Published:Updated:

இட்லி மாவு முதல் பியூட்டி க்ரீம் வரை... ரூ.1,250 கோடி வர்த்தகம்... அசத்தும் நிறுவனம்..!

பிசினஸ்

பிரீமியம் ஸ்டோரி

பிசினஸில் நமக்கான வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது ஒரு ரகம். புதுப் புது தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, நமக்கான மதிப்பை மேன்மேலும் வளர்த்தெடுப்பது மற்றொரு ரகம். இந்த இரண்டையும் ஒருசேரக் கட்டமைத்து, உள்ளூர் விற்பனை முதல் உலக அளவிலான ஏற்றுமதிவரை பல துறைகளிலும் கோலோச்சி வருகிறது சென்னையைச் சேர்ந்த ‘கிளாரியன்’ குழுமம்.

இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான கே.என்.லக்ஷ்மணன் மற்றும் ஒய்.சி.குரானி இருவரும், தங்களின் சொந்த வீட்டை அடமானம் வைத்து, சாமானிய தொழில்முனை வோர்களாகவே பிசினஸில் அடியெடுத்து வைத்தவர்கள். ஆனால், தற்போது இந்தக் குழுமத்தில் இயங்கும் எட்டு நிறுவனங்களிலும் சேர்த்து ரூ.1,250 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது. நாம் லக்ஷ்மணனின் மகன் ராமகிருஷ்ணன் மற்றும் குழும இயக்குநர்களில் ஒருவரான நடராஜனையும் சந்தித்துப் பேச, அவர்கள் தங்கள் வெற்றிக் கதையை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்கள். முதலில் பேச ஆரம்பித்தார் ராமகிருஷ்ணன்.

இட்லி மாவு முதல் பியூட்டி க்ரீம் வரை... ரூ.1,250 கோடி வர்த்தகம்... அசத்தும் நிறுவனம்..!
ராமகிருஷ்ணன், நடராஜன்

“என் அப்பாவும் அவரின் நண்பரும் வெவ்வேறு டின் கன்டெய்னர் தயாரிப்பு நிறுவனங்களில் வேலைபார்த்தார்கள். தங்களுக்கு நன்கு தெரிந்த அந்த வேலையை சொந்தத் தொழிலாகச் செய்ய நினைத்து, ‘நிகிதா கன்டெய்னர்ஸ்’ என்ற நிறுவனத்தைக் கூட்டாக ஆரம்பித்தனர். அந்த நிறுவனத்தில், இரு முன்னணி நிறுவனங்களுக்கான டால்கம் பவுடர் மற்றும் டூத் பவுடர் டப்பாக்களை மட்டுமே ஆரம்பத்தில் தயாரித்தோம். 1997-ல் பிளாஸ்டிக் டப்பாக்கள் வரவேற்பைப் பெறத் தொடங்கின. இதனால், அந்த வாடிக்கையாளர் நிறுவனங்கள் இரண்டுக்குமான எங்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்தது.

பிளாஸ்டிக் டப்பாக்களைவிட, சுற்றுச் சூழலுக்கு உகந்த டின் டப்பாக்கள் ஈர்ப்பாகவும் இருக்கும். பயன்பாடு முடிந்ததும், அதைத் தூக்கி எறியாமல் ஏதாவதொரு தேவைக்கு வைத்திருந்து பயன்படுத்தவே மக்கள் விரும்பு வார்கள். இதனால், பிளாஸ்டிக் மோகத்தைத் தாண்டி, இந்த டின் டப்பாக்களுக்கான வரவேற்பை அதிகரிக்கும் வகையில், புதுப்புது நிறுவனங்களுடனான வர்த்தக வாய்ப்பை அதிகப்படுத்தினோம். அந்த நேரத்தில்  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் எங்களுக்கு ஏற்பட்ட தொழில் பந்தம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தொடர்கிறது.

இதற்கிடையே, வாலட் (பர்ஸ்) விற்பனைக்காக ஒரு நிறுவனத்துக்கு டின் பாக்ஸ் தயாரித்துத் தந்தோம். யதேச்சையாக அதைப் பார்த்த இண்டிகோ நிறுவனத்தினர் எங்களை அணுகினர். அப்புறம் என்ன?

இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் விமானங்களில் பயணிகளுக்கு உலர்பழங்களைப் பரிசாகக் கொடுக்கப் பயன்படுத்தப்படும் சிறிய டப்பாக்களைப் பல ஆண்டுகளாகத் தயாரித்துக் கொடுக்கிறோம். நம் தயாரிப்பு தனித்துவமாகவும் தரமாகவும் இருந்தால், நம் உழைப்பே விளம்பரமாகவும் மாறும் என்பதை எங்களுக்கு உணர்த்தியது அந்த வர்த்தக வாய்ப்பு.

பல்வேறு உணவுப் பொருள்களுக்கான விற்பனைக்கும், மருத்துவத்துறைப் பயன்பாடு மற்றும் ரிட்டர்ன் கிஃப்ட் தருவதற்கான டப்பாக்களையும் அதிக அளவில் தயாரிக் கிறோம். டின் டப்பாக்கள் கனமாக இருக்கும் என்ற பேச்சை மாற்றி, எடை குறைவான, எளிதில் திறந்து மூடும் வகையில் நூற்றுக்கணக்கான வடிவங்களில் டப்பாக்களை உற்பத்தி செய்கிறோம்” என்று பெருமிதத்துடன் கூறும் ராமகிருஷ்ணன், இந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைவராகவும், குழும இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

1993-ல் தொடங்கப்பட்ட ‘கிளாரியன்’ நிறுவனம், ஆண்டுக்கு 1,200 கோடிக்கும் அதிகமான வர்த்தகத்துடன், காஸ்மெடிக்ஸ் துறையில் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக் கிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி குறித்துப் பேசினார், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பிரிவுத் தலைவரான நடராஜன்.

ராமகிருஷ்ணன்,  நடராஜன்
ராமகிருஷ்ணன், நடராஜன்

“நிகிதா நிறுவனத்தின் மூலம் தொடக்கத்தில் நாங்கள் டால்கம் பவுடருக்கான டின் தயாரித்துக் கொடுத்த அந்த வாடிக்கையாளர் நிறுவனத்தினர், ‘‘நீங்களே பவுடரும் தயாரிச்சுத் தந்தா, வேலைகள் இன்னும் எளிமையாகுமே...’’ என்று சொன்னார்கள். அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்து, ‘கிளாரியன்’ நிறுவனத்தை ஆரம்பித்தோம். பிறகு, சில முன்னணி நிறுவனங்களுக்கான பவுடர் தயாரிப்பு ஆர்டர் களும் கிடைத்தன. அந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் உலக அளவில் பல நாடுகளிலும் விற்பனையான நிலையில், அங்கெல்லாம் எங்கள் நிறுவனத்தின் பெயரும் பிரபலமானது.

எங்களைத் தேடிவந்த வாய்ப்புகளை நியாயமாகவும், நேர்மையாகவும் கையாண்ட தால், புதுப்புது தொழில் வாய்ப்புகள் கைகூடின. ஷாம்பு, நெயில் பாலிஷ், ஷேவிங் க்ரீம், பியூட்டி க்ரீம் என எங்களுடைய தயாரிப்பு வகைகள் கிடுகிடுவென உயர்ந்தன.

எங்களுக்கு வேலை தரும் நிறுவனங்கள் சொல்லும் ஃபார்முலாபடி, அவர்களுடைய விற்பனைப் பொருள்களைத் தயாரித்துக் கொடுப்பது, எங்கள் நிறுவனங்களின் மூலமாகவும் சில காஸ்மெடிக்ஸ் பொருள் களைத் தயாரித்து பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதுடன், ஏற்றுமதியும் செய்கிறோம்” என்றார் உற்சாகத்துடன்.

‘கிளாரியன்’ நிறுவனத்தின் மூலம், இந்துஸ்தான் யுனிலீவர் குழுமம், கவின்கேர், தாபர் குழுமம், ஜோதி லேபரட்டரீஸ் குழுமம் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கான அழகுசாதனப் பொருள்கள் தயாராகின்றன. இதற்காக நான்கு மாநிலங்களில் உற்பத்திக் கூடங்கள் இயங்குகின்றன. அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்துக்கு அழகுசாதன தயாரிப்புகளை உற்பத்தி செய்து தரும் வெளிநிறுவனங்களில் ‘கிளாரியன்’ முதலிடத்தில் இருக்கிறது.

டின் மற்றும் காஸ்மெடிக்ஸ் துறையில் வெற்றி பெற்ற நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நேரடி உணவு தயாரிப்பிலும் இறங்கி யுள்ளனர். இதற்காகப் புதிய நிறுவனத்தை ஆரம்பிக்காமல், ஏற்கெனவே பிரபலமடைந்திருந்த இரண்டு நிறுவனங்களை விலைக்கு வாங்கி, அவற்றை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். ஆண்டுக்குத் தலா ஆறு கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் இந்த இரண்டு நிறுவனங்களின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள் கிறார் ராமகிருஷ்ணன்.

“1997-ல் தொடங்கப்பட்ட ‘தாயார்’ என்ற நிறுவனம், இட்லி, தோசை மாவு விற்பனையை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. ‘மாம்பலம் ஐயர்’ என்ற பெயரில் ரெடிமேட் உணவுகள் விற்பனைக்கான தனி நிறுவனத்தையும் அவர்களே நடத்திவந்தனர். உணவுத் துறையிலும் எங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனம் செயல்பட வேண்டும் என நினைத்தோம். ஏற்கெனவே பிரபலமடைந்த இந்த இரண்டு நிறுவனங்களையும் விலைக்கு வாங்கி, அவற்றை இன்னும் பிரபலமாக்கும் முயற்சியில் இறங்கினோம்.

‘தாயார்’ நிறுவனத்தில் இட்லி, தோசை மற்றும் அடை மாவுகளை மட்டுமே தயாரிக்கிறோம். தினமும் 4 டன் உற்பத்தி நடக்கும் நிலையில், அவை சென்னையிலுள்ள கடை களுக்கான விற்பனைக்கே போது மானதாக இருக்கின்றன.‘மாம்பலம் ஐயர்’ நிறுவனத்தில் ஊறுகாய், ரைஸ் மிக்ஸ், ஹெல்த் மிக்ஸ், மசாலாப் பொருள்கள், இட்லிப் பொடி உட்பட பல்வேறு உணவுப் பொருள்களையும் தயாரிக்கிறோம். அவை பல மாநிலங்களில் விற்பனை ஆவதுடன் வெளிநாடு களுக்கும் ஏற்றுமதியாகின்றன” என்கிறார் ராமகிருஷ்ணன்.

இந்தக் குழும நிறுவனங்களின் மின்சாரத் தேவைக்கு, தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் காற்றாலைகளை அமைத்துள்ளனர். நேரடியாக 800 பேரும் மறைமுகமாகச் சில ஆயிரம் பேரும் பணியாற்றும் இந்தக் குழுமத்தின் வளர்ச்சி, சவால்கள் இல்லாமல் சாத்தியமாகியிருக்குமா?

“பிசினஸ் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்றுவரை புதுப்புது கோணத்தில் சவால்கள் தொடர்கின்றன. நிதி, நிர்வாகம், தொழில் விரிவாக்கம் என அன்றாடம் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். அனுபவமே சிறந்த ஆசான். ஒரு சிக்கலைச் சமாளித்த அனுபவத்திலிருந்து மற்றொரு சிக்கலுக்குத் தீர்வு காண்கிறோம். நிறுவனர்கள் இருவரின் வழிகாட்டுதலுடன், ஒவ்வொருவரும் அவரவர் துறைக்கு முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொள்வதால், சிக்கல்களை உடனுக்குடன் தீர்க்க முடிகிறது. இதனால், எங்களின் அனைத்துத் தொழில்களும் தொழிலாளர்களின் ஆதரவுடன் தடையின்றி இயங்குகின்றன.

ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து ஏதாவது எதிர்மறை விமர்சனங்கள் வந்தால், அது நிறுவனத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும். எனவே, ஒவ்வொரு தயாரிப்புக்கும் தனிக்கவனம் கொடுத்து, தரம், குறித்த நேரத்துக்கு டெலிவரி செய்வது போன்ற கொள்கைகளில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் எங்கள் பணிகளைத் தொடர்கிறோம்” என ராமகிருஷ்ணனும் நடராஜனும் கூட்டாகக் கூறி புன்னகையுடன் விடைகொடுத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு