Published:Updated:

முதலீடு ரூ.50,000... டேர்ன்ஓவர் ரூ.5 கோடி... சாதித்த சலவைத் தொழிலாளி மகன்!

ஏழுமலை

சக்சஸ் ஸ்டோரி

முதலீடு ரூ.50,000... டேர்ன்ஓவர் ரூ.5 கோடி... சாதித்த சலவைத் தொழிலாளி மகன்!

சக்சஸ் ஸ்டோரி

Published:Updated:
ஏழுமலை

ஊர் மக்களோட அழுக்குத் துணிகளை வெளுத்துக் கொடுத்தா தினமும் சோறு கிடைக்கும். தீபாவளி, பொங்கலுக்குப் புதுத்துணி கிடைக்கும். இதைத் தவிர, வேறெந்த வசதி வாய்ப்புகளையும் நினைச்சுப் பார்க்க முடியாத குடும்பம் என்னோடது. ஐந்தாம் வகுப்புக்குமேல படிக்கல. ஆனா, பெரிய ஆளாகணும்ங்கிற வெறி மட்டும் தணியாம இருந்துகிட்டே இருந்துச்சு... சோர்வடையாம உழைக்கிற வேகமும் ஆர்வமும் இருந்துச்சு... அதுதான் நான் இந்த நிலைக்கு வரக் காரணம்” - டூல்ஸ் தயாரிப்பு மெஷின்களின் சத்தத்துக்கு நடுவே சில்லிடும் ஏசி அறையில், ரோலிங் சேரில் அமர்ந்தவாறு பாந்தமாகப் பேசுகிறார் ஏழுமலை.

ஏழுமலை
ஏழுமலை

திருவள்ளூர் மாவட்டம், காக்கலூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் அமைந்திருக் கிறது ஏழுமலையின் `இந்தோ டூல்ஸ் அண்ட் டைஸ்’ (Indo Tools & Dies (India) Pvt Ltd) நிறுவனம். ஏழுமலை, அவரின் மனைவி, மகன், மகள் எனக் குடும்பத்துடன் அங்கு உழைக்கின்றனர். 45 தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

சாதாரண தொழிலாளியாக ஒரு டூல்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சென்றதிலிருந்து சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கி, அதை வளர்த்தெடுத்தது வரையான ஏழுமலையின் அனுபவத்தில் அத்தனை உத்வேகம். இந்தோ ஜப்பான் லைட்டிங்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட டூல்ஸ்களையும், பல நிறுவனங்களுக்கு டூல்ஸ் தயாரிக்கும் அச்சுகளை (dies) தயாரித்து வழங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது ஏழுமலையின் நிறுவனம்.

`ஐந்தாம் வகுப்புக்கு மேல படிக்கல. ஆனா, ஜப்பான் நாட்டு பிசினஸ்மேன்களோட வியாபாரம் செய்றீங்களே... எப்படி?’ என ஆச்சர்யத்துடன் கேட்டால், ``எல்லாம் அனுபவம்தான்’’ என்று பேசத் தொடங்குகிறார்.

முதலீடு ரூ.50,000... டேர்ன்ஓவர் ரூ.5 கோடி... சாதித்த சலவைத் தொழிலாளி மகன்!

``மதுராந்தகத்துக்கு அருகே உள்ள சானூர்தான் என்னோட சொந்த ஊரு. ஒரு தம்பி, தங்கை. குடும்பத்துல நான்தான் மூத்தவன். நான் பிசினஸுக்கு வந்ததுக்குக் காரணம், நான் சென்னைக்கு வந்ததுதான். நான் சென்னைக்கு வந்ததுக்குக் காரணம் எங்க பங்காளிகளால் ஏற்பட்ட பிரச்னைதான். எங்க அப்பா பொறக்குறதுக்கு முன்னாடி எங்க தாத்தாவுக்கு ஏழு பிள்ளைங்க பிறந்து இறந்து போயிருக்காங்க. எங்க அப்பா எட்டாவதா பிறந்தவரு. அதனால அவருக்கு பேரே... `எம ரோஸ்’-ன்னு வச்சுட்டாங்க. அதாவது, எமன்கிட்டயிருந்து தப்பிச்சு வந்த ஒற்றை ரோஜான்னு அதுக்கு அர்த்தமாம்.

அப்பா பிறந்து கொஞ்ச நாள்லயே அவரோட அம்மாவும், அடுத்த சில வருஷங்கள்லயே அவரோட அப்பாவும் இறந்து போயிட்டாங்க. எங்க அப்பாவை எடுத்து வளர்த்ததெல்லாம் அவரோட சித்தப்பாதான். அப்பா, பத்தாவது வரைக்கும் படிச்சுருக்கார். ஆனா, அவரோட சித்தப்பா பசங்க சுத்தமா படிக்கல. அதுமட்டுமல்லாம, என் தாத்தா ஆடு வளர்த்து சம்பாதிச்ச பணத்துல அப்பாவுக்கு கொஞ்சம் நிலம் வாங்கி வச்சுருந்திருக்கார்.

ஓரளவு படிப்பும், கொஞ்சம் சொத்தும் அப்பாவுக்கு இருந்ததால அவரோட சித்தப்பா பசங்களுக்கு ஈகோ வந்துருச்சு. அது கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி ஒருநாள் எங்க வீட்டைச் சேதப்படுத்தும் அளவுக்குப் போயிடுச்சு. அப்பாவை வளர்த்ததுக்காக அவரு வச்சிருந்த சொத்துல பாதியை அவரோட சித்தப்பாவுக்குத் தரணும்னு ஊர் பெரியவங்க பஞ்சாயத்துகூடி சொன்னாங்க. அதுக்கு மேல அங்க இருக்கப் பிடிக்காம எங்களை அழைச்சுகிட்டு சென்னைக்கு வந்துட்டாரு எங்க அப்பா. கொரட்டூர்ல ஒரு சின்ன வீட்ல தங்கினோம். அப்பா, லூகாஸ் டிவிஎஸ் கம்பெனிக்கு தோட்ட வேலைக்குப் போனார். அம்மா, வீட்டு வேலைக்குப் போனாங்க. ஆனாலும் எங்களுக்கு அந்த வருமானம் போதுமானதா இல்ல.

அப்போ எனக்கு ஒன்பது வயசுதான். ‘சக்தி ஸ்ப்ரிங் ஃபார்ம்ஸ்’ங்கிற டூல்ஸ் மேக்கிங் கம்பெனியில என்னை ஹெல்ப்பரா வேலைக்குச் சேர்த்துவிட்டார் என் அப்பா. படிக்க முடியலைங்கிற கவலை இருந்தாலும், நல்லா வேலை செஞ்சு குடும்பத்துக்கு சப்போர்ட்டா இருக்கணும்னு வேலைக்குப் போனேன். ஒரே வருஷத்துல ஃப்ளை ஃப்ரெஸ் மெஷின் அடிச்சு ஒரு விரல் பொத்தலாகிருச்சு. இந்த ஃபீல்டுல இப்படி நிறைய ஆக்சிடென்ட் நடக்கும். கொஞ்சம் அசந்தாலும் கைவிரல்கள் போறதுக்கு வாய்ப்பு அதிகம். எனக்கு பயம் வந்துருச்சு. இந்த வேலையை விட்டுட்டு வேற ஃபீல்டுக்குப் போகலாம்னு தோணுச்சு. உட்கார்ந்து யோசிச்சேன். இந்தப் பிரச்னையை சரிசெய்யப் பார்க்கணுமே ஒழிய, இதுல இருந்தே விலகி ஓடுறது சரியான முடிவு கிடையாதுன்னு தீர்க்கமா முடிவெடுத்தேன்.

தொடர்ந்து வேலைக்குப் போனேன். டூல்ஸ் மேக்கிங்ல உள்ள எல்லா நுட்பங்களையும் ஆர்வத்தோட கத்துக்க ஆரம்பிச்சேன். இதற்கிடையில எனக்கு அடிக்கடி விபத்துகள் நடக்க ஆரம்பிச்சது. என் பத்து விரல்கள்ல ஒரு விரல்தான் ஒரிஜினல். மத்த ஒன்பது விரல்களும் விபத்துல சிக்கி, ஆபரேஷன் செஞ்சு மீட்டவை தான்” என்றவாறு தன் கைகளைக் காண்பித்தார். அவர் உழைப்புக்கு அடையாளமாகக் காய்த்து முறுக்கேறிப் போயிருக்கிறது அவரது கைகள். ஒரு விரல் மட்டும் மீட்க முடியாமல் துண்டாகியிருக்கிறது. ‘‘இந்த விபத்துகளெல்லாம் 15 வயதுக்கு உள்ளாகவே நடந்து முடிஞ் சுடுச்சு’’ என்றார் ஏழுமலை.

முதலீடு ரூ.50,000... டேர்ன்ஓவர் ரூ.5 கோடி... சாதித்த சலவைத் தொழிலாளி மகன்!

``டூல்ஸ் மேக்கிங்ல நுட்பங் களைக் கத்துகிட்ட அப்புறம் அதற்கு அடுத்து டை மேக்கிங் கத்துக்கணும்னு ஆர்வம் வந்துச்சு. ஒருமுறை எங்க கம்பெனியில டை மேக்கர் நாலு நாள் லீவு போட்டுட்டார். வேலை எல்லாம் தேங்கிக் கிடக்கு. எங்க பாஸ் அப்செட் ஆகிட்டார். ‘நான் அந்த வேலையைப் பண்றேன்’னு சொன்னேன். `இதை எப்படிடா உன்னால செய்ய முடியும்?’னு எங்க பாஸ் கேட்டார். மத்தவங்க எல்லாம், ‘இவன் டை செய்யுறானாம். இன்ஜினீயரிங் படிச்சவங்க செய்யுற வேலையை அஞ்சாவதுகூட தாண்டாதவன் செய்யப் போறானாம்...’ என்று ஏளனமாகச் சிரிச்சாங்க. நான் அதையெல்லாம் கண்டுக்கலை. ஏன்னா, அதுல எனக்கு அவ்வளவு ஆர்வம் இருந்துச்சு. வேலை நேரம் போக டை செய்யுறதுன்னு பலநாள்கள் நான் கத்துக்கிட்டிருந்தேன். எனக்கு எழுத, படிக்கத் தெரியாதுன்னாலும் ஒவ்வொண் ணையும் கேட்டு எனக்குப் புரிஞ்ச மாதிரி குறிச்சு வெச்சுக்குவேன்.

நான் செய்றேன்னு ஸ்ட்ராங்க சொன்னதும், ‘சரி ட்ரை பண்ணு’ன்னு எங்க பாஸும் அனுமதி கொடுத்தார். நான் பக்காவா செஞ்சு முடிச்சேன். என் வொர்க்கை பார்த்து அப்படியே அசந்துபோயிட்டாங்க. நான் நிறைய விபத்துகளைச் சந்திச்ச தால, விபத்து நடக்காம எப்படி டூல்ஸ் அண்ட் டைஸ் மேக்கிங் செய்றதுன்னு ஆலோசனை களையும் சொன்னேன். அதுதான் என்னுடைய டர்னிங் பாயின்ட். என் பாஸ் ஆச்சர்யமாகி, ‘உனக்கு இவ்வளவு இன்ட்ரஸ்ட் இருக்கா? அப்போ நீ இதுலயே வொர்க் பண்ணு’ன்னு சொன்னார்.தொடர்ந்து அதுல பல வருஷங்கள் வொர்க் பண்ணி நிறைய கத்துக் கிட்டேன். அதிலுள்ள எல்லா நுட்பங்ளையும் கத்துக்கிட்டேன்.

இப்படிப் போயிட்டு இருந்த வாழ்க்கையில ஒருகட்டத்துல திரும்பிப் பார்த்தா, எந்த முன்னேற்றமும் நடக்கலை. என் மனைவி, இரண்டு குழந்தை களுடைய அடிப்படைத் தேவை களைக்கூட முழுமையா பூர்த்தி செய்ய முடியாதவனாத்தான் நான் இருந்தேன். தொழிலாளியா எத்தன வருஷம், எவ்வளவு திறமையோடு உழைச்சாலும் பொருளாதாரத்துல பெரிய நிலையை எட்ட முடியாதுன்னு என் புத்திக்கு எட்ட ஆரம்பிச்சது.

வட்டிக்குப் பணம் வாங்கி 50,000 ரூபாய் முதலீட்டுல கொரட்டூர்ல சின்ன கட்டடத்தை வாடகைக்கு எடுத்து என்னுடைய பிசினஸை ஆரம்பிச்சேன். என் மனைவிக்கும் இதைக் கத்துக்கொடுத்து சப்போர்ட்டுக்கு வெச்சுகிட்டேன். என்னுடைய வொர்க் தரமா இருந்ததால, நிறைய கஸ்டமர்கள் ஜாப் கொடுக்க ஆரம்பிச்சாங்க. போகப் போக, என் கஸ்டமர்கள் சிலரே அவங்க சொந்தப் பணத்தை முதலீடு செஞ்சு மெஷின் வாங்கிக் கொடுத்து அவங்களுக்குத் தேவையான டூல்ஸ் & டைஸைத் தயாரிச்சு கொடுக்கச் சொன்னாங்க. காரணம், எங்களுடைய தரமான வொர்க்.

இப்படித்தான் என்னுடைய பிசினஸ் வாழ்க்கை ஆரம்பமாச்சு. இன்னைக்கு காக்கலூர்ல சொந்தக் கட்டடத்துல எங்க ஃபேக்டரி இயங்குது. 45 பேர் வேலை பார்க்குறாங்க. வருஷத்துக்கு 5 கோடியிலிருந்து 7 கோடி ரூபாய் வரை டேர்ன்ஓவர் பண்றோம். இந்தத் தொழிலை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோறதுக்காக என் பையனை டூல்ஸ் & டைஸ் மேக்கருக்குப் படிக்க வெச்சுருக்கேன். இப்ப ஃபைனல் இயர் படிக்கிறார். அவரும் என் பிசினஸுக்கு பெரிய சப்போர்ட்டா மாறியிருக்கார். அடுத்தகட்டமா வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்ற அளவுக்கு பெரியளவுல மாறணும்ங்கிறதுதான் எங்களுடைய இலக்கு. நிச்சயம் அந்த இலக்கை எட்டுவோம்” - உறுதியுடன் சொல்கிறார் ஏழுமலை.

எது இல்லையென்றாலும் கடின உழைப்பும் ஆர்வமும் இருந்தாலே போதும், பிசினஸில் முன்னேறலாம் என்பதற்கு ஏழுமலை ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு!