Published:Updated:

'சி.இ.சி.எல்!' - கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்குகிறது எஸ்பிஐ

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ ( vikatan )

ஏற்கெனவே எஸ்பிஐ வங்கியில் தொழில்கடன் பெற்றுள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் வணிகம் பாதிப்படைந்திருந்தால், அவர்களுக்கு கூடுதலாக சிறப்பு வங்கிக்கடன் கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிக்கடனுக்கு, சி.இ.சி.எல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் சிறு குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனை அனைத்தும் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இவர்களுக்கு கைகொடுப்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ முன்வந்துள்ளது. இதுகுறித்து தனது அனைத்து தலைமைப் பொது மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ
vikatan

அந்த சுற்றறிக்கையில், 'ஏற்கெனவே, எஸ்பிஐ வங்கியில் தொழில்கடன் பெற்றுள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் வணிகம் பாதிப்படைந்திருந்தால், அவர்களுக்குக் கூடுதலாக சிறப்பு வங்கிக்கடன் கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிக்கடனுக்கு 'கோவிட் 10 எமர்ஜென்சி கிரெடிட் லைன் (சி.இ.சி.எல்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த நிறுவனம் தொழில் நடத்துவதற்காகப் பெற்றுள்ள வங்கிக்கடன் தொகையில் 10% அளவுக்கு கூடுதலாகக் கடன் வழங்கலாம். இந்த கடனுக்கான வட்டி விகிதம் 7.25 சதவிகிதமாக இருக்கும். இந்தத் திட்டம், ஜூன் 30, 2020 வரை செயல்படுத்தப்படும். இந்தக் கூடுதல் வங்கிக்கடன் பெறுவதற்கு புராசஸிங் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கடன் பெற்றதிலிருந்து 6 மாத காலத்துக்கு கடனை செலுத்தத் தேவையில்லை. அதன்பின்னர், 6 தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது.

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ
vikatan

கொரோனா வைரஸ் பாதிப்பால் வருமானத்தை இழந்த சிறு குறு நிறுவனங்கள், ஏற்கெனவே பெற்ற வங்கிக் கடனை செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது என்ற யோசனையில் இந்த கூடுதல் கடனை அளிக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்துள்ள முதல் வங்கி இதுவேயாகும்.

அடுத்த கட்டுரைக்கு