Published:Updated:

அன்று ரூ.72 லட்சம் நஷ்டம்... இன்று டேர்ன்ஓவர் ரூ.15 கோடி!

எம்.ஜீலான்

சக்சஸ் ஸ்டோரி

அன்று ரூ.72 லட்சம் நஷ்டம்... இன்று டேர்ன்ஓவர் ரூ.15 கோடி!

சக்சஸ் ஸ்டோரி

Published:Updated:
எம்.ஜீலான்

பள்ளி மேல்நிலைப் படிப்பைத் தொடர முடியாமல் குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தொழிலில் ஈடுபட்டு, இன்று 15 கோடி ரூபாய் டேர்ன்ஓவர் செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த தொழில்முனைவோர் எம்.ஜீலான். நூற்றுக்கணக்கான தையல் இயந்திரங்கள், சுறுசுறுப்பாக வேலை செய்யும் பணியாளர்கள் என உற்சாகமாகக் காட்சி அளிக்கிறது மதுரை வில்லாபுரத்தில் இயங்கும் அவரது ஹயாத் குளோத்திங்க் கம்பெனி. ஆடவருக்கான சட்டைகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவரும் அவரது தொழில் பயணத்தை அவரே சொல்கிறார்...

 எம்.ஜீலான்
எம்.ஜீலான்

‘நான் பிறந்து வளர்ந்தது மதுரைதான். என் அப்பா எஸ்.கே.டி மைதின், டெய்லராக இருந்து, பின் ரசூல் கார்மென்ட்ஸ் என்ற சிறு நிறுவனத்தை உருவாக்கினார். அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு ஒரு வீடும் கட்டினார். அன்றைய சூழலில் தொழில்நுட்பம் அறியாத காரணத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்காகத் துணிக் கடன் வாங்கியவரிடம் அந்த வீட்டையே எழுதிக் கொடுத்து கடனை அடைத்தார்.

நான் செளராஷ்ட்ரா ஹைஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். மேற்கொண்டு படிக்க பள்ளிக் கட்டணம் கட்டும் நிலையில் குடும்பம் இல்லை. வீட்டில் முதல் ஆண் பிள்ளை என்பதால், என் அப்பாவுடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டிய கட்டாயம். எனவே, 1986-ல் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, அப்பாவுடன் தொழில் செய்ய வந்தேன். தையல் தொழிலில் உள்ள பல வேலைகளை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். உற்பத்தி நுணுக்கங்களைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துகொண்டவுடன், விற்பனையில் கவனம் செலுத்த நினைத்தேன்.

நாங்கள் தயாரித்த ஆடைகளை கடைகளில் விற்றபின், சில வாரங்களுக்குப் பிறகு, பணம் வசூலிக்கச் செல்வது வழக்கம். ஒரு கடையில் பணத்தை வசூல் செய்யப் போனபோது, அந்தக் கடைக்காரர் பணம் தராமல் தகராறு செய்ய ஆரம்பித்தார். நான் அதை அவமானமாக உணர்ந்தேன். உடனே அந்த இடத்தைவிட்டு கிளம்பி விட்டேன். ஒரு நல்ல வியாபாரியிடம் பொருளை விற்றிருந்தால், தகராறு செய்ய வேண்டிய நிலை வந்திருக்காது என்பதை உணர்ந்தேன். ஒவ்வொரு ஊரில் உள்ள சிறந்த வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தவாறு எனது நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்கேற்ப எனது அணுகுமுறையை மாற்றி, என்னையும், எனது நிறுவனத்தையும் தயார்படுத்திக் கொண்டேன். இதன் மூலம் விற்பனையும் அதிகரித்து, எங்களது நிறுவனத்துக்கு ஒரு தனி அடையாளமும் கிடைத்தது.

அன்று ரூ.72 லட்சம் நஷ்டம்... இன்று டேர்ன்ஓவர் ரூ.15 கோடி!

எனக்குக் கிடைத்த இந்த வெற்றிக்களிப்பில், வேறு புதிய ஐந்து தொழில்களில் முதலீடு செய்தேன். இந்தப் புதிய தொழில்களில் கொண்ட ஆர்வத்தால் எனது நிறுவனத்தில் மூன்று வருடம் முழுக் கவனத்தையும் செலுத்த முடியவில்லை, வியாபாரம் குறைந்ததையும் கவனிக்கவில்லை. இதனால், புதியதாக முதலீடு செய்த அனைத்துத் தொழில்களும் நஷ்டமடைந்ததுடன், அத்துடன் எனது நிறுவனமும் நஷ்டம் அடைந்து மொத்தமாக ரூபாய் 72 லட்சம் நஷ்டத்தை நான் எதிர்கொண்டேன். இதன் மூலம் உற்பத்தித்திறனும் விற்பனைத்திறனும் மட்டும் போதுமானதல்ல... நிறுவனத்தின் கணக்கு வழக்குகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

இந்த நஷ்டத்தால் கடனைத் திரும்பக் கட்டப் பணமில்லை; புதிதாகக் கொள்முதலுக்கு வழியும் இல்லை. என்றாலும், தொழிலுக்கான இடம், தொழிலுக்கான இயந்திரங்கள், நல்ல பணியாளர்கள் மற்றும் இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருந்தது. அதே நேரத்தில், ஆண்களுக்கான சட்டையை மட்டுமே தரத்துடன் தயார் செய்து இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாற வேண்டும் என்கிற கனவும் இருந்தது. கடன் வாங்கிய வியா பாரிகளிடம் கடனைத் திரும்ப செலுத்துவேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் ஒரு வருட அவகாசம் கிடைத்தது. இந்த நேரத்தில் மதுரை ஏ.கே அஹமத் நிறுவனர் கொடுத்த ஆலோசனையின் அடிப்படை யில் சட்டையைக் கூலிக்குத் தைத்துக் கொடுக்கும் வேலை செய்வதென முடிவு செய்தேன். இதன் தொடர்ச்சியாக சேலம் எஸ்.கே.சி கிரியின் முயற்சியால் ராம்ராஜ் மற்றும் பேசிக்ஸ் (Basics) போன்ற நிறுவனங்களிடம் இருந்து வேலையைப் பெற்று, நாங்கள் தொடர்ந்து இந்தத் தொழிலில் உயிர்ப்புடன் இருந்தோம்.

கடன்களைத் திரும்பக் கட்ட கிடைத்த அவகாசம், வட்டி கட்டக் கிடைக்கவில்லை. புதிய வியாபார உத்தியால் கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதியை கடனுக்கான வட்டியைச் செலுத்துவதிலேயே செலவானது. ஆகையால், இனிமேல் வட்டிக்குக் கடன் வாங்கக் கூடாது என முடிவு எடுத்தேன். தொடர்ச்சியான முயற்சியால் நிறுவனமும் அடுத்த கட்ட வளர்ச்சி அடைந்தது.

அதன் பிறகு, ஹயாத் குளோத்திங் கம்பெனியைத் தொடங்கி எக்ஸ்போஸ் (Expose) என்ற பெயரில் பிராண்டைப் பதிவு செய்து சொந்தத் தயாரிப்பைத் தொடங்கினேன். அனைத்து ஊர்களிலும் எங்களது தயாரிப்புகள் சென்றடைய தன்முனைப்புடன்கூடிய ஒரு குழுவை அமைத்து அவர்கள் மூலமாக வியாபாரிகளை அணுகினேன். இதனால் விற்பனை சிறிது சிறிதாக வளரத் தொடங் கியது. என்றாலும் என் கனவுக்கும், நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் சிறு முரண்பாடுகள் உள்ளதை உணர்தேன். அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, என்னுடைய நிர்வாகத் திறனை நான் இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது புரிந்தது.

தயாரிப்புக் குழு உறுப்பினர்களுடன் ஜீலான்
தயாரிப்புக் குழு உறுப்பினர்களுடன் ஜீலான்

நிர்வாகத் திறன் பற்றிய எனது தேடலில் சிவ் கேரா எழுதிய ‘உங்களால் வெல்ல முடியும்’ என்கிற புத்தகம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவே பல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியது. நிர்வாகத் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள மதுரை யெஸ் (YES - Young Entrepreneur School) அமைப்பில் சேர்ந்து, தொழில் நிர்வாகம் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். தொழிலை பெரிதாக வளர்க்க வேண்டும் எனில், எல்லாத் துறை வேலை களையும் நானே செய்துகொண் டிருக்க முடியாது என்பதால், திறமையான நபர்களை நியமித்து, அந்தப் பொறுப்புகளைச் செய்ய வைக்க முடிவு செய்தேன். இதன் மூலமே என் தொழிலைப் புதிய வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பினேன்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் வேகமான வளர்ச்சியைக் கண்டுவந்தோம். பெரிய லட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேளையில், கொரோனா நோய்த் தொற்றால் தொழிலை உடனடியாக நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. இது ஒருபக்கம் அதிர்ச்சியைத் தந்தாலும், என் நிறுவனத்தில் நிர்வாக ரீதியில் செய்ய வேண்டிய பல மாற்றங்களைச் செய்ய கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். முக்கியமாக, என் நிறுவனத்தின் செயல் பாடுகள் அனைத்தையும் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாற்றினோம். இதனால் எங்கள் நிறுவனத்தின் செயல்திறன் கணிசமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், எனது நிறுவனத்துக்கு புது இலக்கை நிர்ணயம் செய்தேன். இந்த மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த கொரோனாவுக்கு நான் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

எங்களது நிறுவனத்தின் வர்த்தக ஆலோசகர் எல்.எஸ் கண்ணன், ‘உங்களுக்கு எந்த வேலை செய்வதில் சந்தோஷம்?’ என்று ஒருமுறை என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘சமூகத்துக்கு பயன்தரக்கூடிய ஒரு பள்ளி மற்றும் மருத்துவ மனையைத் தொடங்கி, எளிய மக்களுக்கு நேரடியாகப் பயன் கிடைக்கச் செய்வதே எனக்கு சந்தோஷம்’ என்றேன். ‘அதையே இனி உங்கள் லட்சியமாகக் கொண்டு செயல் படுங்கள்’ என்றார் அவர். எனது இந்த லட்சியத்தை அடைய வருகிற 2028-க்குள் நிறுவனத்தின் வியாபாரத்தை ரூ.100 கோடியாக உயர்த்த வேண்டும் என்கிற எண்ணத்தில் உற்சாகமாக உழைத்து வருகிறோம்’’ என்று பேசி முடித்தார் ஜீலான். இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறவர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள்!