிரச்னைகள் என்ன, தமிழக அரசுக்கு எந்த வகையில் நஷ்டம் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி மற்றும் சங்ககிரி சங்கத்தின் உறுப்பினர் மற்றும் லாரி உரிமையாளராக நல்லா கவுண்டரிடம் இதுபற்றிப் பேசினோம்.

``சங்ககிரி லாரியின் டயர் படாத இடம் இந்த இந்தியாவிலேயே இல்லை என்று சொல்வார்கள். ஏனெனில், தமிழகத்திலேயே சங்ககிரியில்தான் அதிகமான லாரிகள் இருக்கின்றன. நடப்பு ஆண்டில் வரலாறு காணாத வகையில் டீசல் விலை அதிகரித்ததால், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 52 நாள்களாக டீசல் விலை மாற்றமில்லாமல் ரூ.91.42 என்கிற விலையில் விற்பனை ஆனாலும், கர்நாடகா மாநிலத்தின் டீசல் விலையுடன் ஒப்பிடும்போது ஒரு லிட்டருக்கு ரூ.6.42 அதிகமாகவே இருக்கிறது.

நல்லா கவுண்டர்
நல்லா கவுண்டர்

மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கச் சொல்லி மத்திய அரசு சொன்னதால் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் வரிக் குறைப்பை செய்தன. இதனால் அந்தந்த மாநிலங்களில் டீசல் விலை குறைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியில் மட்டும் ரூ.3 வரை குறைக்கப்பட்டது. டீசல் மீதான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.

இதன் காரணமாக, சங்ககிரி லாரிகள் உள்ளூர் பயன்பாட்டுக்காக மட்டும் உள்ளூரில் இருக்கும் டீசல் நிலையங்களில் டீசல் போடுகின்றன. மற்ற லாரிகள் அனைத்தும் கர்நாடகா மாநிலத்திலுள்ள டீசல் நிலையங்களில்தான் டீசல் போடுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, லாரிகள் அதிக அளவில் டீசல் கொள்முதல் செய்யும். அந்த வகையில் கடந்த தீபாவளிக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு சங்ககிரியில் லாரிகள் செய்த மொத்த டீசல் கொள்முதல் சுமார் 2-2.5 லட்சம் லிட்டர்கள். ஆனால், தீபாவளிக்குப் பிறகு இது சுமார் 1-1.5 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டது. ஏனெனில், லாரிகள் உரிமையாளர்கள் கர்நாடகாவில் டீசல் போட ஆரம்பித் திருக்கிறார்கள். இதன் காரணமாகத் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 33 - 40 லட்சம் ரூபாய் வரை வரி வருமானம் குறைந்திருக்கிறது. இதனால் தமிழக அரசு பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

தமிழக அரசுக்குக் கிடைக்கும் ஒரு லிட்டர் டீசலுக்கான ரூ.33 வரித் தொகையில் ரூ.8-ஐ குறைத்தால்கூட, லிட்டருக்கு ரூ.25-ஐ வரி வருமானமாகத் தமிழக அரசு ஈட்டலாம். ஆனால், வரியை குறைக்காத காரணத்தால், மொத்த சங்ககிரி லாரிகளும் கர்நாடகாவில் டீசல் கொள்முதல் செய்கின்றன. இதன் காரணமாக மொத்த வரி வருமானத்தையும் கர்நாடக அரசு பெறுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசாங்கம் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்" என்றார் தெளிவாக.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஆர்.குமாரசாமியிடம் இது குறித்து பேசினோம்.

எம்.ஆர்.குமாரசாமி
எம்.ஆர்.குமாரசாமி

``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மொத்தம் 5.5 லட்சம் லாரிகள் ஓடுகின்றன. இதில் இரண்டு லட்சம் லாரிகள் நேஷனல் லைசன்ஸ் பெற்றவை. கர்நாடகாவில் டீசல் விலை குறைந்ததால், இந்த லாரிகள் அனைத்தும் கர்நாடகாவுக்கு போய்தான் டீசல் போடுகின்றன. இதனால் சங்ககிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் டீசல் விற்பனை பெருமளவு சரிந்திருக்கிறது.

குறிப்பாக, சங்ககிரியில் லாரி உரிமையாளர்களால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் டீசல் அளவு அதிகபட்சமாக 1.5 லட்சம் லிட்டர்கள் குறைந்திருக்கிறது. இது சங்ககிரியில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களுக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கு மிகப் பெரிய நஷ்டம். இதை நாங்கள் எங்களுடையை சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு தொடர்ந்து தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். ஆனால், தமிழக அரசு இதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தற்போதைய நிலையில், வட மாநிலங்களுக்குச் செல்லும் பெரும்பாலான லாரிகள் கர்நாடகாவைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதன் காரணமாக அனைத்து லாரிகளும் அந்த மாநிலத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் டீசல் போடுவதற்காக வரிசை கட்டி நிற்கின்றன. கர்நாடகாவில் பெட்ரோல் போடுவதால், ஒரு லாரிக்கு, ஒரு மாதத்துக்கு 20,000 - 25,000 ரூபாய் வரை மிச்சமாகிறது.

கிழக்கிந்திய மாநிலங்களுக்குச் செல்லும் பெரும்பாலான லாரிகள், கர்நாடகாவுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், டீசல் போடுவதற்காக வந்து செல்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மாதம் ரூ.5,000 அதிகமாக செலவானாலும், டீசல் போடும் செலவில் ரூ.15,000 - 20,000 வரை அவர்களால் மிச்சம் பிடிக்க முடிகிறது. இது இப்படியே தொடர்ந்தால், தமிழக அரசின் வரி வருமானம் பெரிய அளவில் குறையும். இந்த நஷ்டத்தைத் தவிர்க்க தமிழக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழக அரசு, இந்த விஷயத்தையும் கவனிக்கலாமே!