Published:Updated:

ஆயிரங்களில் தொடக்கம்... கோடிகளில் வருமானம்... கலக்கும் பிசினஸ்! - கவர் இட் அப்பின் வெற்றி ஃபார்முலா!

கவர் இட் அப்
பிரீமியம் ஸ்டோரி
News
கவர் இட் அப்

B U S I N E S S

’’நம்முடைய பிசினஸ் பிளான் பெரிசோ சின்னதோ. நம்மால் ஜெயிக்க முடியும்னு நாம் நம்பினால் நம்முடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. என்னுடைய பிசினசின் வெற்றி என்னுடைய நம்பிக்கை மட்டும்தான்” - புத்துணர்ச்சி பொங்க பேசுகிறார் ரோனக் சர்தா.

மொபைல் போன்களுக்கான கவர், டி-சர்ட் பிரின்டிங், குழந்தை களுக்கான நோட்டு புத்தகங்கள் டிசைனிங் எனத் தன்னுடைய பிசினஸை ஃபேஸ்புக் மூலம் சில ஆயிரங்களில் தொடங்கியவர் ரோனக். அந்த ஃபேஸ்புக் பக்கம் இன்று ‘கவர் இட் அப்’ என்ற இணைய வழி நிறுவனமாக உருவாகி, வருடத்துக்கு 10 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் செய்கிறது. தன்னுடைய வெற்றிப் பாதையை நம்மிடம் பகிர்கிறார் ரோனக்.

ரோனக் சர்தா
ரோனக் சர்தா

“எனக்கு சொந்த ஊர் ராஜஸ்தான். நான் பிறக்குறதுக்கு முன்னாடி எங்க அப்பா சென்னையில் செட்டில் ஆகிட்டாங்க. அப்பா கார்மென்ட்ஸ் சார்ந்த பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க. சென்னையில் ஒரு கல்லூரியில் பி.பி.ஏ படிச்சுட்டு இருந்தேன். அந்த நேரத்தில் செல் போன்களுக்கு டிசைன் டிசைனாக போன் கவர் போட்டுக்கிற டிரெண்ட் வந்துச்சு.

எனக்கான போன் கவரை நான் தேடினப்ப நான் நினைச்ச கலரில், டிசைனில் எனக்குக் கிடைக்கல. அதனால் நான் நினைச்ச டிசைனைப் படமாக வரைஞ்சு, அதை பிரின்ட் செய்து போன் கவர் ரெடி பண்ணேன். என்னுடைய போன் கவரைப் பார்த்துட்டு என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் அது தனித்துவமாக இருக்குதுனு சொல்லி அவங்களுக்கு தயார் பண்ணிக் கொடுக்கச் சொன்னாங்க.

என்னுடைய பாக்கெட் மணியை முதலீடாக வெச்சு என் ஃபிரெண்ட்ஸ் களுக்கு சில போன் கவர்கள் தயார் செய்து கொடுத்தேன். அதையெல்லாம் போட்டோ எடுத்து, சமூக வலை தளங்களில் பகிர ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து நிறைய ஆர்டர்கள் நண்பர் களிடமிருந்து வர ஆரம்பிச்சுது. நானும் என் ஃபிரெண்ட்டும் சேர்ந்து டிரெண்டில் இருந்த நூறு கான்செஃப்ட்டுகளை படமாக வரைஞ்சு டிசைன் செய்து சமூக வலைதளங்களில் இந்த டிசைனில் போன் கவர்கள் கிடைக்கும்னு பதிவேற்றினோம். ஆர்டர்கள் வாங்கிய பிறகு, போன் கவர்களில் பிரின்ட் செய்து கொடுத்துட்டு இருந்தோம். ஆரம்பத்தில் இதை நான் பிசினஸாகப் பண்ணணும்னு நினைச்சுக் கூட பார்க்கல. முழுக்க முழுக்க என்னுடைய ஹாபியாகத்தான் பண்ணிட்டு இருந்தேன்.

என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் பிசினஸ் ஆரம்பிக்க போறேன்னு வீட்டில் சொன்னேன். நான் என்ன பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன்னு கேட்டாங்க. நான் சொன்ன கான்செப்ட்டில் அப்பாக்கும் பெரிசா ஈர்ப்பு வரல. ஆனாலும், என்னை நம்பி 21,000 ரூபாய் முதலீடாகக் கொடுத்தாங்க. அந்தத் தொகையை வச்சு பிசினஸ் ஆரம்பிக்கிறது ரொம்ப சிரமம்தான். எங்க இருந்து தொடங்குறதுனே புரியாம இருந்தேன். கடைசியா நானே ஒரு பிசினஸ் மாடல் ரெடி பண்ணேன்.

அப்பா கொடுத்த தொகையை வச்சு ஒரு வெப்சைட் தொடங்கினேன். நான் ஏற்கெனவே டிசைன் செய்த போன் கவர்களைப் புகைப்படங்களாக வெப்சைட்டில் பதிவேற்ற ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் போன் கவர்கள்தான் ஆர்டர்கள் வந்துட்டு இருந்துச்சு. அதன் பிறகு, கஸ்டமர்களின் தேவைக்கேற்ப டி-சர்ட் டிசைனிங், நோட்-புக் டிசைனிங், டீ கப்களில் டிசைனிங் செய்வது என அடுத்தடுத்த பொருள்களுக்கான டிசைனிங் தேவைகள் வாடிக்கையாளர் களால் உருவாச்சு.

என்னோட வெப்சைட்டில் ஒவ்வொரு டிசைனும் தனித்துவமாக இருந்ததால, அடுத்தடுத்து நல்ல வரவேற்பு இருந்துச்சு. எங்க அப்பா கொடுத்த 21,000 தொகையை சில வருஷங்களிலேயே ஐந்து லட்சமாகக் கொடுத்தேன். ஆச்சர்யமாகப் பார்த்தாங்க. அதன் பின் என் குடும்பத்திலிருந்து முழு சப்போர்ட் கிடைச்சுது.

அந்த அஞ்சு லட்சம்ங்கிறது என்னை நம்பிய அப்பாவுக்கு நான் என்னை நிரூபிக்க உதவுச்சு. அது பிசினஸின் வெற்றினு சொல்லிர முடியாது. பிசினஸின் அடுத்தகட்டம் என்னனு யோசிச்சப்போ சினிமா டீம்களுடன் மெர்சண்டைஸ் பார்ட்னராக இணையலாம்னு ஐடியா வந்துச்சு. அதற்காக எடுத்த முயற்சியில் வெற்றியும் கிடைச்சுது. கிரிக்கெட், சினிமா டீம்களின் ஆஃபிஷியல் மெர்சண்டைஸ்கள் எடுக்கத் தொடங்கினேன். சென்னை சூப்பர் கிங்ஸ் டீமின் அதிகாரப்பூர்வ அக்ஸசரிஸ் பார்ட்னர் நாங்கள்தான். டிஸ்னி பிராண்ட் மெர்சண்டைஸ் பார்ட்னரும் நாங்கதான். அதே போல் ரஜினியின் கபாலி, தர்பார் போன்ற திரைப்படங்கள், விஜய்யின் மெர்சல் திரைப்பட ஸ்டில்களை பிரின்ட் செய்யும் உரிமமும் நாங்கள்தான் வைத்திருக் கிறோம்’’ என்று சொல்லும் ரோனக், தான் கடந்துவந்த சிரமங்களை நம்மிடம் பகிர்கிறார்.

ரோனக் சர்தா
ரோனக் சர்தா

“பிசினஸைப் பொறுத்தவரை, ரெண்டு டெக்னிக் இருக்கு. ஒண்ணு நம்முடைய பிசினஸ் கான்செப்ட் புதுசா இருக்கணும். இல்லைன்னா நம்முடைய அனுபவமும் கடின உழைப்பும் அந்த பிசினஸ்ஸில் அதிகமாக இருக்கணும். எங்களுடைய பிசினஸ் மாடல் முதல் வகை. நான் ஆறு வருஷத்துக்கு முன்னாடி இந்த பிசினஸைத் தொடங்கும்போது, இப்படி ஒரு பிசினஸ் பண்ண முடியுமானு நிறைய பேர் என்னைக் கிண்டல் பண்ணிருக்காங்க. ஆனால், பிசினஸ்னு வரும்போது, மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தராமல், நம்முடைய திட்டமிடலில் தெளிவாக இருக்கணும்.

அனுபவம் முக்கியம் என்றால், திட்டமிடல் ரொம்ப முக்கியம். என்னுடைய பிசினஸ் ஐடியா புதியது என்பதால் ஒவ்வொன் றைத் தேடிக் கண்டு பிடிப்பதிலும், மக்களிடம் மார்க்கெட்டிங் செய்து, பொருள்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் ஆரம்பத்தில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்தன. அதிலிருந்து வெளியில் வர ஒவ்வொரு டிசைனையும் ரொம்ப நுணுக்கமாகவும், தனித்துவமாகவும் உருவாக் கணும்னு முடிவு பண்ணேன்.

என் கஸ்டமர்கள் இளவயதுக் காரர்கள்தான். அதனால் டிரெண்ட்டுக்கு ஏற்ற மாதிரி யோசிச்சபோது ஈஸியா ஜெயிக்க முடிஞ்சுது. டிசைனிங் பிசினஸ் பொறுத்தவரை ஏற்றத் தாழ்வுகள் இருக்காது. அதனால் இதுவரை பல சிரமங்களைச் சந்திச்சிருந் தாலும் நஷ்டங்களைச் சந்திச்சது இல்லை.

இது எல்லாவற்றையும்விட என்னுடைய முதலீடு ரொம்ப குறைவான தொகை. ஒவ்வொரு செலவையும் எப்படிக் குறைக்கலாம்னு நிறைய திட்டமிடுவேன். வெப்சைட் டிசைனிங்கில் ஆரம்பிச்சு, பேக்கிங் வரை ஆரம்ப காலத்தில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன். அதனால் செலவு களைக் குறைக்க முடிஞ்சுது.

எப்போதுமே தரத்தில் காம்ப்ரமைஸ் பண்ணக்கூடாது என்பதில் உறுதியா இருக்கேன். இந்த முயற்சிகள்தான், என் தனிப்பட்ட உழைப்பை 45 பணியாளர்கள் கொண்ட ஒரு நிறுவனமாக உருவாக்கியிருக்கு. சென்ற வருடம் மட்டும் 1.5 லட்சம் பொருள்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்திருக்கிறோம். இப்போ 125 வகையான பொருள்களைத் தயார் பண்றோம்.

வெறும் 21,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய என்னுடைய பிசினஸ் ஆறு ஆண்டுகளில் டேர்ன் ஓவர் 10 கோடியைத் தொட்டுள்ளது.

இதன் பின்னணியில் உழைப்பைத் தவிர, எந்த மந்திர சக்தியும் இல்லை. என்னால் முடியும் என்றால், உங்களாலும் முடியும். மாற்றி யோசித்தால் வெற்றி சாத்தியமே” என்று விடை பெறுகிறார் ரோனக்.

பிட்ஸ்

டிக்டாக் நிறுவனம் கடந்த ஆண்டு நம் நாட்டில் தடை செய்யப் பட்டது. இ்ந்தத் தடை ரத்தாகுமா என்று பொறுத்திருந்து பார்த்த டிக்டாக் நிறுவனம் இப்போது தனது இந்திய பிசினஸை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது!