Published:Updated:

பொம்மை தயாரிப்பு... மலைக்க வைக்கும் ராஜஸ்தான் தொழிலதிபர்! - சவுகார்பேட்டை சக்சஸ் ஸ்டோரி

சர்வண் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வண் சிங்

ENTREPRENEUR

சென்னையின் பிரதான வர்த்தகப் பகுதியான சவுகார்பேட்டையில் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்ததுபோல, சிறியதும் பெரியது மாக ஏராளமான நிறுவனங்களும் கடைகளும் வரிசையாக அணிவகுக் கின்றன. அங்குள்ள வணிக வளாகம் ஒன்றின் பின்புறம் இருக்கிறது சர்வண் சிங்கின் ‘மங்கள் சாஃப்ட் டாய்ஸ்’ நிறுவனம்.

சாஃப்ட் டாய்ஸ் பொம்மை விற்பனையில் தமிழகத்திலேயே இவர்தான் முன்னணியில் இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூன்று தளங்களிலும் சிறியது முதல் பிரமாண்டமான உருவங்கள் வரை ஆயிரக்கணக்கான பொம்மைகள் குவிந்துகிடக்கின்றன. பொம்மை விற்பனையில் மலைக்க வைக்கும் வியாபாரத்தைக் கட்டமைத்திருக்கும் சர்வண் சிங், வியாபாரத்தைக் கவனித்தபடியே உற்சாகமாகப் பேசினார்.

சர்வண் சிங்
சர்வண் சிங்

படித்தது பத்தாவது வரை...

“என் பூர்வீகம் ராஜஸ்தான். விவசாயக் குடும்பம். பத்தாவது வரைதான் படிக்க முடிந்தது. பின்னர், மும்பைக்குச் சென்று உறவினரின் கெமிக்கல் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். ஆடைகளுக்கான சாயம் தயாரிக்கும் அந்த நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளில் நிறைய அனுபவம் கிடைத்தது. தனியாகத் தொழில் தொடங்கும் எண்ணமும் நம்பிக்கை யும் அதிகரித்தது.

21 வயதில் சென்னைக்கு வந்தேன். முன்பு பணியாற்றிய மும்பை நிறுவன வாடிக்கையாளர்கள் பலரும் சென்னையில் இருந்தனர். அவர் களுடனான தொழில் நட்பில், மணலியில் ஜவுளிக்கடை ஒன்றைத் தொடங்கினேன். அதில் ரீடெய்ல் வியாபாரம் நன்றாக நடக்க, நிறைய தொழில் நண்பர்கள் கிடைத்தனர். 10 வருடங்களுக்குப் பிறகு, ஜவுளி வியாபாரத்தை தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு அடகுக்கடை ஒன்றைத் தொடங்கினேன். அடுத்த பத்தாண்டுகள் அந்த வியாபாரமும் சிறப்பாக நடந்தது.

சாஃப்ட் டாய்ஸ் தயாரிப்பு...

சில ஆண்டுகளுக்கு முன்புவரை சீனாவில் தயாராகும் பொம்மைகளே இந்தியாவில் அதிகம் இறக்குமதி ஆகின. அவை தரம் குறைந்ததாக இருப்பதாக மக்களிடம் அதிருப்தி நிலவியது. அதே நேரம், இந்தியாவில் தயாராகும் சாஃப்ட் டாய்ஸ் பொம்மை களுக்கான வரவேற்பு அதிகமானது. குழந்தைகள், பெண்கள் தவிர, பரிசுகள் கொடுக்கவும் இந்தப் பொம்மைகளைப் பலதரப்பினரும் அதிகம் வாங்கினர். இதுபோன்ற சில காரணிகளை வைத்தே ஒரு தொழிலுக்கான எதிர்காலத்தைத் தீர்மானித்துவிடலாம்.

சர்வண் சிங்
சர்வண் சிங்

பொதுவாக, பொம்மைகளையும் குழந்தைகளையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது. எனவே, இந்த வகை பொம்மைகளுக்கு இனி பெரிய சந்தை வாய்ப்பு பெரிதாக உருவெடுக்கும் என்பதைக் கணித்தேன். இந்தத் தொழிலை என் மகனுக்கு ஏற்படுத்திக் கொடுக்க, இதே சவுகார்பேட்டையில் சிறியதாக உற்பத்திக்கூடத்தைத் தொடங்கினோம். ஆனால், தனியாகத் தொழில் தொடங்க விருப்பப்பட்ட மகன் வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டார்” என்றவர், அடகுக்கடை வியாபாரத்தைத் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு, தானே இந்தத் தொழிலை கவனிக்கத் தொடங்கினார்.

ரீடெய்ல் Vs ஹோல்சேல்

“எந்தத் தொழில் தொடங்கினாலும் தொடக்கத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு லாபம் எதிர்பார்க்காமல் அனுபவங் களைக் கற்றுக்கொள்ளவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஓராண்டில் போதிய அனுபவம் கிடைத்தது. வாடிக்கை யாளர்கள் படிப்படியாக அதிகரிக்கவே, பொம்மைகளுக்கான மூலப் பொருள் களை உற்பத்தி செய்யும் வட மாநில நிறுவனங்கள் என்னை நேரடியாக அணுகினர்.

வியாபார விஷயங்கள் இன்னும் எளிதானது. ரீடெய்ல் விற்பனைக்குத் தான் மக்களின் பார்வைப்படும் இடத்தில் விற்பனை நிலையம் இருக்க வேண்டும். நான் கவனம் செலுத்தும் ஹோல்சேல் விற்பனைக்கு குடோன் கட்டடமே சிறந்தது. இடப் பற்றாக்குறை ஏற்படவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடோன் கட்டடத்துக்கு வந்தோம். உற்பத்திக்கு ஏதுவாக இருப் பதுடன், தயாரித்தப் பொருள் களைச் சேமித்து வைக்கவும், டிஸ்பிளே வைப்பதற்கும் இந்த இடம் மிகச் சரியாக இருக்கிறது.

ரிஸ்க் குறைவான தொழில்...

இந்தத் தொழிலில் ரிஸ்க் மிகக் குறைவுதான். ஆனால், ஏராள மான டிசைன் மற்றும் வெரைட்டி யில் பொம்மைகள் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்புடன் இருப்பதால், தேடிவரும் வாடிக் கையாளர்கள் ஆர்டர் எடுக்காமல் போவதில்லை.

எங்கள் நிறுவனத்தை அறிந்து, சென்னையிலுள்ள பொம்மை வியாபாரிகள் பெரும்பாலா னோரும் நாடி வந்தனர். வியாபாரம் பெருகியது. தொய் வின்றி புதிய பொம்மைகளைத் தயாரித்துக்கொண்டே இருக் கிறோம். நாள் ஒன்றுக்கு ஆயிரக் கணக்கான பொம்மைகள் தயாரித்தாலும் உற்பத்தித் தட்டுப் பாடுதான் நிலவுகிறது. நேரமின் மையாலும், என்னுடைய வாடிக்கையாளர்கள் சில்லறை விலையில் ஓரளவுக்கு லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத் திலும் ஹோல்சேல் விற்பனை மட்டுமே செய்கிறேன்.

பொம்மை தயாரிப்புக்கான மென்மையான துணியை மட்டும் வட மாநிலங்களிலிருந்து வாங்கு கிறோம். பொம்மைக்குள் இருக்கும் பஞ்சை நாங்களே தயாரித்து, தையல் வேலைகளைச் செய்துகொள்கிறோம். டெடி பியர், விலங்குகள், கார்ட்டூன்ஸ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசைன்களில் சிறியது முதல் பல அடி வரை உயரம் வரை யிலான பொம்மைகளைத் தயாரிக்கிறோம்” என்று மகிழ்ச்சிப் பொங்கக் கூறும் சர்வண் சிங், தற்போது ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறார்.

சீன பொம்மைகளைவிட பெஸ்ட்...

“இந்தியாவில் தயாராகும் சாஃப்ட் டாய்ஸ் பொம்மைகளே தரமானவை. இந்த விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக இருப்பதால் இந்த வகை பொம்மைகளுக்கான விற்பனையும் அதிகரித்து வருகிறது. ஏதாவது, கறை ஏற்பட்டாலும் பொம்மைகளை நீரில் அலசி, பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். எனவே, சீனாவிலிருந்து இறக்குமதி யாகும் பிளாஸ்டிக் பொம்மை களைவிடவும் சாஃப்ட் டாய்ஸ் பொம்மைகளுக்கான வரவேற்பு வருங்காலங்களில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

தொழில்ரீதியாகவும், மூலப் பொருள்கள் வாங்கவும்கூட வெளியிடங்களுக்கு அதிகம் பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை. பெரும் பாலான வர்த்தக விஷயங் களை யும் ஆன்லைன் மூலமாகவே செய்கிறேன்.

விளம்பரத்துக்கும் இதுவரை எந்தச் செலவும் செய்ததில்லை. தரமான பொருள்களை உற்பத்தி செய்தால், வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வருவார்கள். சவுகார்பேட்டையில் மிகக் குறுகலான பாதையில் பல நூறு கடைகள் வரிசைகட்டி நிற்கும் பகுதியில்தான் என்னு டைய நிறுவனம் இருக்கிறது. இருப்பினும், எங்கள் நிறுவனத் தைத் தேடிவருவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதான் எங்கள் உண்மையான வெற்றி.

விரலுக்கு ஏத்த வீக்கம்தான் என் பாலிசி. வரவுக்கு ஏற்ற செலவில் உறுதியாக இருப்பதால், இதுவரை தொழில் பயணத்தில் எனக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டதில்லை. தற்போது நிறுவனத்தை மேலும் விரிவு படுத்தவிருக்கிறோம்.

தரமான தயாரிப்பு, வார்த்தை மாறாத வாக்குறுதி, உரிய நேரத்துக்கு டெலிவரி, பண விஷயத்தில் நாணயமாக இருந்தால் போதும், எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம். ஓரிரு லட்சம் ரூபாய் முதலீட்டில்கூட இந்தத் தொழிலை ஆரம்பித்து வெற்றி காண முடியும்’’ என நம்பிக்கையூட்டி நமக்கு விடை தந்தார் சர்வண் சிங். முயற்சி என்றும் திருவினையாக்கும்!

பிட்ஸ்

’’கடந்த ஒன்பது மாதங்களில் 52 லட்சம் பேருக்கு ரூ.13,300 கோடியை வருங்கால வைப்பு நிதியத்தின் மூலம் தந்திருப்பதாக தொழிலாளர் துறை மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் சொல்லி இருக்கிறார்!