Published:Updated:

படித்தது ப்ளஸ் டூ... வருமானம் 300 கோடி! கடல் உணவு ஏற்றுமதியில் கலக்கும் ஜெகன்

ஜோசப் ஜெகன்
பிரீமியம் ஸ்டோரி
ஜோசப் ஜெகன்

தொழில்

படித்தது ப்ளஸ் டூ... வருமானம் 300 கோடி! கடல் உணவு ஏற்றுமதியில் கலக்கும் ஜெகன்

தொழில்

Published:Updated:
ஜோசப் ஜெகன்
பிரீமியம் ஸ்டோரி
ஜோசப் ஜெகன்

நாம் நேசித்துச் செய்யும் தொழில் ஒருபோதும் நம்மைக் கைவிடாது என்பதற்கு ஜோசப் ஜெகனின் வெற்றி மிகச் சிறந்த உதாரணம். மீனவக் குடும்பத்தில் பிறந்து 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜெகன், 17 வயதில் மீன் விற்பனைத் தொழிலில் இறங்கி, தற்போது பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்வதுடன், தமிழகத்தில் கடல் உணவுகள் ஏற்றுமதி வணிகத்தில் அசத்திவரும் வெற்றி யாளர்களில் முன்னணியில் இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள ‘செயின்ட் பீட்டர் அண்டு பால்’ நிறுவனத்தில் அவரை சந்தித்துப் பேசினோம்.

“எனது பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம். இளமைக்காலத்தில் சைக்கிளில் மீன் வியாபாரம் செய்து வந்த என் அப்பா, படிப்படி யாக வளர்ந்து மொத்த விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், அவரின் தொழில் நஷ்டமடையவே, என் இரண்டு அண்ணன் களைத் தொடர்ந்து, பள்ளிப் படிப்பை முடித்ததுமே அப்பாவின் தொழிலில் நானும் இறங்கினேன். மீனவர்களிடமிருந்து மீன்களை விலைக்கு வாங்கி, மீன் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தோம். நஷ்டங்களை ஓரளவுக்குச் சரிசெய்த நிலையில், எங்களுக்குப் பணம் வர வேண்டிய பல நிறுவனங்களால் ஏமாற்றங்களைச் சந்தித்தோம். அந்த அனுபவத்தில் ஏற்றுமதித் தொழில் மூலம் வெளிநாடுகளுக்கான நேரடி விற்பனையில் இறங்கும் யோசனை கிடைத்தது.

ஜோசப் ஜெகன்
ஜோசப் ஜெகன்

30 ஆண்டுகளுக்கு முன், என்னுடைய 20 வயதில் சென்னையில் மீன் வியாபாரத்தை ஆரம்பித்தேன். வெளியூரிலிருந்து வந்து உள்ளூர் வியாபாரிகளுக்கு நான் போட்டி யாளராக மாறியதால், கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டேன். அதை எல்லாம் சமாளித்த நிலையில், சில ஆண்டுகள் கழித்து மெர்சன்ட் ஏற்றுமதியாளராக, துனிசியா நாட்டுக்கு வெளிநாட்டு வர்த்தகத்தைத் தொடங்கினேன். எவ்வளவோ முயன்றும் வங்கிக் கடனுதவி கிடைக்கவில்லை. பல வகை யிலும் திரட்டிய ரூ.2 கோடியுடன், ரூ.1.5 கோடி கடன் பெற்று முதல் ஏற்றுமதியைச் செய்து முடித்தேன்.

முதல்கட்டமாக, எனக்கு வர வேண்டிய 2 கோடி ரூபாய் வருமானம், ‘வருமா... வராதா...’ என்ற பெரும் தவிப்புக்கும் அலைக்கழிப்புக்கும் பிறகு, தாமதமாக வந்துசேர்ந்தது. அதற்குப் பின்னரே நிம்மதி பெருமூச்சு வந்தது. இதுபோன்ற பல்வேறு அனுபவங்களால் ஏற்றுமதித் தொழில் குறித்து நன்கு அறிந்து, வெவ்வேறு நாடுகளுக்கும் வர்த்தக வாய்ப்பை விரிவுபடுத்தினேன். இந்தியாவிலிருந்து செல்லும் ஸ்கிப்ஜாக் டுனா (Skipjack Tuna), யெல்லோஃபின் டுனா (Yellowfin Tuna) மீன்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருந்ததால், ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த இரண்டு வகை மீன்களை மட்டுமே ஏற்றுமதி செய்தேன். பின்னர், நண்டு தவிர, பலதரப்பட்ட கடல் உணவுகளையும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தேன். சொந்த ஊரில் அப்பாவின் தொழிலைக் கவனித்துவந்த இரண்டு அண்ணன்களும், என் தம்பியும் என்னுடைய தொழிலில் இணைந்தனர்.

படித்தது ப்ளஸ் டூ... வருமானம் 300 கோடி! கடல் உணவு ஏற்றுமதியில் கலக்கும் ஜெகன்

ஓரளவுக்கு வளர ஆரம்பித்ததுமே வங்கிக் கடனுதவிகள் எளிதாகக் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால், ‘இதுபோதும்’ என்று வளர்ச்சியை நிறுத்திக்கொள்ள வில்லை. என் அப்பா காலத்தில் தொடங்கிய உள்ளூர், வெளியூர் மார்க்கெட்டுகளுக்கான மொத்த விற்பனையைத் தற்போது ஐந்து மாநிலங்களுக்கு விரிவுபடுத்தி இருக்கிறோம். ஏற்றுமதி வர்த்தகத் துக்கான சொந்த யூனிட்டை, 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, மேனுஃபேக்சரிங் ஏற்றுமதியாள ராக மாறினோம். ஒருகட்டத்தில் சொந்தப் படகு மூலம் மீன் பிடிக்க ஆரம்பித்து, தற்போது 23 படகுகள் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழிலையும் மேற்கொள்கிறோம்” என்று தொழிலில் படிப்படியாக வளர்ந்த விதத்தை மகிழ்ச்சியுடன் கூறியவர், நிறுவனத்துக்குள் நம்மைச் சுற்றிக்காட்டினார்.

இவர்களின் ஏற்றுமதியில் 70% அளவுக்கு, மீனின் தோல் பகுதியை நீக்கி சமைக்க ஏதுவாக வெறும் இறைச்சியாகவே அனுப்புகிறார்கள். அதற்கான சில யூனிட்டுகளையும் சென்னையில் வெவ்வேறு இடங் களில் வைத்திருக்கிறார்கள். ஏற்றுமதித் தரத்திலான கடல் உணவுகளை, -40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உறையச் செய்து, - 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பதப்படுத்தி வைத்து, வெளிநாடு களுக்குக் கப்பல்கள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர்.

படித்தது ப்ளஸ் டூ... வருமானம் 300 கோடி! கடல் உணவு ஏற்றுமதியில் கலக்கும் ஜெகன்

“சில வகையான மீன்கள் சில கடல் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். சொந்தப் படகுகள் மூலம் பிடிக்கும் மீன்கள், எங்கள் ஏற்றுமதியில் 5% மட்டுமே கிடைக்கின்றன. அதனால், சீஸன் நேரங்களில் கிடைக்கும் மீன் களைப் பல மாநில மீனவர் களிடமிருந்து வாங்குவோம். குளிர் பதனக்கிடங்கில் -22 டிகிரி செல்சியஸ் உறைநிலை வெப்ப நிலையில் பதப்படுத்துவதால், நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் வேதிமாற்றம் தடுக்கப் பட்டு, அவை ஒரு வருடத்துக்கும் மேலாகக் கெடாது. இருப்பினும், பதப்படுத்திய கடல் உணவுகளைச் சில மாதங்களுக்குள் விற்பனை செய்துவிடுவோம். இந்தஃ ப்ரோஸன் ஏற்றுமதி (Frozen Fish Export) முறையில் அதிக வகையான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதில் சென்னையிலேயே நாங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறோம்.

படித்தது ப்ளஸ் டூ... வருமானம் 300 கோடி! கடல் உணவு ஏற்றுமதியில் கலக்கும் ஜெகன்

ஆழ்கடலுக்குப் போன எங்கள் படகுகள் விடியற்காலை இரண்டு மணிக்குக் கரைக்குத் திரும்பும். அதிலிருந்து மீன்களைத் தரம் பிரிக்கும் பணிகளுடன், பிற மீனவர்களிடம் தேவையான மீன்களைக் கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் வேலைகளை முடிப்பது, ஏற்றுமதி உட்பட எல்லா வேலைகளையும் முடிக்க இரவு 11 மணி ஆகிவிடும். இதனால், தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்க நேரம் கிடைக்கும். வர வேண்டிய பணம் தாமதமாவது, தொழில் போட்டிகள், டெலிவரி சிக்கல்கள் என எத்தகைய சவால்களையும் நிதானத்துடன் எதிர்கொள்வதால் இலக்கை நோக்கிச் சரியாகச் செல்ல முடிகிறது.

படித்தது ப்ளஸ் டூ... வருமானம் 300 கோடி! கடல் உணவு ஏற்றுமதியில் கலக்கும் ஜெகன்

பல்வேறு நாடுகளிலும் எங்கள் பிராண்டு உணவுகளுக்கு வரவேற்பு இருப்பதால், எங்களிடமிருந்து வாங்கும் கடல் உணவுகளை நேரடியாகவும், மதிப்புக்கூட்டல் செய்தும் சில நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. உள்நாட்டு மீன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் கேரளாவில்தான் அதிக அளவில் மீன் சப்ளை செய்கிறோம். அடுத்தகட்டமாக, நேரடியாகச் சில்லறை விற்பனையிலும் களமிறங்க முடிவெடுத்திருக்கிறோம்” என்று தங்களின் அடுத்தத் திட்டம் குறித்தும் சொல்கிறார் ஜெகன்.

படித்தது ப்ளஸ் டூ... வருமானம் 300 கோடி! கடல் உணவு ஏற்றுமதியில் கலக்கும் ஜெகன்

ரிப்பன் ஃபிஷ், கட்லா, ஸ்கிப்ஜாக், மேக்ரல், நன்னீர் இறால் உட்பட 25 வகை கடல் உணவுகளை பாங்காக், துனிசியா, ஸ்பெயின், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். தினமும் சராசரியாக 20 லட்சம் கிலோ மீன்கள் விற்பனையுடன், 1,200 ஊழியர் களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் ஜெகன், ஆண்டுக்கு 300 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்கிறார்.

“ஃபேக்டரி நிர்வாகத்தைப் பெரிய அண்ணனும், உள்ளூர் மார்க்கெட் மற்றும் ப்ரீ புராசஸிங் வேலைகளை இரண்டாவது அண்ணனும், மீன்பிடித் தொழிலை தம்பியும் கவனித்துக்கொள்கின்றனர். மீன்பீடித் தொழிலுடன் ஏற்றுமதி வேலைகளை நான் கவனிக்கிறேன். எங்களால் முடிந்த அளவுக்கு, இந்த நிறுவனத்தை உயர்த்தும் உத்வேகத்துடன் தொடர்ந்து உழைப்போம்” என்று தன்னம்பிக்கையுடன் கூறி முடித்தார் ஜெகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism