Published:Updated:

சரியான பதம், மாறாத சுவை... தித்திக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!

ஶ்ரீவில்லிபுத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீவில்லிபுத்தூர்

ஜி.ஐ பிசினஸ்

திருநெல்வேலிக்கு அல்வா மாதிரி, ஶ்ரீவில்லிபுத்தூருக்கு பால்கோவா. இந்தப் பகுதியில் பால் பண்ணைத் தொழில்கள் அதிகம் உள்ளன. விற்பனைக்குப் போக மீதமுள்ள பாலை வீணாக்காமல், பால் கோவாவாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வந்தனர் இங்குள்ள மக்கள்.

சரியான பதம், மாறாத சுவை...
தித்திக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!

விறகு அடுப்பில் தயாராகும் பால்கோவா...

சாதாரணமாக பால்கோவா நல்ல தரத்திலும் சுவையிலும் வேண்டுமென்றால், சுத்தமான பால் வேண்டும். அதுவும் தண்ணீர் கலக்காத பாலாக இருக்க வேண்டும். அது ஶ்ரீவில்லி புத்தூரில் நிறையவே கிடைக்கிறது. விறகடுப்பு எரிந்துகொண்டிருக்க... இரும்பு வாணலியில் பால் ஊற்றி அதில் சீனியையும் கொட்டி கொதிநிலைக்கு வந்ததும் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த முறையில் 20 முதல் 30 நிமிடங்களில் பாலை சுண்டக் காய்ச்சினாலே சூடான சுவையான ‘ஶ்ரீவில்லி புத்தூர் பால்கோவா’ ரெடி. பிறகு, இதை வேறொரு அகன்ற பாத்திரத்தில் மாற்றி ஆற வைத்து பேக்கிங் செய்கிறார்கள்.

ஶ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் சிவனான் என்ற ராஜாவிடம் பேசினோம். இவர் 1945-ம் ஆண்டு முதலே பால்கோவா உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகிறார். பால் கோவாவுக்கு ஜி.ஐ குறியீடு கிடைத்த பின்னணியைச் சொன்னார் அவர்.

சரியான பதம், மாறாத சுவை...
தித்திக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!

தினமும் 300 கிலோ...

‘‘2013-ம் ஆண்டு திருநெல்வேலி, ராமையன் பட்டியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் பிரதாபன் தலைமையிலான பேராசிரியர்கள் குழுவினர் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து, பால்கோவா குறித்து ஆய்வு செய்து, புவிசார் குறியீடு வழங்கிட பரிந்துரை செய் தார்கள். பின்னர், 2019-ல் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. இதை ஶ்ரீவில்லிபுத்தூருக்கே கிடைத்த அங்கீகார மாகக் நினைத்து நாங்கள் மகிழ்ந்தோம். எங்களின் கூட்டுறவு சங்கத்தின் மூலம் புவிசார் குறியீடு கிடைத்தது எங்களுக்குப் பெருமை.

இங்குள்ள ஆண்டாள்கோயில் நுழைவு வாயில் அருகிலும், பேருந்து நிலையத்தின் அருகிலும் நமது கூட்டுறவு சங்கத்தின் பால் கோவா விற்பனைக் கடைகள் உள்ளன. 10 லிட்டர் பாலில் 1.25 கிலோ சீனி சேர்த்து காய்ச்சினால், 3.25 கிலோ பால்கோவா கிடைக்கும். தினமும் 300 கிலோ வரை எங்களது கூட்டுறவுக் விற்பனை நிலையங்களில் பால்கோவா விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்கிறோம். சில கடைகளில் ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரையிலும் விற்பனை செய்கிறார்கள்” என்றார்.

ராஜா, விஜய், ராமச்சந்திர ராஜா
ராஜா, விஜய், ராமச்சந்திர ராஜா

ஆண்டாளுக்கு நைவேத்யமான பால்கோவா...

‘‘ஆண்டாள் பாடிய திருப்பாவையில், ‘ஶ்ரீவில்லிபுத்தூர் பசுக்கள் குடம் குடமாகப் பால் தரும்’ எனக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இங்கு கிடைக்கும் பாலுக்கு தனிச்சுவையும் தனித்தன்மையும் உண்டு. முற்காலத்தில் இங்கு நிறைய பசுக்கள் இருந்தன. ஆண்டாளுக்கு மிகவும் பிடித்த உணவில் திரட்டிப் பால் எனப்படும் `அக்கார அடிசல்’ முக்கியமானது. முன்பு சீனி கிடையாது. அதனால், பாலுடன் வெல்லம் கலந்து திரட்டிப்பால் செய்து ஆண்டாளுக்கு நைவேத்யமாகப் படைப்பார்கள்.

‘பகல் பத்து’ உற்சவத்தின் முதல் நாளன்று ஆண்டாள் பிறந்த வீட்டுக்கு வரும்போதும், அதன் பிறகு, ஆண்டாள் ‘பிரியா விடை’ வைபவத்தின்போதும் நைவேத்யமாகத் திரட்டிப்பால் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த திரட்டிப் பால் ஶ்ரீவில்லி புத்தூரிலுள்ள அனைத்து மக்களின் வீட்டில் தயார் செய்து வழிபடக்கூடிய இனிப்புப் பண்டமாகும். இதன் மறு தயாரிப்புதான் பால்கோவா” என்கிற சுவாரஸ்யமான வரலாற்றையும் சொல்கின்றனர் ஆண்டாள் கோயில் அர்ச்சகர்கள்.

சரியான பதம், மாறாத சுவை...
தித்திக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி...

60 ஆண்டுகளுக்கும் மேலாக பால்கோவா உற்பத்தியில் இருக்கும் ஶ்ரீவெங்கடேஸ்வரா விலாஸின் உரிமையாளரான விஜய்யிடம் பேசினோம். “அன்று முதல் நாங்க தயாரிக்கிற பால்கோவா ஒரே தரத்துடனும் சுவையுடனும் இருக்கக் காரணம், பாரம்பர்ய முறைப்படி விறகு அடுப்புல தயார் செய்றதுதான். இதனால, தயார் செய்த நாளிலிருந்து 15 நாள்கள் வரை பால்கோவா கெடாது.

ஶ்ரீவில்லிபுத்தூரில் சுமார் ஆயிரம் பேர் பால்கோவா உற்பத்தியை குடிசைத் தொழி லாகச் செய்து வருகிறார்கள். ஆண்டாள் கோயிலைச் சுற்றி மட்டுமே வெவ்வேறு பெயர் கொண்ட 100-க்கும் மேற்பட்ட பால்கோவாக் கடைகள் உள்ளன. இங்கிருந்து வெளியூர், வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது.

சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் விரும் பிச் சுவைக்கும் இனிப்புப் பண்டம் இது. பால் அல்வா, பால் கேக், சர்க்கரை சேர்க்காத பால் கோவா, கேரட் அல்வா போன்ற பல வெரைட்டிகளில் பால் சேர்க் கப்பட்டு இனிப்புகள் தயாரிக் கப்பட்டாலும் அன்று உற்பத்தி செய்யப்படும் பால் கோவா, அன்றே விற்றுத் தீர்ந்துவிடுவது தான் பால்கோவாவின் சுவை, தரத்துக்கு எடுத்துக்காட்டு. இதற்கு புவிசார் குறியீடு கிடைத்த பிறகு, இன்னும் அதிகமானோர் இந்தத் தொழிலை செய்ய ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர். உள்ளூரில் வேலைவாய்ப்பும் அதிகரித் துள்ளது.

மற்ற ஊர்களில் யாரும் எங்க ஊர்ப் பெயரைப் பயன்படுத்தி பால்கோவா தயாரிக்க முடியாது என்பது எங்களுக்குப் பெருமையாக இருந்தாலும், தரமில்லாத பால், தண்ணீர் கலந்த பால், தரமற்ற சீனி கலந்தும் பால்கோவா செய்யப்பட்டு, இதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது வருத்தமானதாக இருக் கிறது. ஶ்ரீவில்லிபுத்தூருக்கு சொந்த வேலையாக வந்தவர்கள், அலுவல் காரணமாக வந்தவர்கள், ஆண்டாள் கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக வரும் பக்தர்கள் என பலதரப்பினரும் பால்கோவா வாங்கிச் செல்கின்றனர். இதைப் பயன்படுத்தி தரமற்ற, போலியான பால்கோவா விற்பனையும் நடக்கிறது என்பதுதான் வேதனை” என்றார்.

பாலின் சுவைக்குக் காரணம்...

ஶ்ரீவில்லிபுத்தூர் பாலுக்கு மட்டும் ஏன் தனிச்சுவை என ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயியும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவருமான ராமச்சந்திர ராஜாவிடம் கேட்டோம்.

‘‘பொதுவா, மலைகள், மலைகளை ஒட்டியுள்ள மண்ணில் புற்கள், செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா சத்துகளும் இயற்கையாவே இருக்கு. ஶ்ரீவில்லிபுத்தூரும் மலை சார்ந்த பகுதிதான். இங்க வளர்ற மாடுகளைப் பெரும்பாலும் மேய்ச்சல் முறையிலதான் வளர்க்கிறாங்க. நேரடியா மலை அடிவாரத்துலயே மேயுறதுனால சத்துகள் முழுமையா மாடுகளுக்குக் கிடைக்குது.

யானைப்புல், நேப்பியர் புல், சொங்கு சோளநாத்து, எலுமிச்சைப்புல், சீமைப்புல், காட்டுப் புல், சாரணத்தி, கண்ணுப்பிள்ளை ஆகியவற்றுடன் பல வகையான மூலிகைச் செடிகளும் இந்தப் பகுதியில மானாவாரியாவே வளருது. இதையெல்லாம் மாடுகள், மேய்ச்சலின்போது தீவனமாக எடுத்துக்கொள்ளும்போது அதன் எடை அதிகரிப்பதுடன், பாலில் சுவையும் அதிகமா இருக்கு. இங்குள்ள மாடுகளுக்கு மடிநோய், கோமாரி போன்ற நோய்கள் தாக்குறதும் அரிதாகத்தான் இருக்கு. இந்த மாடுகளின் பால் அடர்த்தியாக இருப்பதுடன் புரதம், கொழுப்பு, லேக்டோஸ், வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் அதிகமா இருக்கு” என்றார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இன்னும் சரியாக மார்க்கெட்டிங் செய்யப்படவில்லை என்பதே உண்மை!

சரியான பதம், மாறாத சுவை...
தித்திக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!

வேலைவாய்ப்பை அதிகரித்த பால்கோவா தயாரிப்பு!

பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்ட பிறகு, ஶ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. நகரில் மொத்தம் நாள் ஒன்றுக்கு 5,000 கிலோ பால்கோவா உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது உற்பத்தி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நூல் உற்பத்தி மில்லுக்கு வேலைக்குச் சென்ற பலர் பால்கோவா தயாரிப்புக்குத் திரும்பியுள்ளனர். ‘‘2013-ம் ஆண்டு திருநெல்வேலி, ராமையன்பட்டியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வில்லிபுத்தூருக்கு வந்து, பால்கோவா குறித்து ஆய்வு செய்து, புவிசார் குறியீடு வழங்கிட பரிந்துரை செய்தார்கள். 2019-ல் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது!’’