Published:Updated:

`ஆன்லைன் மூலம் அனைவருக்கும் வேலை!' - சாதித்த மீனாட்சியின் கதை தெரியுமா? #BusinessMasters - 5

மீனாட்சி குப்தா ஜெயின்
மீனாட்சி குப்தா ஜெயின்

இங்கே பலருக்கு வேலை தேவைப்படுகிறது; சிலருக்கு சிறந்த பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மீனாட்சி குப்தா ஜெயின் செய்த வேலை ரொம்ப சிம்பிள். இரு தரப்பையும் இணைக்கும் பாலமாக இருந்தார், அவ்வளவுதான்.

பல நேரங்களில், சிறு பொறியாகத் தோன்றுகிற ஓர் ஐடியா, ஆலமரம்போல் தழைத்து வளரக்கூடிய மிகப் பெரிய தொழிலுக்கான விதையாக மாறிவிடுவதுண்டு. அப்படித் தோன்றிய ஒரு யோசனைதான், மீனாட்சி குப்தா ஜெயின் ஒரு தொழிலைத் தொடங்க உதவியது; இன்றைக்கு `இந்தியாவில் வெற்றிகரமான தொழில்முனைவோர்’ என்ற அடையாளத்தையும் அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

திறமையான, நேர்மையான பணியாளர்கள் வாய்ப்பது ஆதிகாலத்திலிருந்தே அரிதான ஒன்றாக இருந்திருக்கிறது. `சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு கண்டீர்; சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை’ என்று பணியாளர்களின் அவசியத்தை நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார் மகாகவி பாரதி.

மிகப்பெரும் தொழிலதிபரான ஹென்றி ஃபோர்டு ஒரு படி மேலே போய் நம்பிக்கையோடு இப்படிச் சொல்கிறார்... ‘`நீங்கள் என் தொழிற்சாலைகளை எடுத்துக்கொள்ளுங்கள்; என் கட்டடங்களை எரித்து, தகர்த்துவிடுங்கள். ஆனால், என் பணியாளர்களை மட்டும் எனக்குக் கொடுங்கள். நான் மீண்டும் என் தொழிலை உருவாக்கிவிடுவேன்.’’

பாரதி
பாரதி

பள்ளி நாட்கள் 

இங்கே பலருக்கு வேலை தேவைப்படுகிறது; சிலருக்கு சிறந்த பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மீனாட்சி குப்தா ஜெயின் செய்த வேலை ரொம்ப சிம்பிள். இரு தரப்பையும் இணைக்கும் பாலமாக இருந்தார், அவ்வளவுதான். இன்றைக்குத் தனித்துவமான அடையாளத்துடன் அவர் நிறுவனம் வளர்ந்து நிற்கிறது.

மீனாட்சியின் அப்பாவுக்கு ராணுவத்தில் பணி. அதனாலேயே அடிக்கடி அவருக்குப் பணியிட மாற்றம்... பல ஊர்கள், புது மனிதர்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது மீனாட்சிக்கு. கேந்திரிய வித்யாலயாவில்தான் அவருடைய பள்ளி நாள்கள் கழிந்தன. 8-வது கிரேடு படிக்கும்போதுதான் ஒரு தனியார் பள்ளியில் சேரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அங்கும் ஒரு பிரச்னை. சக மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள் வசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அத்தனை பேர் நுனி நாக்கிலும் ஆங்கிலம் விளையாடியது. பல ஊர்களில், பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படித்த மீனாட்சியால் சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியவில்லை. அது மற்ற மாணவ, மாணவிகளிடமிருந்து அவரை அந்நியப்படுத்தியது. அவருக்குப் பள்ளியில் தோழிகளே வாய்க்காமல் போனார்கள். ஆனாலும் சோர்ந்துபோய்விடவில்லை மீனாட்சி.

கிடைக்காமல்போன மெடிக்கல் சீட்

தன் திறமையை எதிலெல்லாம் வெளிப்படுத்த முடியுமோ, அதிலெல்லாம் வெளிப்படுத்தத் தொடங்கினார். விளையாட்டைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அதில் அவர் காட்டிய ஆர்வம் அவரை பேஸ்கட் பால் டீமில் கொண்டுபோய்ச் சேர்த்தது. பேஸ்கட் பாலில் மிளிர்ந்த அவருடைய திறமை, பல தோழிகளை அவருக்குப் பெற்றுத் தந்தது.

படிப்பிலும் கில்லியாக இருந்தார் மீனாட்சி. பள்ளியில் நன்றாகப் படிக்கும் டாப் ஸ்டூடன்ட்களில் மீனாட்சியும் ஒருவர். அதனாலேயே பல ஆசிரியர்களின் கவனம் அவர்மேல் திரும்பியது. அந்த அனுபவம், மீனாட்சிக்குப் புதிய பாடம் ஒன்றையும் கற்றுத் தந்தது. ``உங்கள் பணியை மட்டும் கவனமாக, சிறப்பாகச் செய்யுங்கள். அதுவே பலரிடமிருந்து உங்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தந்துவிடும். இன்றைக்கும் நான் செய்கிற ஒவ்வொரு செயலிலும் இந்த அனுபவம்தான் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறது’’ என்கிறார் மீனாட்சி.

மெடிக்கல் காலேஜில் நுழைவுத் தேர்வு. மூன்றே மார்க்குகள் வித்தியாசத்தில் அந்த வாய்ப்பை இழந்தார் மீனாட்சி. தேவையானதை அடைய எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பதை அந்த அனுபவம் அவருக்குக் கற்றுத் தந்தது. பட்டப் படிப்பு, மொழியியலில் எம்.ஃபில், ஆசிரியையாகப் பணி, என்.ஐ.ஐ.டி-யில் புராஜெக்ட் மேனேஜர், பிறகு டாடா இன்டராக்டிவ் சிஸ்டம் நிறுவனத்தில் வேலை என்று என்னென்னவோ பார்த்துவிட்டார் மீனாட்சி. ஆனாலும் உள்ளுக்குள் ஓர் உத்வேகம்... `இதோ பார்... நான் சாதாரண ஆளில்லை... நான் வேற, வேற...’ என்கிற உத்வேகம்... அதற்கான பலன் கிடைக்காமலும் இல்லை.

Basket Ball
Basket Ball
Image by Clark Keng from Pixabay
670 ரூபாய் சம்பளம் டு கம்பெனிக்கே CEO... L&T நாயக்கின் வெற்றிக்கதை! #BusinessMasters - 4

`அம்மா... என் பொண்ணுக்குக் குழந்தை பிறந்திருக்கு...’

மீனாட்சிக்குத் திருமணம் முடிந்து வாழ்க்கை அதன் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. அது ஒரு காலை நேரம்... மும்பையில் இருக்கும் ஒரு வசதியான தெருவில், பால்கனியில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார் மீனாட்சி. அப்போது அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண். `அம்மா... என் பொண்ணுக்குக் குழந்தை பிறந்திருக்கும்மா...’ என்கிற பணிப்பெண்ணின் குரல் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தது: ஆனால், அந்தப் பணிப் பெண்ணால் சில நாள்களுக்கு வேலைக்கு வர முடியாது என்ற உண்மையும் அவருக்குப் புரிந்தது. அன்றைக்கு அவர் வீடு அவ்வளவு சுத்தமாக இல்லை. அன்று இரவு சில விருந்தினர்கள் அவர் வீட்டுக்கு வரவிருந்தார்கள். இந்த நேரத்தில் பணிப்பெண் இல்லாமல் என்ன செய்வது?

அவரின் அவஸ்தையைப் புரிந்துகொண்டவராக, அவரின் கணவர் வேடிக்கையாகச் சொன்னார்... ``யெல்லோ பேஜஸ் போன் டைரக்டரி இருக்குற மாதிரி, வீட்டு வேலை செய்யுற ஆள்களுக்குன்னு ஒரு டைரக்டரி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..?’’ அந்த வார்த்தைகள் அப்படியே பச்சக்கென்று மீனாட்சியின் மனதில் பதிந்துபோயின. அவர் ஒருகணம் தன் கணவரைப் பார்த்தார். பிறகு சொன்னார்... ``அதை நாமே ஏன் செய்யக் கூடாது?’’ அதற்குப் பிறகு காரியத்தில் இறங்கினார் மீனாட்சி. maidforu.in என்ற இணையதளத்தை ஆரம்பித்தார். மீனாட்சி சொல்கிறார்... ``என் வாழ்க்கை முழுவதும் பணியாள்கள்தான் இந்த உலகை ஆளுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஏனென்றால், அப்படிப்பட்டவர்களுக்கான தேவை அதிகம் இருந்தது. அதைச் சரிசெய்யும் முயற்சியில் நான் இறங்கினேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பொண்ணுங்களுக்கு மட்டும் வேலை தருவீங்களா?’

இதன் தொடர்ச்சியாக, தான் பார்த்த வேலையைத் துறந்தார் மீனாட்சி. ஒருநாள், மீனாட்சியின் கார் டிரைவர் இப்படிக் கேட்டார்... ``ஏம்மா... பொண்ணுங்களுக்கு மட்டும் வேலை வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறீங்க... எத்தனையோ வேலையில்லாத, படிப்பு கம்மியா இருக்குற ஆம்பளைங்களும் இருக்குறாங்களே... அவங்களுக்கு நீங்க வேலை வாங்கித் தர மாட்டீங்களா?’’ அந்த டிரைவரின் முறையீடு ஒரு நல்ல பாதைக்கு வித்திட்டது. maidforu என்ற தன் இணையதளத்தை https://helper4u.in/ என்ற தளமாக மாற்றினார் மீனாட்சி. டிரைவர்கள், செக்யூரிட்டிகள், சமையல் கலைஞர்கள், குழந்தைகளைப் பராமரிப்பவர்கள், முதியோர்களைப் பார்த்துக்கொள்பவர்கள், வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுவேலை செய்பவர்கள், கூரியர் பையன்கள், தோட்டக்காரர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள்... என்று அனைத்துத் தொழிலாளர்களுக்குமான களமாக ஆனது அந்த இணையதளம்.

டாக்ஸி
டாக்ஸி
ஆசிரியர் கொடுத்த அந்த  வாய்ப்பு... இன்று உலகே வியக்கும் `இ-பே' பியரியின் கதை! #BusinessMasters - 3

வீட்டுவேலை செய்ய விரும்புகிறவர்கள், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் ஆயாக்கள், டிரைவர்கள், டெலிவரி பையன்கள், சமையல் கலைஞர்கள், நோயாளிகளை, முதியோர்களைப் பார்த்துக்கொள்ள விரும்புபவர்கள்... அனைவருக்கும் இங்கு வேலை கிடைக்கும். வேலை வேண்டும் என்கிறவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை இந்தத் தளத்தில் பதிவு செய்துகொண்டால் போதும். அதற்கு ஒரு கட்டணமும் கிடையாது. உங்களுக்கு வேலை கொடுப்பவர் மட்டும் சந்தா செலுத்த வேண்டும். அவர், தனக்கான பணியாளை நேரடியாகத் தானே போன் செய்து, அவர்களுடன் பேசி, தனக்குத் தோதான பணியாளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதைத்தான் மீனாட்சி தன் இணையதளம் மூலமாகச் செய்துகொண்டிருக்கிறார். மும்பையிலும், புனேயிலும் நடந்துகொண்டிருக்கும் அவர் சேவை, இந்தியா முழுக்கப் பரவும் என்று நம்புவோம்!

சோம்பேறித்தனம், தீயொழுக்கம், வறுமை இந்த மூன்று பேய்களிடமிருந்தும் நம்மைக் காக்கும் தன்மை வேலை என்கிற ஒன்றுக்கு மட்டுமே உண்டு!
- வால்டேர்
- பாடம் எடுப்பார்கள்
வாரந்தோறும் திங்கள் கிழமை, பிசினஸ் மாஸ்டர்கள் விகடன் தளத்தில் உங்களுக்கு உற்சாகமூட்டுவார்கள்!
அடுத்த கட்டுரைக்கு