Published:Updated:

தொழில் வளர்ச்சிக்கு புதிய உத்திகள்..! ‘செயல்’ கருத்தரங்கில் நிபுணர்கள்

கருத்தரங்கு
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்தரங்கு

கருத்தரங்கு

அனைத்துவிதமான தொழில் சார்ந்த சந்திப்புகளும் இணையம் மூலமாக நடந்து வரும் வேலையில் நேரடியாக நடக்கும் நிகழ்ச்சிகள் குறைவு. கடந்த வாரம் `செயல்’ அமைப்பின் தொழில்முனைவோர் கருத்தரங்கு இரண்டு நாள் நேரடியாக நடந்தது. எட்டு முக்கியமான பேச்சாளர்கள் தொழிலில் உள்ள அனைத்து அம்சங்களைக் குறித்தும் உரையாற்றினார்கள். ஒரு தொழில் நிறுவனத்தின் இலக்குகளை எப்படி நிர்ணயம் செய்வது, நிறுவனத்துக் கான உத்திகளை எப்படி வகுப்பது, நிதி நிலை குறித்த ஆய்வு என 360 டிகிரியில் எடுத்துச் சொல்வதாக இருந்தது இந்த நிகழ்ச்சி.

எதுவும் மோசமான ஐடியா இல்லை...

இந்த நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவைச் சேர்ந்த சுஜித்குமார் உரையாற்றினார்.

‘‘இந்த உலகில் எந்த ஐடியாவும் மோசமான ஐடியா கிடையாது. அதேபோல, விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தால் எதுவும் கிடைக்காது.யோசனை என்பது இரு புதிய விஷயங்களை இணைப்பதாகக் கூட இருக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை போன் மட்டுமே இருந்தது. போனில் கேமரா இணைந்தால் என்ன என்று சிந்தித்ததால் மட்டுமே தற்போது நாம் வைத்திருக்கும் மொபைல் போன்கள் உள்ளன. இதன் அடுத்தகட்டமாக போன் இல்லாமல் பேச முடியுமா என்று யோசித்தன் விளைவுதான், ஆப்பிள் வாட்ச்.

தொழில் வளர்ச்சிக்கு புதிய உத்திகள்..! ‘செயல்’ கருத்தரங்கில் நிபுணர்கள்

சமூக வலைதளங்கள் இல்லாத சமயத்தில் முன்பு எங்கள் நிறுவனத்தில் (இன்ஃபோசிஸ்) ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருந்தோம். அப்போது அனைத்துத் தரப்பின் கவனத்தைப் பெற 100 அடிக்கு ஒரு கேக் செய்யலாம் என்னும் யோசனையை என்னுடைய உயர் அதிகாரி யிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அந்த யோசனையை நிராகரித்துவிட்டார். வேறு சமயத்திலும் இதே ஐடியாவைத் தெரிவித்தேன். அப்போதும் அவர் நிராகரித்துவிட்டார். ‘‘இந்த ஐடியா எனக்குப் பிடிக்கவில்லை; அதனால் இனி அதைச் சொல்லாதீர்கள்’’ என்று என்னிடம் சொல்லி விட்டார்.

அடுத்த சில மாதங்களில் அவர் வேலையில் இருந்து விலகி னார். அந்தச் சமயத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுமார் 7,000 பணியாளர்கள், நான்கு மணி நேரம் செலவிட்டு கேக் தயாரித்தார்கள். சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில் அப்போது அது பரவலாகப் பேசப்பட்டது. அப்போது என்னுடைய பழைய மேனேஜர் என்னைத் தொடர்புகொண்டு, மிகவும் பாராட்டினார். எதற்கு இதைச் சொல்கிறேன் எனில், உங்கள் பணியாளர்கள், நண்பர்கள் அல்லது வேறு துறையில் என எங்கிருந்து வேண்டுமானாலும் உங்களுக்கு ஐடியா கிடைக்கலாம்.

ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி அடைந்தற்கு முக்கியமான காரணம், அசெம்பிளி லைன். ஆனால், ஹென்றி ஃபோர்டு அதற்கான ஐடியாவைக் கண்டுபிடித்தது யாரும் யோசிக்க முடியாத இடத்தில். மாட்டிறைச்சி விற்பனை செய்யும் இடத்தில் உள்ள நடைமுறையைப் பின்பற்றிதான் அசெம்பிளி லைன் முறையைக் கொண்டு வந்தார். அதுபோல், உங்களுக்கு ஐடியா எங்கிருந்து வேண்டு மானாலும் கிடைக்கலாம். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

பென்சிலின், கோககோலா, கார்ன் பிளேக்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், மைக்ரோவேவ் அவன், எக்ஸ் ரே உள்ளிட்ட பலவும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாததுபோல இருந்தாலும் இவை அனைத் துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இவை அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான். வேறு ஒரு விஷயத்துக்கான ஆராய்ச்சியில் இருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டவை’’ என்று பேசி முடித்தார் அவர்.

திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி...

உத்திகள் வகுப்பது குறித்து முரளிசுந்தரம் உரையாற்றினார். ‘‘ஐ.பி.எம் நிறுவனம் ஸ்டார்ட் அப் குறித்த சர்வேவை நடத்தியது. அதில் இரண்டு வகையான நிறுவனங்கள் இருந்தன. ஒரு பிரிவில் எந்த விதமான செயல் திட்டமும் இல்லாத நிறுவனங்கள், மற்றொரு பிரிவில் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்பட்ட நிறுவனங்கள். ஐந்தாண்டு களுக்குப் பிறகு, அந்த நிறுவனங் களைத் தேடி ஆய்வு நடத்தப் பட்டது. அப்போது செயல் திட்டத்தின் மூலம் செயல்பட்ட நிறுவனங்களில் 90 சதவிகிதத் துக்கு மேல் வெற்றி அடைந் திருக்கின்றன. ஆனால், செயல் திட்டம் இல்லாமல் மனம் போன போக்கில் செயல்பட்ட நிறுவனங்களில் 90% அளவுக்கு தோல்வி அடைந்திருக்கின்றன. இந்தப் பிரிவில் சில நிறுவனங்கள் மட்டுமே பெரு வெற்றியை அடைந்திருக்கின்றன.

செயல்திட்டங்கள்தான் உங்கள் வெற்றிக்குக் காரணமா என நிறுவனங்களிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால், அவர்களின் செயல் திட்டத்துக்கும் பிசினஸுக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் ஏன் வெற்றி பெற்றது எனில், செயல்திட்டத்தைவிட அந்தச் செயல்திட்டம் உருவாக்கும் புராசஸ் காரணமாகவே வெற்றி அடைந்தோம் எனத் தெரிவித்திருக் கிறார்கள். அதனால் திட்டம் வெற்றி அடைகிறதோ இல்லையோ, சரியான திட்டத் துடன் இறங்கினால், அந்த புராசஸ் அடுத்தடுத்த வெற்றி களைத் தரும் என அவர் பேசினார்.

சுஜித் குமார், முரளிசுந்தரம், செல்வகுமார், ஹனி செந்தில்
சுஜித் குமார், முரளிசுந்தரம், செல்வகுமார், ஹனி செந்தில்

எஸ்.எம்.இ-கள் செய்யும் தவறுகள்...

நிறுவனத்தின் விற்பனை மற்றும் ஸ்கேல் அப் குறித்து செல்வகுமார் உரையாற்றினார். ‘‘பல எஸ்.எம்.இ நிறுவனங்கள் கடைசி வரைக்கும் எஸ்.எம்.இ ஆகவே இருக்கின்றன. கோவிட் உள்ளிட்ட பல காரணங்கள் சொன்னாலும், ஜி.எஸ்.டி வரி தொடர்ந்து உயர்ந்துகொண்டு தான் இருக்கிறது. விற்பனை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த விற்பனை வேறு எங்கோ நடக்கிறது. இதற்குக் காரணம், சிறு நிறுவனங்கள் அந்தத் துறையின் மொத்த சந்தை மதிப்பைக் குறித்து யோசிப்பதே இல்லை. மொத்தச் சந்தையில் நம்முடைய பங்கு சிறிய அளவு மட்டுமே என்பது புரிந்தால், அதன் பிறகு, எஸ்.எம்.இ நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.

எஸ்.எம்.இ நிறுவனங்கள் இரண்டு தவறுகள் செய் கின்றன. புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறியாமல் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே தொடர்ந்து வியாபாரம் செய்வது. ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பது.

உதாரணமாக, உங்களிடம் இருக்கும் பலவிதமான பொருள்கள் மற்றும் சேவைகள் குறித்து வாடிக்கையாளர் களுக்குத் தெரிவிப்பதில்லை. மேலும், ஆண்டுக்கு ஒருமுறை வாங்கும் வாடிக்கையாளர்களை எப்படி ஆண்டுக்கு இரு முறை வாங்க வைப்பது என்று யோசிப்பதில்லை. இதை ‘Upselling and cross selling’ என்பார்கள். இது குறித்து எஸ்.எம்.இ நிறுவனங்கள் யோசிக்க வேண்டும்’’ என்றார்.

சமூக வலைதளத்தில் கன்டன்ட்தான் முக்கியம்...

சமூக வலைதளம் குறித்து ஹனி செந்தில் பேசினார். ‘‘சமூக வளைதளங்கள் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்னும் சூழல்தான் இருக்கிறது. நான் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கிறேன். வீடு கட்டுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அதன் நடைமுறைகள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும்போது ஒரு வீடியோவுக்கு 1,000 பார்வை யாளர்கள் இருந்தாலே அதிகம். ஆனால், தற்போது ஒரு மாதத்துக்கு 1,000 விசாரணைகள் வருகின்றன. இவை அனைத்தும் பிசினஸாக மாறாது. ஆனால், புதிய வாடிக்கையாளர்களை உங்களுக்குக் கொண்டுவரும்.

பெரிய கேமரா, எடிட்டிங் போன்றவை தேவை என நினைக்கிறார்கள். ஆனால், மொபைல் போன் மூலமாகவே வீடியோ எடுக்கிறேன். பார்வையாளர்களுடன் என்ன உரையாடுகிறோம் என்பதுதான் முக்கியம்.கேமரா உள்ளிட்டவை பிறகுதான். பெரிய செலவு இல்லாமல் நமக்கான வாடிக்கையாளர்களை சமூக வளைதளங்கள் மூலம் கண்டறிய முடியும்’’ என செந்தில் பேசினார்.

வளரும் தொழில்முனைவோர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் கிடைத்தன!