பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

சூப்பர் வருமானம் தரும் சோயா பனீர் தயாரிப்பு!

பனீர் தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
பனீர் தயாரிப்பு

தொழில் பழகுவோம் வாங்க! 17

ஒரு காலத்தில் மேற்கத்திய உணவாகக் கருதப்பட்ட பனீர், இப்போது அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் உணவுப் பொருளாக மாறிவிட்டது. மாட்டுப் பால் மற்றும் எருமைப்பாலில் இருந்தே பெரும் அளவில் பனீர் தயாரிக்கப்படும் சூழலில், வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கிளை பரப்பி மணம் வீசுகிறது சோயா பனீர்.

புரதச்சத்து நிறைந்த சோயாபீன்ஸ் உணவை விரும்பி உட்கொண்ட மகாத்மா காந்தி, அதன் நன்மைகள் குறித்துப் பலருக்கும் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது. ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும்’ பழமொழிக்கு ஏற்ப, சோயா பனீர் (சோயா டோஃபு) தயாரிப்புக்கான சாதகமான அம்சங்களை அவசியம் தெரிந்துகொள்ள இது சரியான காலகட்டம். அதனால்தான், சோயா பனீர் உற்பத்திக்கான வரவேற்பு குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் வழிகாட்டுதல் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

சூப்பர் வருமானம் தரும் சோயா பனீர் தயாரிப்பு!

சோயாபீனை மக்கள் விரும்புவது எதனால்?

தானிய வகை உணவான சோயாபீன்ஸில், அதிக அளவிலான புரதச்சத்துடன், கால்சியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. கட்டுப்படியான விலையிலும் கிடைப்பதால், பெரும்பாலான மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் சோயாபீன்ஸ் இடம்பிடித்திருக்கிறது.

சோயா பனீர் ஏன் சிறந்தது?

குழம்பு, கூட்டு போன்று உணவுத் தயாரிப்பில் சோயாபீன்ஸ் நேரடியாகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தேவைக்கு மட்டும்தான் சோயாபீன்ஸ் உதவுமா எனில், நிச்சயமாக இல்லை. ஒரு கப் சோயா பாலில் 80 கலோரிகள், 4 – 4.5 கிராம் கொழுப்பு, 7 – 9 கிராம் புரதம், 4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. ஊட்டச்சத்தைப் பொறுத்தவரை, சோயா பால் பசுவின் பாலுக்குச் சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. தவிர, சோயா மாவு, சோயா புரதம், சோயா சாஸ், சோயா எண்ணெய் என நீண்டுகொண்டே செல்லும் இதுபோன்ற மதிப்புக்கூட்டுப் பொருள்களின் பட்டியலில் சோயா பனீருக்கு உள்ளூர் கடைகள் முதல் உலக அளவிலான ஏற்றுமதி வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன.

சோயா பனீரில் சிறப்பான அம்சம் ஒன்றுண்டு. எந்தவொரு உணவுப் பொருளையும் சமைப்பதால் அதிலிருக்கும் சத்துகளின் விகிதம் குறைவதுடன், பெரும்பாலான சமைத்த உணவை அதிக காலத்துக்கு வைத்திருந்து பயன்படுத்த முடியாது. ஆனால், சோயாபீன்ஸ் பாலை செறிவூட்டி, அதிலிருக்கும் சத்துகள் எந்த விதத்திலும் குறையாமல், ஒருங்கிணைந்த சுருக்கப்பட்ட வடிவமாகத் தயாரிக்கப்படும் பனீரை, சுவை மாறாமல் மாதக்கணக்கில் வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

சூப்பர் வருமானம் தரும் சோயா பனீர் தயாரிப்பு!

இத்தனை நன்மைகளா?

அசைவ உணவுகளுக்கு இணையாக சோயாபீன்ஸிலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. எளிதில் செரிமானமாகக்கூடிய இந்த உணவு, குழந்தைகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களுக்கும் பயன் தரக்கூடியது. 5 – 14 வயதுக்கு உட்பட குழந்தை களின் ஊட்டச்சத்துக்கும் சோயாபீன்ஸ் பங்காற்றுகிறது.

உடலுக்குக் கெடுதல் தரும் கொழுப்புச் சத்து இல்லாததால், சோயாபீன்ஸில் தயாரிக்கப்படும் உணவைச் சாப்பிடுவதால், உடல் பருமன், இதய நோய்கள் ஏற்படுவதற் கான வாய்ப்புகள் குறைவு. உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதால், பாடி பில்டிங் செய்பவர்கள் மற்றும் டயட் உணவுப் பழக்கம் கொண்டவர்களின் மெனுவில் சோயாபீன்ஸ் பிரதான உணவாக இடம் பிடிக்கும். இதுபோன்ற அனைத்து நன்மைகளும், சோயா பனீரைப் பயன் படுத்துவதாலும் உறுதியாகக் கிடைக்கும்.

சூப்பர் வருமானம் தரும் சோயா பனீர் தயாரிப்பு!

தயாரிக்கும் முறை...

சோயாபீன்ஸை நன்கு சுத்தம் செய்து, ஒரு கிலோவுக்கு 3.3 லிட்டர் வீதம் தண்ணீர் சேர்த்து சில மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், ஊறவைத்த சோயாபீன்ஸுடன் ஏழு மடங்கு தண்ணீர் சேர்த்து, அதைப் பால் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் உதவியுடன் பால் மற்றும் சக்கையைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். பிரித்தெடுத்த பாலை 110 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 15 நிமிடங்களுக்குச் சூடுபடுத்தி, குளிர்விக்க வேண்டும்.

செறிவூட்டப்பட்ட இந்தப் பாலில் சிட்ரிக் ஆசிட் (எலுமிச்சைச்சாறு) கலந்தால், குறிப்பிட்ட சில மணி நேரத்தில் பால் திரிந்து, தண்ணீர் தனியாகவும் பனீர் தனியாகவும் பிரியும். தூய்மை யான பருத்தித் துணியைப் பயன்படுத்தி, தண்ணீரை வடிகட்டி, பனீரைத் தனியே சேகரிக்க வேண்டும். இயந்திரத் தின் உதவியுடன் அதிலிருக்கும் நீரை முழுமையாக வெளியேற்றி, கட்டியாக மாற்றலாம். பிறகு, வேண்டிய வடிவத்துக்கு பனீரை கட் செய்து பேக்கிங் செய்யலாம்.

‘Vacuum forming machine’ உதவியுடன், முழுமையாகக் காற்றில்லாத சூழலில் பனீர் பேக் செய்யப்படும். ஆக்ஸிஜன் இல்லாததால் பனீர் நீண்ட காலத்துக்குக் கெட்டுப்போகாது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பல மாதம் வரை பனீரைப் பயன்படுத்தலாம். மசாலா பனீர், இனிப்பு பனீர் உட்பட பல்வேறு பிளேவர் களிலும் சோயா பனீரைத் தயாரிக்கலாம்.

சிறப்பம்சங்கள்...

 கட்டுப்படியான விலையில், பலதரப்பட்ட சரிவிகித சத்துக் களும் நிறைந்த உணவு இது.

 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவான இந்த சோயா பனீர், சரும வறட்சியைத் தடுத்து, சருமப்பொழிவுக்கு உதவும்.

 சோயாபீன்ஸ் கட்டுப்படியான விலையில் தடையின்றி கிடைக்கிறது. பனீர் தயாரிப்புக்கு சோயாபீன்ஸ் தவிர, எந்த மூலப்பொருள்களும் தேவைப் படாது.

சூப்பர் வருமானம் தரும் சோயா பனீர் தயாரிப்பு!

விற்பனைக்கான வாய்ப்பு...

தமிழ்நாட்டில் பனீர் தயாரிப்புத் தொழிற்சாலைகள் மிகக் குறைவாகவே இருப்பதால், நம் மாநிலத்துக்குச் சிறந்த தொழில் வாய்ப்பாக இது அமையும்.

சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், பால் விற்பனை நிலையங்கள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் சோயா பனீரை விற்பனை செய்யலாம்.

வெகுஜன மக்களும் சோயா பீன்ஸைப் பயன்படுத்தி வருவதால், சோயா பனீருக்கான வரவேற்பு வருங்காலத்தில் அதிகரிக்கும். எனவே, விற்பனை வாய்ப்பை விரிவுபடுத்துவதற்கான உத்திகளை மேற்கொண்டால் சிறப்பான பலனைப் பெற முடியும்.

வங்கிக் கடனுதவி...

பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (PMEGP) 7.60 லட்சம் ரூபாய் கடனுடன் (Term Loan), 25% (2 லட்சம் ரூபாய்) மானியமும் பெறலாம்.

மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் டேர்ன் ஓவர்...

இந்த புராஜெக்ட் மதிப்பீட்டின் படி, தினமும் 180 கிலோ பனீரைத் தயாரிக்கலாம். ஒரு கிலோ சோயா பனீர் 90 - 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தோராயமாக ஒரு கிலோ பனீரை 90 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கொண்டால், 180 கிலோ விற்பனையில் ரூ.16,200 வருமானம் கிடைக்கும். மாதத்தில் 25 தினங் களுக்கு உற்பத்தி நடைபெறும் பட்சத்தில், 4,05,000 ரூபாய் வருமானம் ஈட்டலாம்.

போட்டிகள் குறைவாக இருக்கும் இந்தத் தொழிலுக்கு பிரகாசமான விற்பனை வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இந்தத் தொழிலில் களமிறங்க நினைப்பவர்கள், சோயா பனீர் தயாரிப்பில் அனுபவமுள்ள நிறுவனத்தில் அல்லது ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சில வாரங்களாவது பயிற்சி பெற்ற பின், உற்பத்தியைத் தொடங்குவது நல்லது.

(தொழில் பழகுவோம்)