Published:Updated:

சூரியஒளி மின்சாரத்தில் ரைஸ் மில்... அசத்தும் பெண் தொழில்முனைவோர்!

இந்திரா
பிரீமியம் ஸ்டோரி
இந்திரா

தொழில்

சூரியஒளி மின்சாரத்தில் ரைஸ் மில்... அசத்தும் பெண் தொழில்முனைவோர்!

தொழில்

Published:Updated:
இந்திரா
பிரீமியம் ஸ்டோரி
இந்திரா

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதை வித்தியாசமாக யோசித்து செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்த இந்திரா. 12-ம் வகுப்பு வரை படித்த இந்திரா, தன் கணவர் ராஜகுருவையாவுடன் சேர்ந்து அரசுத் திட்டத்தின் வாயிலாக நிதி உதவி பெற்று சிறுதானிய ரைஸ்மில் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த ரைஸ் மில் முழுக்க, முழுக்க சோலார் மின்சாரம் மூலம் நடத்தி வருவதைக் கேள்விப்பட்டு, அவரை சந்தித் தோம். தன் பிசினஸ் அனுபவத்தை சுவாரஸ்ய மாக எடுத்துச் சொன்னார் அவர்.

“எனக்குத் திருமணமாகி என்னோட கணவரும் நானும் விவசாயம் பார்த்துட்டு இருந்தோம். அப்ப, `வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்துல உறுப்பினரா நான் இருந்தேன். அந்தத் திட்டம் மூலம் ஒவ்வொரு முறையும் மீட்டிங் நடக்குறப்ப, ‘உங்க பஞ்சாயத்துல தொழில்முனைவோரைத் தேர்ந்தெடுங்க’ன்னு சொல்லி கள ஆய்வுக்கு அனுப்பி வைப்பாங்க. நாங்களும் எங்க பஞ்சாயத்தைச் சுற்றியுள்ள எல்லா ஊர்களுக்கும் போய், தொழில்முனை வோரைத் தேர்ந்தெடுக்கிறதுல ரொம்ப ஆர்வமா இருந்தோம்.

இந்திரா
இந்திரா

அந்தச் சமயத்துல குதிரைவாலி விதையை மானிய விலையில் அரசு கொடுத்துச்சு. அதை வாங்கி பயன்பெறும் வகையில விவசாயக் குழுக்கள், சுற்றுவட்டார‌ விவசாயிகள் எல்லோரையும் சந்திச்சு வாங்க வச்சோம். நானும் எங்களுக்குச் சொந்தமான இடத்துல குதிரைவாலி விதைப்பு செஞ்சோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த அளவுக்கு யாரும் அதை ஒரு தொழிலா செய்ய விருப்பம் காட்டல. அதன் பிறகு, நாம ஒருமுறை முயற்சி செஞ்சு பார்ப்போமே என சொந்தத் தொழில் செய்ற என் விருப்பத்தைச் சொன்னேன்.

என் விருப்பத்தைச் சொன்னேனே தவிர, என்ன பண்ணலாம்ங்கிறதைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியல. வேளாண்மைத்துறை அதிகாரிகள்‌ வழிகாட்டுனபடி, சிறுதானியங் களை மதிப்புக்கூட்டி விற்கும் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கலாம்னு ஐடியா வந்துச்சு. அதன்படி, “முதல் நிலை சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் நிலையம்” ஒன்றை ஆரம்பிச்சேன்.

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலமா வங்கிக்கடன் வாங்கி, தொழிலை ஆரம்பிக்கிறதுக்கு அரசாணை வர ரொம்ப தாமதமாச்சு. அதனால வேளாண்மைத்துறை அதிகாரிங்க சொன்னபடி, ‘பிரதம மந்திரியின் ஒரு மாவட்டம், ஒரு விளை பொருள் திட்டத்’தின் மூலமா வங்கிக்கடன் வாங்க முடிவு செஞ்சோம். ‘ரைஸ்மில்’ ஆரம்பிக்க மொத்தம் ரூ.8.50 லட்சம் வேணும்னு மதிப்பீடு செஞ்சு வங்கிக்கடனுக்கு விண்ணப்பிச் சேன். இதுல என்னோட பங்கு ரூ.83,000. அது போக மீதி ரூ.7,48,000 எனக்கு வங்கிக்கடன் கிடைச்சது.

இதுல 35% அதாவது, ரூ.2.90 லட்சம் மானியமாகத் தருவதாகச் சொன்னாங்க. பணம் வாங்கின பிறகு, ரைஸ்மில் ஆரம்பிக்கத் தேவையான‌ இடம், கொள்முதல், மெஷின், மின்சாரம்‌ இவையெல்லாம் செய்யனுமேனு எனக்கு ரொம்ப மலைப்பா இருந்துச்சு. அதுக்கு முதல் படியா, எங்க வீட்டு தொழுவத்துக்கு பக்கத் துல இருக்குற இடத்துல ரைஸ்மில் ஆரம்பிக்கலாம்னு முடிவுசெஞ்சு வேலையை ஆரம்பிச்சோம். ரூ.2.51 லட்சம் செலவு செஞ்சு சுற்றிலும் கூலிங் தகர ஷீட் போட்டு ஷெட் ரெடி பண்ணிட்டோம். மாவு அரவைக்காக ரூ.4.72 லட்சத்துக்கு மெஷின் கொள்முதல் செஞ்சு அதையும் ஓர் இடத்துல பொருத்தி வச்சுட்டோம்.

சூரியஒளி மின்சாரத்தில் ரைஸ் மில்... அசத்தும் பெண் தொழில்முனைவோர்!

அடுத்ததா மின்சாரத் தேவைக்கு சோலார்‌ மின்சாரம் பயன்படுத்தலாம்னு தோணுச்சு. ஏன்னா, எங்க பகுதி முழுவதுமே விவசாய பூமி. இங்க காலையில 9 மணி முதல் மாலை 3 மணி வரை விவசாயிகள் அவங்கவங்க வரப்புகளுக்குத் தண்ணி பாய்ச்ச மின்சாரத்தைப் பயன் படுத்திகிட்டே இருப்பாங்க. அந்தச் சமயத்துல வீடுகளுக்கே குறைவான மின்அழுத்தத்துல தான் மின்சாரம் கிடைக்கும். அதனால, மும்முனை மின் சாரத்தை பிரதானமா நம்பி தொழில் செய்ய முடியாது. அதனால, சோலார் மின்சாரத் தைத் தேர்வு செஞ்சோம். அதுக்காக ரூ.1.50 லட்சம் செலவு செய்து ஆறு கிலோ வோல்ட் மின்சாரம் கிடைக்குற மாதிரி சோலார் தகடு பதிப் பிச்சோம். இதுக்காக எட்டு பேட்டரி, ஒரு இன்வெர்ட்டர், 10 சோலார்‌ போர்டு குடுத்திருக் காங்க.

சாதாரணமா ரைஸ்மில் நடத்த மும்முனை மின்சார இணைப்பு தேவை. ஆனா, எங்ககிட்ட இருக்குற மெஷின் எல்லாமே ஒருமுனை மின் சாரத்துலேயே ஓடக்கூடியது. அதனால் மும்முனை இணைப் புக்காக மின் வாரியத்துக்கு போக வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படல. எங்களுக்கு கிடைக்குற ஆறு கி.வாட் மின்சாரம் மூலமா எங்க ரைஸ் மில்லில் ஒரே நேரத்துல 1 ஹெச்.பி. திறன் கொண்ட இரண்டு மெஷின் களைத் தடையில்லாம ஓட்ட முடியும். பகலில் சோலார்‌ மூலமா சேமிக்கிற மின்சாரத்தை வச்சு ராத்திரியில நாலு மணி நேரம் ரைஸ்மில்லை ஓட்ட லாம். மழைக்காலத்துல அவசரத் தேவைக்குத் தொழில் செய்யணுங்கிறதுக்காக மும்முனை இணைப்பும் வாங்கி வச்சிருக்கோம்.

இதை எல்லாம் தயார் செஞ்சதுக்குப் பிறகு, மதிப்புக் கூட்டலுக்குத் தேவையான சிறுதானிய கொள்முதல், விளம்பரம் இவையெல்லாம் தான் எங்களுக்கு இருந்த அடுத்த பிரச்னை. இதைச் சரி செய்றதுக்காக, எங்க நிலத்துல விதைச்சிருந்த குதிரைவாலியை அறுவடை செஞ்சு அதிலிருந்து மாவு தயார்படுத்தி விற்பனை செஞ்சோம். முழுக்க முழுக்க, நம்முடையை தேவைக்காக இல்லாம வெளிநபர்களும் பயன்பெற்றால்தான் தொழில் நடக்கும். அதனால, எங்களுக்கு பக்கத்துல இருக்கிற விவ சாயிங்க, விவசாயக் குழுக் கள்ன்னு ஒவ்வோர் ஊருக்கும் போயி, எங்க ரைஸ் மில் பத்தி எடுத்துச் சொன்னேன்.

எங்க ஊரைச் சுற்றிலும், 15 கிராம மக்கள் எல்லாருமே அரசி அரைக்க, சிறு தானியங் களைப் பட்டைத் தீட்ட, தொலி நீக்க மல்லாங்கிணறு வரைக்கும் போக வேண்டி இருந்துச்சு. மூட்டை கணக்குல ஆட்டோவுல தானியங்களை ஏத்திக்கிட்டு போயி அரைச்சிட்டு வர விவசாயிங்க நிறைய செலவு செய்ய வேண்டியிருந்துச்சு. இந்த செலவைத் தவிர்க்கத்தான் நாங்க ரைஸ்மில்லைத் தொடங்கினோம்ங்கிறதை விவசாயிங்ககிட்ட சொல்லி புரிய வச்சோம்.

அதுபோல, மற்ற இடங்களில் அரைக்கவோ, பட்டைத் தீட்டவோ தானியங்களை அரைக்கிறப்ப வெளியே வர்ற குருணை, உமி இதையெல்லாம் மில்காரங்களே வச்சுக்குவாங்க. நாங்க அதை எடுத்துக்க மாட்டோம். மாவு அரைக்க வந்தவங்க கிட்டயே திரும்பத் தந்துடுவோம். இப்படி தர்ற உமி, குருணையைத்தான் ஆட்டுத்தீவணமாக, மாட்டுத்தீவணமாக, கோழித் தீவணமாகப் பயன்படுத்துறாங்க. அதனால எங்க ரைஸ் மில் பத்தி எல்லோரும் சீக்கிரமாவே தெரிஞ்சுகிட்டாங்க. விவசாயிகளும் செலவு குறைவு, நல்ல பயன்பெற முடியுதுங் கறதால இப்ப எங்களைத் தேடி வர்றாங்க. விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், மகாராஜபுரம், விஜய கரிசல்குளம், வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், வில்லிபுத்தூர் இப்படி எல்லா ஊர்ல இருந்தும் எங்களைத் தேடி வந்து தானியங்களை அரைக்கத் தந்துட்டுப் போறாங்க.

கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம்னு பல ஊருல இருந்து தொழில்முனைவோர்கள் வந்து பார்த்துட்டுப் போறாங்க. பிரதம மந்திரி திட்டத்துல முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரம் மூலமா ரைஸ்மில்லை வெற்றி கரமாக நடத்திக்காட்டினது இந்தியாவிலேயே நாங்கதான். இந்த விஷயத்தை வேளாண் அதிகாரிகள் சொன்னப்ப எங்களுக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. இந்தப் பெருமையைத் தக்கவச்சுக்கணுங்கறதுக்காக, நாங்க இன்னும் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சிட்டோம். இப்ப நிறைய பேர் எங்களை மாடலாக வச்சு தொழில் ஆரம்பிச்சு நடத்துறாங்க. கடைசியா குஜராத்துல இருந்து வந்த ஒருத்தர் இங்க வந்து ரைஸ் மில் எப்படி நடத்துறாங்கன்னு பார்த்துப் போனார். அவருக்கு இந்தி தெரிஞ்ச ஆள் மூலமா பதில் சொன்னோம். இதையெல்லாம் பாக்குறப்ப, எங்க பொறுப்பு அதிகமாயிட்டதா நினைக்கிறோம். அதுக்கு ஏத்தமாதிரி வேலைகளும் அதிகமாயிடுச்சு. ஆரம்பத்துல பயிரிட்டதை விட கூடுதலா இப்போ 10 ஏக்கரில் குதிரைவாலி பயிரிட எல்லா ஏற்பாடும் செஞ்சிருக்கோம்.

இப்ப இருக்குற சூழ்நிலையில எங்களால ஒரு நாளைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்க முடியுது. இதுக்கிடையில, விவசாயிகள், வெளிநபர்கள் அரைப்புக்காக கொண்டுவரும் தாணியங்களின் எடையைப் பொறுத்து அரைப்பு கூலியும், செலவினங்களும் கணக்கிடுறோம். வியாபாரம் பெருசாகும் பட்சத்தில் இதன்மூலம் கிடைக்கும் மாத வருமானமும் கூடுத லாகக் கிடைக்கும்” என நம்பிக்கை மிளிர பேசினார் இந்திரா.

வித்தியாசமாக யோசித்து செயல்படும் இந்திரா, நிச்சயம் ஜெயிப்பார்!