Published:Updated:

தினக்கூலி டு முதலாளி... வாழவைக்கும் பிஸ்கட் பிசினஸ்!

பஷீர் அகமது
பிரீமியம் ஸ்டோரி
News
பஷீர் அகமது

பிசினஸ்

பேக்கரி ஒன்றில் ரூ.15 சம்பளத்துக்கு தினக்கூலியாக வேலைபார்த்து வந்த ஒருவர் காலத்தின் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு செயல்பட்டதன் மூலம் இன்று சொந்தத் தொழில் செய்யக்கூடிய முதலாளியாக மாறி கைநிறைய சம்பாதிக்கிறார். தஞ்சாவூரில் இருக்கும் பஷீர் அகமது என்பவர்தான் அவர். இவர் நாஞ்சிக்கோட்டை பைபாஸ் சாலை அருகே சிறிய அளவில் பிஸ்கட் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். பட்டர் சால்ட், ஸ்வீட் பட்டர் எனப் பல வகை பிஸ்கட்டுகளைத் தயாரித்து அதைக் கடை வடிவில் வடிவமைக்கப்பட்ட லோடு வண்டியில் பல பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்துவருகிறார். நாம் அவருடன் பேசினோம்.

‘‘16 வயசுல சென்னை வண்ணாரப் பேட்டையில பேக்கரி அடுப்படியில பிஸ்கட் தயாரிக்கும் வேலை பார்த்தேன். தினம் ரூ.15-ல் தொடங்கிய சம்பளம், ரூ.150 வரை உயர்ந்தது. நான் வேலை செய்த பேக்கரில பட்டர் சால்ட் பிஸ்கட்டுகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, வெளி மாவட்டங்களில் உள்ள டீ மற்றும் மளிகைக் கடைகளில் மொத்த வியாபாரம் செய்வாங்க. அவங்களுக்கு மாசம் ரூ.10,000 லாபம் கிடைக்கும்.

வியாபாரிகளுடன் ஏற்பட்ட நெருக்கத்தால நாமும் பிஸ்கட் எடுத்துச் சென்று விற்கலாம்னு முடிவு செஞ்சேன். உடனே வேலையை விட்டுட்டு வியாபாரத்துல இறங்கினேன். சென்னையில பட்டர் சால்ட் உள்ளிட்ட பிஸ்கட்டுகளை மொத்தமாக வாங்கிவந்து தஞ்சாவூர்ல விற்றுவந்தேன். சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே உள்ள கந்தர்வக்கோட்டை என்பதால், நான் தஞ்சாவூரைத் தேர்ந்தெடுத்தேன்.

பஷீர் அகமது
பஷீர் அகமது

அடுப்படியில வேலை செஞ்ச எனக்கு மார்க்கெட்டுல இறங்கி வேலை செய்யுறது புதுசா இருந்துச்சு. அலைச்சலால் சோர்வு ஏற்பட்டாலும், வியாபாரத்துல கிடைச்ச கூடுதல் லாபம் சோர்வை நீக்கி ஓடவச்சது.

அதைவிட, ‘நாம சொந்தமாக வியாபாரம் செய்றோம்’ங்கிற எண்ணம் புது நம்பிக்கையைத் தந்துச்சு. பிஸ்கட்டுகளை ஸ்டாக் வைத்துக் கொள்ள சிறிய அளவிலான ரூம் ஒன்றை வாடக்கைக்குப் பிடிச்சு, அதையே எனக்கான ஆபீஸாகவும் பயன்படுத்திக்கிட்டேன். சென்னையிலயிருந்து பிஸ்கட் எடுத்து வந்து ரூமுல வச்சுக்கிட்டு, டூ வீலர்ல ஒவ்வொரு பகுதியில் உள்ள கடைகளுக்கு எடுத்துக்கிட்டுப் போய் மொத்தமாகக் கொடுத்து வந்தேன்.

எல்லாச் செலவும் போக, மாசம் ரூ.12,000 லாபம் கிடைச்சது. ஆனா, சென்னைக்குப் போய் பிஸ்கட் எடுத்துக்கிட்டு வர்றதுல அலைச்சல், கேட்ட நேரத்துக்கு சரக்கு கிடைக்காம போறது உள்ளிட்ட பல சிரமங்கள் இருந்துச்சு. அப்பதான் நாமளே சொந்தமா பிஸ்கட் தயாரிக்கலாம்னு யோசனை வந்துச்சு. 2007-ல் தஞ்சை சீனிவாசபுரத்துல ஒரு பேக்கரியை லீஸுக்கு எடுத்தேன். அதுல நானே பிஸ்கட்டுகளைத் தயாரிச்சு, 25 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டீக்கடை, மளிகைக் கடைகளில் கொடுத்து வந்தேன். சென்னையில இருந்த குடும்பத்தையும் தஞ்சாவூருக்கு மாத்தினேன். சொந்தமாக ஒரு ஆம்னி வேன் வாங்குற அளவுக்கு வளர்ச்சி அடைஞ்சேன். கடைகளுக்கு சப்ளை செய்த நேரம் போக, பெரிய மாநாடு, தனியார் கம்பெனிகள் நடத்துற நிகழ்ச்சிகள், பொருள்காட்சி போன்ற இடங்களில் ஆம்னி வேனிலேயே ஸ்டால் போட்டு விற்கத் தொடங்கினேன்.

2011-ல் தனியார் வங்கியில கடன் வாங்கி இப்ப இருக்குற இடத்தைச் சொந்தமாக வாங்கினேன். பிஸ்கட் வேக வைக்கக்கூடிய அவன், எந்த வடிவில், என்ன சைஸில் பிஸ்கட் தயாரிக்கணும் என்பதற்கான குக்கீஸ் அச்சு மெஷின், மாவு மிக்ஸ் செய்வதற்கான மிக்‌ஷர் மெஷின் போன்ற இயந்திரங்களை வாங்கி ஓரளவுக்கு ஹைடெக் காகவும், அதே நேரத்தில் பிஸ்கட் தயாரிப்பை அதிகப்படுத்தும் வகையிலும் பிஸ்கட் தயாரிக்கக் கூடிய கம்பெனியைச் சொந்த மாகத் தொடங்கினேன்.

தொழில், வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. கை நிறைய வருமானமும் வந்தது. பணமதிப்பிழப்புக்குப் பிறகு, வியாபாரம் மந்தமானது. கடைகளுக்குச் சென்று பிஸ்கட் போட்டால், குறித்த நேரத்தில் பணம் திரும்பக் கைக்கு வராது. அதே நேரத்தில், அவர்களுக்கும் வியாபாரம் குறைந்ததால், பிஸ்கட் வாங்குவதும் வெகுவாகக் குறைந்தது. என் பிசினஸுல தேக்கம் ஏற்பட ஆரம்பிச்சது.

இதுக்கு மாற்றா என்ன செய்யலாம் என யோசிச்சப்ப, நாமளே கடையைத் திறக்கலாம் என முடிவு செஞ்சேன். புதிய பேருந்து நிலையம் எதிரே ரூ.2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து கடை வாடகைக்கு எடுத்து, விற்பனையைத் தொடங்கினேன். மாத வாடகை ரூ 11,000, இரண்டு பேர் சம்பளம் 16,000, கரன்ட் பில் 2,000 என மொத்தம் 30,000 வரை எக்ஸ்ட்ரா செலவாச்சு. ஒரு வருடம் வரை நடத்தினேன். எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் ஆகல.

தினக்கூலி டு முதலாளி...
வாழவைக்கும் பிஸ்கட் பிசினஸ்!

லாபம் இல்லாம எதுக்கு கடையை நடத்தணும்னு யோசிச்சு சட்டுனு கடையை எடுத்துட்டேன். ‘நம்ம பிஸ்கட்டுகளுக்குத் தனி அடையாளம் இருக்கு; நாமதான் சுத்தமாவும், சுவையாவும் தர்றோமே. அதனால கடைகளில் போடுறத நிறுத்திட்டு, நாமே பல இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்யலாம்’னு முடிவெடுத்தேன். மாதத் தவணையில் மினி லோடு வேன் ஒன்றை புதுசா வாங்கினேன். மூன்று பக்கம் திறந்து மூடக்கூடிய வகையில் கதவுடனும், பாட்டில்கள் வைப்பதற்கான அடுக்குகளுடன் கிட்டதட்ட ஒரு சின்னக் கடை வடிவில் அந்த வேனை வடிவமைச்சேன்.

டிரைவிங் தெரிந்த ஒருவரை வேலைக்கு நியமனம் செஞ்சு அவரையே வியாபாரமும் செய்ய வச்சேன். வார காய்கறி சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள் எனத் தினம் ஒவ்வொரு இடத்துல எங்க வேனை நிறுத்தி வியாபாரம் செய்து வந்தோம். சுத்தம், சுவை, தரம் ஆகியற்றைக் கடைப்பிடித்ததால, வாடிக்கை யாளர்கள் ஆதரவு கிடைச்சது.

பிஸ்கட் தயாரிக்குற நேரம் போக நானும் வேனில் வியாபாரத்துக்குச் சென்று விடுவேன். கொரோனா லாக்டெளன்லகூட பெரிய அளவுல வியாபாரத்துல பாதிப்பு ஏற்படல. கொரோனா சமயத்திலகூட வங்கித் தவணையைத் தவறாம கட்டினேன். கைநிறைய வருமானம் வருதுங்கிறதைவிட, சொந்தத் தொழில் செய்றோம் என்கிற அடையாளம் பெரும் மனநிறைவைத் தருது. மாற்றுச் சிந்தனையையும், விடா முயற்சியையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓடுனதால, வாழ்க்கையும் நல்ல முறையில் ஓடிக்கிட்டிருக்கு’’ என்று சிரித்தபடி பேசி முடித்தார் பஷீர்.

விடா முயற்சி நிச்சயம் வெற்றி தரும்!