Published:Updated:

`மூன்று மாதத் தவணைகளைத் தள்ளிவைக்க சம்மதம்!’ -வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்ற எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி ( vikatan )

வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன்பெற்று, அதைவிடக் கூடுதல் வட்டிக்கு வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற சிறு கடன்களை வழங்கி, அதில் கிடைக்கும் வட்டியிலிருந்துதான் லாபம் ஈட்டிவருகின்றன.

ரிசர்வ் வங்கி உத்தரவின்பேரில், வங்கிக்கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத காலத்துக்கு தவணைகளைத் தள்ளிவைப்பதற்கு வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன. இதில், பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை இதனால் ஏற்படும் வருமான இழப்பு குறித்து கவலைப்படவில்லை. ஆனால், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அப்படியில்லை. இந்த நிறுவனங்கள், பெரும்பாலும் வங்கிகளிடம் கடன்பெற்று, அவற்றின்மூலம் நிதி நிறுவனத்தை நடத்திவருகின்றன. சிறிய அளவிலான நிதி நிறுவனங்கள், தங்களது சொந்த முதலீட்டின்மூலம் நிறுவனத்தை நடத்திவருகின்றன.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
vikatan

வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் பெற்று, அதைவிடக் கூடுதல் வட்டிக்கு வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற சிறு கடன்களை வழங்கி, அதில் கிடைக்கும் வட்டியிலிருந்துதான் லாபம் ஈட்டிவருகின்றன. இந்த மாதத் தவணையை வைத்துதான் மாதந்தோறும் வங்கிகளுக்கு கடனை திருப்பிச்செலுத்தியாக வேண்டும். கொரோனா காரணமாக வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதத் தவணையைத் தள்ளிவைப்பதால் ஏற்படும் இழப்பைச் சமாளிக்க, தாங்கள் பெற்ற வங்கிக் கடன்களையும் தள்ளிவைக்கும்படி வங்கிகளிடம் நிதி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துவந்தன.

ஆனால், இந்தக் கோரிக்கைகளை வங்கிகள்தரப்பு பல்வேறு காரணங்களைக்கூறி மறுத்துவந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கி முதலில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் தவணையை மூன்று மாதங்கள் தள்ளிவைக்க ஒப்புதல் தந்தது. அதன்பின் தற்போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்புதல் தந்துள்ளது. எனினும், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வங்கிக்கடன் விவரங்களைப் பொறுத்துதான் கடன் தவணையைத் தள்ளிவைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

வங்கியாளர் ஆர்.கணேசன்
வங்கியாளர் ஆர்.கணேசன்
vikatan

இதுகுறித்து, நவரத்னா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் முதன்மை இயக்க அலுவலர் ஆர்.கணேசனிடம் கேட்டபோது, ``வாடிக்கையாளர்களின் மூன்று மாதத் தவணைகளைத் தள்ளிவைக்கும்படி அறிவிப்பு வெளியிட்ட ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்கு மூன்று மாத விலக்கு அளிப்பது தொடர்பாக, அந்தந்த வங்கிகளே முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டு விலகிக்கொண்டது. இதனால் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குத்தான் பெரிய நெருக்கடி. நிதி நிறுவனங்கள், கடன் பெற்ற வங்கிகளிடம் கோரிக்கை வைத்தபோது வங்கிகள் ஒப்புதல்தரத் தயங்கின. வங்கிகள் இந்த மூன்று மாதத் தவணையைத் தள்ளிவைக்கும் சலுகையை நிதி நிறுவனங்களுக்கு அளிக்க மறுத்தால், அந்த வங்கிகளுக்குத்தான் வாராக்கடன் சுமை ஏறுவதற்கு வாய்ப்புள்ளது. இதை உணர்ந்துகொண்டதால், தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும், எஸ்பிஐ வங்கியும் ஒப்புதல் தந்துள்ளன. மற்ற வங்கிகளும் விரைவில் இதற்கு சம்மதிக்கக்கூடும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு