கொரோனா பாதிப்பால் ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது.

பெரும்பாலானோர் வேலை இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பறிபோயிருக்கிறது. இத்தகைய நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்க, கடந்த மே 12-ல் பிரதமர் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு நிதித் தொகுப்பை அறிவித்தார்.

பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், இந்த நிதித் தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், இதனால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறையும் மிகக் கடுமையான கடன் சுமையும் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். இத்தகைய நிலையிலிருந்து அரசின் நிதிநிலையைக் காப்பாற்ற சில யோசனைகளை முன்வைக்கின்றனர்.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை என்று பார்த்தால், ரிசர்வ் வங்கி தனக்குத் தேவையான அளவுக்கு ரூபாயை அச்சிட்டுக்கொள்வதும், நம் நாட்டில் குடும்பங்களிலுள்ள தங்கத்தைப் பயன்படுத்துவதும் ஆகும். இந்த யோசனைகள் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், பொருளாதாரம் குறித்த சில அடிப்படை விஷயங்களில் தெளிவுகளைப் பெறுவோம்.

சொத்துகளும் செலவினங்களும்..!

இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தனது நிதிநிலையை ஸ்திரமாக வைத்திருக்க நிதிச் சொத்துகளையும் செலவினங்களையும் சமநிலையாக நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் செலவினங்கள் என்று பார்க்கும்போது, புழக்கத்தில் விடுவதற்கான பணத்தை அச்சிடும் செலவு மற்றும் வணிக வங்கிகள் வைத்திருக்கும் ரிசர்வ் இருப்புக்கான வட்டிச் செலவு ஆகியவை. நிதிச் சொத்துகள் என்று பார்க்கும்போது, அரசு வெளியிடும் பத்திரங்கள், அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் தங்கத்தின் இருப்பு ஆகியவை. இவை இரண்டையும் சமநிலையில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி வசமுள்ள பங்குகளும் உபரி நிதியும் பயன்படுத்தப்படும்.

பணம் அச்சடிக்கலாமா?

இந்த நிலையில், அரசு சமீபத்தில் அறிவித்த நிதித் தொகுப்புக்கு உதவும் வகையில் ரிசர்வ் வங்கி, புதிதாக ரூபாயை அச்சடித்து புழக்கத்தில் விடும்போது அதன் நிதிச்சுமை அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனால் ஏற்படும் நிதிச்சுமையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி சில நிதிச் சொத்துகளை அதிகரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகும்.

பொதுவாக, அரசு தன் செலவினங்களுக்காகக் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டும். அந்தக் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்குவதற்கு, பணத்தை அச்சிட்டு அரசுக்கு வழங்கும். இது `பற்றாக்குறை பணமதிப்பு உருவாக்கம்’ (Deficit Monetization) எனப்படும். 1997 வரை இந்த நடைமுறை நம் நாட்டில் முழுச் சுதந்திரத்துடன் செயல்பட்டு வந்தது. ஆனால், 1997-ல் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இந்த நடைமுறையை நிறுத்த முடிவெடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டன. இதனால் அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களைக் கடன் சந்தையில் விற்பனை செய்யும் நிலைக்கு ஆளானது. இதனால் அரசுக்கு ரிசர்வ் வங்கி நிதி வழங்க வேண்டுமெனில், நேரடியாகப் பத்திரங்களை வாங்க முடியாமல், கடன் சந்தையிலிருந்து பத்திரங்களை வாங்க வேண்டிய சூழல் உருவானது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்ய முடிவெடுத்திருந்தாலும், அரசுக்கு நிதி வழங்க ரிசர்வ் வங்கி பணத்தை அச்சிட வேண்டும். அரசுப் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவதன் மூலம் அரசின் கடன் சுமை அதிகரிக்கும். எனவே, அரசு தன் கடன் சுமையைக் குறைக்க, பத்திரங்களை ரிசர்வ் வங்கியின் மூலம் வெளியிட நினைத்தாலும் அதன் நோக்கம் நிறைவேறுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசிடம் வாங்கிய கடன் பத்திரங்களைப் பொதுவில் விற்பனை செய்ய நினைக்கும். இது பணப்புழக்கத்தைக் குறைக்கும்.

தங்கத்தை மக்களிடமிருந்து வாங்குவது..!

அரசின் நிதிச்சுமையைக் குறைக்க முன்வைக்கப்படும் இன்னொரு யோசனை, இந்தியக் குடும்பங்களில் உள்ள தங்கத்தை வெளிக்கொண்டு வருவது. இதன்படி, அரசு இந்தியக் குடும்பங்களிலுள்ள தங்கத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக அரசுக் கடன் பத்திரங்களை வழங்குவது. பின்னர் இந்தத் தங்கத்தை அரசிடமிருந்து ரிசர்வ் வங்கி பெற்றுக் கொண்டு, புதிதாகப் பணத்தை அச்சடித்து அரசுக்கு வழங்கும். ஆனால், கடன் பத்திரங்களை வெளியிட்டு பணத்தை அச்சிடுவதற்கும், தங்கத்தைக் கொடுத்து பணத்தை அச்சிடுவதற்கும் அரசாங்கத்தைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசமில்லை. ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரத்தை வாங்குவதற்கு பதிலாக, இந்தியக் குடும்பங்கள் வாங்கும், அவ்வளவுதான். இப்படிச் செய்வதாலும் அரசின் கடன் சுமை அதிகரிக்கவே செய்யும். எனினும், தங்கத்தை வெளிக்கொண்டு வந்து அதன் மூலம் புதிதாகப் பணம் அச்சிடுவதன் மூலம் சில செளகர்யங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

எளிதான விஷயமல்ல..!

இந்தியக் குடும்பங்களிலுள்ள தங்கத்தை வெளிக்கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. நம் மக்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் அப்படியானது. தங்கத்தை வெளிக்கொண்டு வருவதற்காக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரிய அளவில் பயன் தரவில்லை. தங்கத்துக்கு பதிலாக, அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய மக்களைத் தயார் செய்வதும் கடினமே.

அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துவது..!

அரசின் கடன் சுமையைக் குறைக்க இன்னொரு யோசனையும் சொல்லப்படுகிறது. அது, ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துவது. ரிசர்வ் வங்கியிடமுள்ள அந்நியச் செலாவணி இருப்பு 500 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பில் உள்ள ஒவ்வொரு டாலருக்கும் நிகரான ரூபாய் மதிப்பானது அதன் செலவினத்தில் உள்ளது. அதாவது, ரிசர்வ் வங்கி ரூபாயைச் செலவழித்துத்தான் டாலரைச் சேர்த்திருக்கிறது. எனவே, அந்நியச் செலாவணியை வைத்து புதிதாகப் பணத்தை அச்சிட முடியாது. ஆனால், அந்நியச் செலாவணியை மூன்றாம் நபரிடம் அடமானம்வைத்து நிதி திரட்டலாம். இது தனிநபர் ஒருவர் தன் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது போன்றதுதான். ஆனால், `ரிசர்வ் வங்கி சேர்த்துவைத்துள்ள அந்நியச் செலாவணியை யாரிடம் அடமானம் வைக்க முடியும்...’ என்பதுதான் பெரிய கேள்வி.

அவமானம் தந்த அடமானம்!

அரசின் கடன் சுமையைத் தீர்க்க, மேற்சொன்ன தீர்வுகள் எவையுமே சரியான வழிமுறைகள் அல்ல என்பதுடன், இவை எவையுமே நடைமுறைக்கு ஒத்துவராதவை. மிக நெருக்கடியான காலகட்டத்தில் மட்டுமே இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வந்திருக்கிறது. 1991-ல் இறக்குமதிக்குத் தேவையான டாலர் கைவசம் இல்லாதபோது, ரிசர்வ் வங்கி 47 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிடம் அடமானம்வைத்து டாலரைப் பெற்றது. இது மிகப்பெரிய தேசிய அவமானத்தை நமக்கு ஏற்படுத்தியது. எனவே, இது போன்ற நடைமுறைகளைச் செயல்படுத்துவது மிகவும் சிக்கலானது.

என்னதான் தீர்வு?

இந்த நிலையில், அரசின் கடன் சுமையைக் குறைக்க மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, வரி வருவாய்; இரண்டு, கடன் வாங்குவது; மூன்று, சொத்துகளை விற்பது. இவற்றிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. இப்படிச் செய்வதாலும் அரசின் கடன் சுமை அதிகரிக்கும். ஆனால், தற்போதைய சூழலில் இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டிய நிலையில்தான் நம் அரசாங்கம் இருக்கிறது. கடன் சுமையைக் குறைக்க அரசுக்கு இவை தவிர வேறு வழியில்லை என்பதே நிதர்சனம்.

(‘தி மின்ட்’ (The Mint) நாளிதழில் ஜூலை 22 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம் இது. ‘தி மின்ட்’ நாளிதழின் அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது. ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க: https://www.livemint.com/opinion/online-views/gold-and-forex-reserves-cannot-finance-india-s-stimulus-11595427670410.html)

கட்டுரை ஆசிரியர் பற்றி...

சென்னையில் வசிக்கும் ரவி சரோகி, நிதித்துறை பற்றியும், பொருளாதாரம் பற்றியும் ஆங்கில நாளிதழ்களிலும், பிற இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரை எழுதிவருபவர். செபியில் பதிவுபெற்ற முதலீட்டு ஆலோசகர். `சமஸ்திதி’ (www.samasthiti.in) என்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் துணை நிறுவனர். நார்த் ஆர்க் இன்வெஸ்ட்மென்ட், ஐ.ஐ.எஃப்.எல்., ஜெ.பி.மார்கன், ஹெச்.எஸ்.பி.சி ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்களில் ஏற்கெனவே பணியாற்றியிருக்கிறார்.