Published:Updated:

ரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்காவின் பிரபல நிறுவனம் ரூ.5,656 கோடி முதலீடு!

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி ( vikatan )

``இந்திய டிஜிட்டல் துறையில் மாற்றத்துக்காக சில்வர் லேக் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று ரிலையன்ஸ் ஜியோ குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.5,655.75 கோடி மதிப்புள்ள 1.15% பங்குகளை வாங்கவுள்ளது. கடந்த மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ.43,574 கோடி அளவுக்கு முதலீடு செய்து 9.99% பங்குகளை வாங்கியது. அதையடுத்து, இன்னொரு பெரிய அளவிலான முதலீட்டு ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடியாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ

உலக வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வது குறித்த பதற்றத்தில் இருக்கின்ற சூழலில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்தடுத்து பெரிய அளவிலான அமெரிக்க முதலீடுகளைக் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``இந்திய டிஜிட்டல் துறையில் மாற்றத்திற்காக சில்வர் லேக் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனமானது, ஏற்கெனவே, கணினி தயாரிப்பு நிறுவனமான டெல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 2013-ம் ஆண்டுமுதலாக இணைந்து செயலாற்றி வருகிறது. டெல் நிறுவனத்துக்கு பெரிய முதலீடுகளை ஏற்படுத்தித் தருவது, அதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவது என, அதன் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்ட சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனம், இந்த ஆண்டுத் தொடக்கத்தில், டெல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 29% பங்குகளை வாங்கியுள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
vikatan

மேலும் அலிபாபா, ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களிலும் முதலீடு செய்து அந்த நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில்தான் ட்விட்டர் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. எனவே, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தனித்துவத்தோடு செயல்பட்டுவரும் ரிலையன்ஸ் ஜியோ, மேலும் வலிமையோடும் புத்துணர்வோடும் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு