Published:Updated:

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: பிரச்னைகளைத் துரத்தினால் பணம் பாய்ந்தோடி வரும்!

`பிராஃபிட் அனால்டிகா’ காஜா மைதீன்

பிரீமியம் ஸ்டோரி
பணம் வேண்டுமென்றால், பிரச்னையும் அதற்கான தீர்வையும் காண வேண்டும் என்று சொல்லியிருந்தேன். எப்படி?

பிரச்னையைத் தீர்க்க வழியைக் கண்டுபிடித்து, அதைச் சுற்றியே உங்கள் வியாபாரத்தை அமையுங்கள். உங்களை, இன்னொரு அமேசான் அல்லது ஃபேஸ்புக் மாதிரி புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கச் சொல்லவில்லை.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: பிரச்னைகளைத் துரத்தினால் 
பணம் பாய்ந்தோடி வரும்!

`கையில் காசே இல்லையே, நான் என்ன செய்வது?’ என்று நினைக்காதீர்கள். பழைய மாதிரி யோசிக்கும் முறையிலிருந்து வெளியே வாருங்கள். புதியதாக யோசியுங்கள்... எப்போதும் பிரச்னையை நோக்கியே திரும்புங்கள். உங்களைச் சுற்றியுள்ள மார்க்கெட்டை உற்று நோக்குங்கள். எதைப் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள்? எது இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்கிறார்கள்? எது அவர்களை விரக்தி அடைய வைத்தது? எது மிகவும் சிரமப்பட வைக்கிறது? இந்த மாதிரி பிரச்னைகளைத்தான் நீங்கள் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

தீர்க்க மதிப்புள்ள ஒரு பிரச்னை (A Problem worth Solving)

பணம் சேரும் கடைசிக் கட்டமாக (Scaleble Solution) விரிவுபடுத்தக் கூடிய தீர்வுகளைச் (Solution) சொல்லலாம். எவ்வளவு பேருக்கு இந்தத் தீர்வை எடுத்துச் செல்ல முடியும் என்பது மிக முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பது என்பது பெரிய அளவில் விரிவுபடுத்த முடியாது (Not Scaleble). அந்த ஏரியாவில் உள்ளவர்கள் மட்டுமே வருவார்கள். அதே நேரத்தில் ஃப்ரான்சைஸ் என்பது விரிவுபடுத்த கூடியது. பிரச்னையின் தீர்வு ஒரு சாப்ட்வேராக இருந்தால் உற்பத்தி, டெலிவரி சார்ந்த எதுவும் இல்லாமல் எளிதாக உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும்.

மிகக் கவனமாக இருங்கள். உங்கள் தீர்வானது, உங்கள் நேரத்தைச் சார்ந்து இருக்கிறதா என்பது மிக முக்கியம். உதாரணத்துக்கு, நீங்கள் யோகா சொல்லித்தரும் ஆசிரியர். 200 ரூபாயை ஒரு மணி நேரத்துக்கு வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். வாழ்த்துகள். உங்களுக்கு ஒரு வேலையை ஏற்படுத்திக்கொண்டுள்ளீர்கள். ஆனால், விரிவுபடுத்தக்கூடிய பிசினஸ் மாடல் அது அல்ல.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வகுப்புகளை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். அதனால், உங்கள் வருமானம் நீங்கள் செலவழிக்கும் நேரத்தைச் சார்ந்தது. அதேநேரத்தில் ஆன்லைன் யோகா வகுப்பு 24X7 எங்கிருந்தாலும் பார்க்க முடிகிற மாதிரி ஒருமுறை உருவாக்கி, அனைவருக்கும் கற்பிக்க முடிந்தால், அது விரிவுபடுத்தக் கூடிய தீர்வாகும்.

ஒவ்வொரு முறை விரிவுபடுத்தும்போதும் ஆட்டோமேஷன் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. சிறந்த அமைப்பு மற்றும் செயல்பாடு மூலம் தொழிலை இயந்திரம் போல் உங்கள் நேரத்தின் உதவியின்றி இயங்க வைக்க முடியும்.

உங்கள் தொழிலில் எந்த இடத்தில் அவுட் சோர்ஸ் பண்ண முடியுமோ அல்லது அந்த வேலையை ஓர் ஊழியரை வைத்து செய்ய முடிந்தால், தயாரிப்புச் செலவுக்குள் அடங்கினால் கண்டிப்பாகச் செய்யுங்கள். எல்லாம் நீங்களே செய்ய வேண்டும் என்ற முறை ஒரு பெரிய குறையாகும். ‘நீங்கள்தான் சிறந்தவர்’ என்ற எண்ணம்தான் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. ‘எப்போதுமே உங்களைவிடச் சிறப்பாக செய்யும் ஆட்கள் வெளியில் உள்ளார்கள்’ என்பதை மறந்துவிடக் கூடாது.

தீர்வைக் கண்டுபிடித்த பின் உங்கள் வேலை என்பது, மக்கள் அனைவரையும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதே. உங்கள் அகங்காரத்துக்கு இங்கு வேலை இல்லை. அதேபோல் உங்கள் முழு விருப்பமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நன்றாக நினைவுவைத்துக்கொள்ளுங்கள்... சந்தை, உங்கள் விருப்பங்களைக் கண்டுகொள்ளாது. இதன் மூலம் லாபகரமான தொழில் (Profitable), சரியான அமைப்பு (System) மற்றும் செயல்முறையுடன் (Process) உருவாக்க முடியும். இதுதான் சரியான நேரம், நீங்கள் விதைத்ததை அறுவடை செய்யும் நேரம்.

ஸ்டார்ட் அப்... சக்சஸ்: பிரச்னைகளைத் துரத்தினால் 
பணம் பாய்ந்தோடி வரும்!

வெகுமதி

உங்களின் தீர்வுக்கான, வெகுமதியை இரண்டு வழிகளில் பெறலாம். அந்த தீர்வைத் தொடர்ந்து லாபகரமாக நடத்தலாம். அல்லது நீங்கள் கண்டுபிடித்த அந்தத் தொழிலை வேறு ஒருவருக்கு விற்கலாம். இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் பில்லியன் டாலருக்கும் (தற்போதைய இந்திய மதிப்பில் தோராயமாக 7,500 கோடி ரூபாய்), பேபால் நிறுவனத்தை ஈபே நிறுவனம் 1.5 பில்லியனுக்கும் (தோராயமாக 11, 250 கோடி ரூபாய்) வாங்கின. இதன்மூலம் எலான் மஸ்க் (Elon Musk) ஒரு பெருந்தொகையைப் பெற்றார். இதேபோல் உலகம் பூராவும் பல நிறுவனங்கள் அதிக தொகைக்கு வாங்கப்படுகின்றன.

தொடர்ந்து நடத்த விரும்பினாலும், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நீங்கள் உங்கள் நிறுவனத்தைப் பெரிதும் விரும்பலாம். மேலும் அதற்கு மதிப்பை அதிகரிக்க முயற்சி செய்யலாம். எது எப்படி இருந்தாலும், அந்தத் தொழில் நீங்கள் இல்லாமலே நடைபெறக் கூடியது. ரொம்ப மெனக்கெட வேண்டிய அவசியமில்லை.

உங்கள் பணம் அல்லது உங்கள் வாழ்க்கை

நம்மில் பெரும்பாலானோருக்குப் பணத்தைப் பற்றி தெளிவான தீர்மானம் இல்லை. பணம் என்பது ஒரு காகிதமே (Piece of paper) அல்லது அது திரையில் தெரியும் நம்பர் மட்டுமே. அதன் மதிப்பானது உங்கள் நம்பிக்கையைச் சார்ந்தே அமைகிறது. இந்தக் கட்டுரையின் நோக்கம், பணத்தை உயர்த்திக்காட்டுவதல்ல.

வீட்டுக் கடனை ஒரே தவணையில் செலுத்துவது, மனதுக்குப் பிடித்த கார் வாங்குவது, உலகில் விருப்பப்பட்ட இடங்களைச் சுற்றுவது எல்லாமே ஓர் உணர்வுதான். ஆனால், இவை அனைத்தையும் பணத்தை பற்றிய கவலை இல்லாமல் செய்யவேண்டும் என்பதே. பணத்தைத் துரத்துவதை நிறுத்துங்கள். உங்கள் பிரச்னையைத் துரத்துங்கள். அதற்கான தீர்வைக் கொடுங்கள். தீர்வை நோக்கி பயணிப்பதில், கடைசியில் பெரும் பணம் கிடைத்துவிடும் என்ற உத்தரவாதம் இல்லைதான். இருந்தாலும், சரியான திசையில் இருக்கிறீர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். பணத்தைக் கவரும் அமைப்பு இயற்கையாகவே ஸ்டார்ட்அப் தொழில்களுக்கு உண்டு.

உலகில் உள்ள அனைத்து ஸ்டார்ட்அப் தொழில்களும் ஏதோ ஒரு பிரச்னையைத் தீர்ப்பவையாக உள்ளன. ஸ்டார்ட்அப் தொழில் மூலம் வளமாக வாழ வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு