Published:Updated:

சிறப்பான வருமானம் தரும் சிறுமலை வாழை!

சிறுமலை வாழை
பிரீமியம் ஸ்டோரி
சிறுமலை வாழை

ஜி.ஐ பிசினஸ்

சிறப்பான வருமானம் தரும் சிறுமலை வாழை!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
சிறுமலை வாழை
பிரீமியம் ஸ்டோரி
சிறுமலை வாழை

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இருந்து மதுரை நோக்கி கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் செல்கின்றனர். அப்போது மாங்காட்டு மாமுது மறையோன் என்ற வழிப் போக்கனிடம் மதுரை செல்லும் வழி கேட்டுள்ளனர். அப்போது அவர் வழி சொல்லும்போது முக்கனிகளான மா, பலா, வாழை விளையும் சிறுமலை குறித்தும் கூறியிருக்கிறார்.

கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள சிறுமலையில் மூலிகைச் செடிகளும் மரங்களும் நிரம்பியுள்ளன. அதே போல, சிறுமலையில் உள்ள மண்வளமும் சீதோஷ்ண நிலையும் அங்கு விளையும் வாழைப்பழத்தின் ருசிக்கு காரணமாக உள்ளது.

சிறப்பான வருமானம் தரும் சிறுமலை வாழை!

சிறுமலை அருகே உள்ள பழநி கீழ்மலை, பண்ணைக்காடு, கே.சி.பட்டி, தாண்டிக்குடி, ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஆகிய மலைப் பகுதிகளில் மலைவாழைப் பழங்கள் விளைவிக்கப்பட்டாலும் சிறுமலை வாழையின் ருசி தனித்துவமாகவே உள்ளது. பழத்தின் தோல் கரடுமுரடாகவும் கருத்தும் இருக்கும். ஆனால் 15 நாள்கள் வரை சிறுமலை வாழைப்பழம் அழுகாது. இந்தப் பழத்தை சாப்பிட்டால் சளி பிடிக்காது, மலச்சிக்கல் ஏற்படாது. இதில் வைட்டமின் சி மற்றும் அதிகமான நுண்ணூட்ட சத்து நிறைந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சிறுமலை வாழைப் பழத்துக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அங்கீகாரமான புவிசார் குறியீடு கொடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமலையில் ஆறு தலைமுறை களாக வாழை விவசாயம் செய்துவரும் ரவிச்சந்திரனிடம் பேசினோம்.

‘‘சிறுமலைக்கு கால்நடையாகவும், கழுதையிலும், குதிரையிலும் சென்ற காலத்தில் இருந்து விவசாயம் செய்து வருகிறோம்.

சிறுமலையில் 15,000 ஏக்கர் வரை வாழை விவசாயம் நடந்து வந்தது. தற்போது படிப்படியாகக் குறைந்து 700 ஏக்கர் வரை மட்டுமே விவசாயம் நடக்கிறது. மலையில் உள்ள கரடுகளை சீரமைத்து 8 அல்லது 10 அடி இடைவெளியில் கன்றுகளை நட்டால், 11-வது மாதத்தில் வாழை காய்ப்புக்கு வந்துவிடும். சமவெளிகளில் செய்யப்படும் வாழை விவசாயம் போல, கன்றுகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை, மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை. ஆண்டுக்கு இரு முறை சருக்கு கொந்தம் செய்ய வேண்டும். அதாவது, வாழை மரத்தில் இருக்கும் காய்ந்த சருகுகளை வெட்டி சீரமைப்பது, இதே போல, ஆண்டுக்கு நான்கு முறை களை எடுத்தால் வாழையின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

காட்டைச் சீரமைப்பது, குழி பறிப்பது, கன்றுகள் வாங்கி நடுவது, வேலி அமைப்பது என மிகவும் குறைவான செலவில் வாழையைப் பயிரிட்டு வாழையடி வாழையாக நல்ல விளைச்சலைக் கொடுத்து வந்தது. இதனால் சென்னை. கோவை, திருப்பூர், மதுரை எனத் தமிழகம் முழுவதும் வியாபாரம் இருந்தது.

தற்போது உற்பத்திக் குறைவு காரணமாகத் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில்தான் வியாபாரம் உள்ளது. புவிசார் குறியீடு பெற்றதைத் தொடர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் எவ்வித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை. சிலர் தனிப்பட்ட முயற்சியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி செய்தனர். அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.

1970-களுக்குப் பிறகு வியாபார நோக்கில் பிற வாழையினங்களை இங்கு பயிரிட்டனர். அதே போல சவ்சவ் உள்ளிட்ட பயிர்களையும் அதிகமாகப் பயிரிடத் தொடங்கியதால் என்னவோ, வாழையில் முடிகொத்து நோய் ஏற்படத் தொடங்கியது. இதனால் வாழையடி வாழையாக விவசாயத்தைத் தொடர முடியாமல் பலரும் வேறு விவசாயத்தைச் செய்யத் தொடங்கினர்.

சிறப்பான வருமானம் தரும் சிறுமலை வாழை!

காட்டைச் சீரமைக்க, குழி பறிக்க ஒரு நபருக்கு 500 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். கன்றுக்கு 20 முதல் 30 ரூபாய் ஆகும். இதை மூன்று நாள்களில் ஒரு ஏக்கரில் 40 ஆள்கள் வேலை செய்தால் சுமார் 75,000 ரூபாய் செலவாகும்.

முதல் நடவுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். பிறகு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. ஊடு பயிராக எலுமிச்சை, பலா உள்ளிட்ட வற்றை நடவு செய்யலாம். வாழை சரியாக 11-வது மாதத்தில் காய்ப்புக்கு வந்துவிடும். ஒரு மரத் தாரில் சராசரியாக 5 முதல் 6 சீப்கள் கிடைக்கும். ஒரு சீப்புக்கு 10 முதல் 15 காய்கள் கிடைக்கும்.

காட்டு மாடு, பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து வாழையைக் காப்பாற்றுவதே பெரும் போராட்டம்தான். ஒரு ஏக்கருக்கு 500 முதல் 550 மரங்கள் வளர்த்தால், அதில் பல மரங்கள் காய்ப்புக்கு வருவது இல்லை. காய்ப்புக்கு வந்த மரங்களில் பல வனவிலங்குகளுக்கு உணவாகி விடும். இதுபோக மீதிதான் விவசாயிக்குக் கிடைக்கும்.

வேலி அமைத்து நல்ல முறை யில் பராமரித்தால், ஒரு ஏக்கரில் ஒரு வெட்டுக்கு 30,000 காய்கள் வரை எடுக்கலாம். இதற்கு இயற்கையின் ஒத்துழைப்பும் வேண்டும். இதைப் பொதி பொதியாகக் கட்டி ஏலக் கடைகளில் கொடுப்போம். ஒரு பொதியில் 500 காய்கள் இருக்கும். மூன்று பொதி வெட்ட மூன்று ஆட்கள் தேவை. அவர்களுக்கு வெட்டுக் கூலியாக ரூ.1,500 தர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஒரு ஏக்கருக்கு வெட்டுக் கூலியாக மட்டும் 20,000 ரூபாய் செலவாகும்.

இது மட்டுமல்லாது, காய்கள் இறக்குக் கூலியாக பொதிக்கு 10 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு பொதிக்கு 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4,000 ரூபாய் வரை கிடைக்கும். ஏக்கருக்கு 100 பொதி கிடைத்தால், 50,000 முதல் அதிக பட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், சந்தைகளில் போதிய வியாபாரம் இல்லாததால், விற்பனை மந்தமாகி போதிய விலையும் கிடைக்கவில்லை” என்றார்.

சிறுமலையில் இயற்கை விவசாயம் செய்துவரும் ராஜேஷ் கண்ணாவிடம் பேசினோம்.

ராஜேஷ் கண்ணா
ராஜேஷ் கண்ணா

‘‘சிறுமலையில் உள்ள விவசாயிகள் வணிகநோக்குடன் மருந்துகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் என்னதான் இயற்கை விவசாயம் செய்தாலும் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

பழநி பஞ்சாமிர்தம் தயாரிப் புக்கு சிறுமலை வாழை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால், அதைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவில்லை. பெருவெட்டு காய்களை சந்தை களுக்கும், சிறுவெட்டுகளை பழநிக்கும் கொடுத்து வந்தபோது விவசாயிகளால் தாக்குப்பிடிக்க முடிந்தது. தற்போது பழநிக்கு சிறுமலை வாழை செல்வதில்லை.

ஓராண்டுக்குப் பிறகு ஆறு மாத இடைவெளியில் ஐந்து வெட்டுகள் வரை வாழை எடுக்க முடியும். ஒரு மரத்தில் 16,000 ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட முடிகொத்து நோய்க்கு தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை. அதற்குரிய தீர்வை ஏற்படுத்திவிட்டால், விவசாயிகள் அதிகமாக வாழை பயிரிடுவார்கள். அரசு அதற்கு உரிய விலையை நிர்ணயித்து புவிசார் குறியீடு பெற்றுள்ள வாழை விவசாயத்தை ஊக்குவிக்கும் நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

சிறப்பான வருமானம் தரும் சிறுமலை வாழை!

சிறுமலையில் விளையும் வாழைச் சீப்புகளை பாரம்பர்ய மாக பிய்த்து எடுக்கும் வழக்கம் உள்ளது. ஆனால், பிற மலை வாழைகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்படுபவை. இதை வைத்து சந்தைகளில் வாழையின் உண்மை தன்மையை வியாபாரிகள் கண்டறிந்து வருகின்றனர்.

தற்போது சிறுமலை வாழை உற்பத்தி குறைந்துவிட்டதால், பிற மலைகளில் விளைக்கப்படும் வாழைகளை சிறுமலையில் விளைந்தது எனக் கூறி அதிக விலைக்கு விற்கும் அவல நிலையே பல ஊர்களிலும் பார்க்க முடிகிறது என்று இங்குள்ள வாழை உற்பத்தியாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.

சாப்பிட சுவையானது என்பதுடன் எளிதில் ஜீரணமாகும் சக்தியும் கொண்டது என்பதால், குழந்தைகளுக்கு இந்தப் பழத்தைத் தருவது வழக்கம். இந்த சிறுமலை வாழைப்பழம் இன்னும் அதிகமான அளவில் உற்பத்தி செய்ய, தேவை யான நடவடிக்கையை தமிழக அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே சிறுமலை வாழை விவசாயிகளின் கோரிக்கை!