Published:Updated:

HCL: `விலகிய ஷிவ் நாடார்’ - தலைமைப் பொறுப்பேற்கும் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா

ரோஷினி - ஷிவ் நாடார்
ரோஷினி - ஷிவ் நாடார்

``நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களும் மக்களும் அசாதாரண சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றனர்.” - ஷிவ் நாடார்

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிகர லாபத்தில் 31.7 சதவிகித ஏற்றத்தை சந்தித்தது. இதனால் இந்நிறுவனத்தின் நிகர லாபமானது 2,925 கோடி ரூபாயானது. இதோடு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடாரும் அந்தப் பொறுப்பிலிருந்து தற்போது விலகியுள்ளார். இவருக்கு அடுத்த தலைவராக, அவரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா பொறுப்பேற்க உள்ளார். அதே சமயம் ஷிவ் நாடார் தலைமை மூலோபாய அதிகாரி (chief strategic officer) பொறுப்பின் மூலம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தொடர்வார்.

ஹெச்.சி.எல்
ஹெச்.சி.எல்

இந்நிறுவனத்தின் வருமானமும் 8.6 சதவிகிதம் உயர்ந்து 17,841 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த காலகட்டத்தில் ரூ.16,425 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரவுள்ள மூன்று காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் வருவாயானது 1.5 சதவிகிதம் முதல் 2.5 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எபிட்டா வருமானம் 34.30 சதவிகிதம் உயர்ந்து ரூ. 4,566 ஆக உள்ளது. இது கடந்த காலகட்டத்தில் ₹3,401ஆக இருந்தது. தற்போது முடிந்துள்ள ஜூன் காலாண்டு வரை ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 1,50,287 பணியாளர்கள் உள்ளன. இதில் புதிதாகச் சேர்ந்துள்ள 7,005 பணியாளர்களும் அடங்குவர்.

Vikatan

இது பற்றி ஷிவ் நாடார் கூறுகையில், ``நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களும் மக்களும் அசாதாரண சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றனர். எனினும், இந்த நிலைமை நிறுவனங்களின் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர உதவியுள்ளது. ஹெச்.சி.எல் தன் கூட்டாளிகளுடன் இணைந்து டிஜிட்டல் மாற்றத்துக்கான வழிமுறைகளை சாத்தியப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் சரியான நடவடிக்கைகள் மட்டும் நிலைத்து நிற்கக்கூடிய வணிக வழக்கங்களை பின்பற்றி நிச்சயம் நாம் வலுவான நிறுவனமாக உயர்வோம்” என்றார்.

 ஷிவ்   நாடார்
ஷிவ் நாடார்

அடுத்த நிதி ஆண்டில் தொலைத்தொடர்பு துறை, நிதி சேவை, தயாரிப்பு, சுகாதாரம், வாழ்க்கை அறிவியல் என 11 புதிய ஒப்பந்தங்களை ஹெச்.சி.எல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் புதிய தலைவரின் கீழ் ஹெச்.சி.எல் நிறுவனம் எவ்வாறு செயல்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு