Published:Updated:

சென்னையில் ஸ்டார்ட்அப் பூங்கா... டான்சிம் நிறுவனத்தின் கலக்கல் திட்டம்!

சிவராஜா ராமநாதன்
பிரீமியம் ஸ்டோரி
சிவராஜா ராமநாதன்

ஸ்டார்ட்அப்

சென்னையில் ஸ்டார்ட்அப் பூங்கா... டான்சிம் நிறுவனத்தின் கலக்கல் திட்டம்!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
சிவராஜா ராமநாதன்
பிரீமியம் ஸ்டோரி
சிவராஜா ராமநாதன்

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை (Tansim - Tamil Nadu Startup and Innovation Mission) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக நேட்டிவ் லீட் அமைப்பின் சிவராஜா ராமநாதன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவரை சந்தித்துப் பேசினோம்.

‘‘இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம், தமிழ் நாட்டில் தொழில்முனைவை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே. உதாரணமாக, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகியவை ஸ்டார்ட்அப் மையங்களாக உள்ளன. அதற்கான சூழல் இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் அதற்கான சூழல் இருக்கிறது. அந்தச் சூழலை மேம்படுத்தி ஒருங்கிணைக்க வேண்டும். இன்குபேட்டர்கள், முதலீட்டாளர் கள், மென்ட்டார்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ஏற்ற இடமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு.

சிவராஜா ராமநாதன்
சிவராஜா ராமநாதன்

முதல்கட்டமாக ஸ்டார்ட்அப் பூங்கா சென்னையில் அமைக்க இருக்கிறோம். இதே போல, பூங்காக்கள் மற்ற முக்கிய நகரங்களிலும் அமைக்க திட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 80-க்கும் மேற்பட்ட இன்குபேட்டர் மையங்கள் உள்ளன. ஆனால், அவை சென்னை மற்றும் கோவையிலேயே பெரும்பாலும் இருக் கின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இன்கு பேட்டர் மையம் அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறோம். மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழில்முனைவை ஊக்குவிக்க பல சலுகைகள், கொடைகள் வழங்கி வருகின்றன. ஆனால், தொழில் முனைவோர்களுக்கு அரசின் திட்டங்கள் தெரிவதில்லை. இன்குபேட்டர் மையங்கள் மூலம் அரசின் திட்டங்கள் அனைவருக்கும் தெரியவரும்.

இது தவிர, புதிய தளம் ஒன்றை அமைக்க இருக்கிறோம். அதில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களை அந்தத் தளத்தில் ஒருங்கிணைக்கப்போகிறோம். சர்வதேச அளவில் துறை சார்ந்த ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள தொழில்முனை வோர்களுக்கு சர்வதேச அளவிலான ஆலோசனை கிடைக்கும்.

மேலும், தொழில்முனைவு தொடர்பாக கால் சென்டர் அமைக்க இருக்கிறோம். இதன் மூலம் தொழில்முனைவு தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனைகள், அரசின் திட்டங்கள், முதலீடு உள்ளிட்ட தொடர்பான விஷயங்களைத் தொழில்முனைவோர்கள் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்தகட்டமாக, ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது. தமிழக அரசு 2030-ம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது.

அந்த இலக்கை அடையவேண்டும் எனில், பெரிய அளவிலான புதிய தொழில் முனைவோர்களும் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பணியை டான்சிம் செய்யும்’’ என்றார் சிவராஜா.

இதுவரை பல ஸ்டார்ட்அப் யுனிகார்ன்கள் இந்தியாவில் இருந்து உருவாகி இருக்கின்றன. வரும் காலத்தில் பல யுனிகார்ன் ஸ்டார்ட்அப்கள் தமிழகத்தில் இருந்து உருவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism