Published:Updated:

50 பஸ்... 75 வேன்... 75 லாரி... வெற்றிப் பயணத்தில் ‘கும்பகோணம்’ ரதிமீனா!

சேகர்
பிரீமியம் ஸ்டோரி
சேகர்

நேட்டிவ் பிராண்ட் - 8

50 பஸ்... 75 வேன்... 75 லாரி... வெற்றிப் பயணத்தில் ‘கும்பகோணம்’ ரதிமீனா!

நேட்டிவ் பிராண்ட் - 8

Published:Updated:
சேகர்
பிரீமியம் ஸ்டோரி
சேகர்

கோயில் நகரம் என அறியப்பட்ட கும்பகோணம் பகுதியின் அடையாளங்களில் ஒன்றாக ரதிமீனா டிராவல்ஸ் நிறுவனத்தை மக்கள் மனதில் பதிய வைத் திருக்கிறார் அந்த நிறுவனத்தின் உரிமையாள ரான சேகர். ரதிமீனா டிராவல்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து அவர் நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘மதுரை அருகே உள்ள நெடுங்குளம் எங்களோட பூர்வீகக் கிராமம். தொழில் செய்வதற்காக தாத்தா பொன்னுசாமி காலத் திலேயே கும்பகோணத்துக்கு வந்துட்டோம். என்னோட அப்பா சோமுவுக்கு ஏழு மகன்கள்.நான்தான் மூத்த மகன். என் அப்பா, பத்து வருடங்கள் லாரி டிரைவராகத் தினக்கூலிக்கு வேலை பார்த்தவர். கிடைத்த சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்துடன், உறவினர் ஒருவரும் உதவி செய்ய, சொந்தமாக இரண்டு லாரிகள் வாங்கி, லாரி சர்வீஸ் நடத்திவந்தார்.

தமிழகம் முழுவதும் பொருள்களை ஏற்றிச் செல்லும் லோடு சர்வீஸைக் கொடுத்தார். கடின உழைப்பால் அடுத்த சில வருடங்களி லேயே சொந்தமாக ஆறு லாரிகள் வாங்கினார். தொழில் பெருகியது. லாரியில் எந்த ரிப்பேர் வந்தாலும் தானே சரி செய்துகொள்ளக்கூடிய வகையில் அனைத்தையும் கற்றுக்கொண்டார்.

லாரிகளில் ஏற்படும் பழுதுகளை நீக்க தனி வொர்க்‌ஷாப் நடத்தினார். 1970-ல் சேதுராமன் லாரி அண்ட் பஸ் சர்வீஸ் என்ற பெயரில் புதிதாக கம்பெனி தொடங்கியதுடன், பயணி களுக்கான பஸ் ஒன்றை வாங்கி தஞ்சாவூர் டு கும்பகோணம் வழித்தடத்தில் இயக்கினார்.

50 பஸ்... 75 வேன்... 75 லாரி... வெற்றிப் பயணத்தில் ‘கும்பகோணம்’ ரதிமீனா!

லாரி, பஸ் என கணிசமான லாபத்துடன் தொழில் மெள்ள வளர்ச்சியை நோக்கிச் சென்றது. 1972-ல் தமிழகத்தின் புகழ்பெற்ற பெரிய பஸ் கம்பெனியிடமிருந்து இரண்டு பஸ்கள் வாங்கி, கும்பகோணம் டு காரைக் கால், கும்பகோணம் டு நாகை வழித்தடத்தில் இயக்கினார். அடுத்த கொஞ்ச நாள்களிலேயே அந்த பெரிய கம்பெனியின் சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டன. நாங்கள் அந்த கம்பெனியிடம் விலைக்கு வாங்கிய இரண்டு பஸ்ஸையும் அரசு எடுத்துக்கொண்டது.

அதனால் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததுடன் இக்கட்டான நிலைக்கு ஆளாகினார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். ‘இப்படி ஆகிவிட்டதே...’ எனக் கலங்கிவிட்டார். நீண்ட யோசனைக்குப் பிறகு, லாரிகளை விற்பனை செய்து, அதில் வந்த பணத்தில் புதிதாக ஒரு பஸ் மற்றும் லாரி வாங்கி தன்னுடைய புதிய பயணத்தை ஆரம்பித்தார். ஒரு பக்கம் பயணிகள் பஸ், லாரி என நேரம், காலம் பார்க்காமல் ஓட்டி, ஓடி உழைக்க மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் நான்கு புதிய பஸ், ஆறு லாரிகள் வாங்கினார். வேலை அதிகமானது, தொழில் பிஸியாக மாறியது. அந்த சமயத்தில், நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பை நிறுத்திவிட்டு வொர்க்‌ஷாப்பை என்னைக் கவனிக்க சொல்லிட்டார். 1974-ல் டிரான்ஸ்போர்ட் தொழிலுக்குள் என் முதல் தடத்தைப் பதித்தேன். லாரி, பஸ் பழுது நீக்குவதில் தொடங்கி, ஓட்டுவது வரை தொழிலில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்தார். அடுத்த இரண்டு வருடத்தில் அப்பா இறந்துவிட்டார்.

அப்பா கற்றுக் கொடுத்த தொழில் நுணுக்கம், அம்மா மீனாம்பாள் சொன்ன அறிவுரை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு கவனமாக கம்பெனி யை நடத்தினேன். லாரி மற்றும் பயணிகள் பேருந்துக்கு எஃப்.சி எடுக்க மூன்று நாள் வரை ஆர்.டி.ஓ ஆபீஸ் வாசலில் படுத் திருந்தேன். தொழிலை உயிராக நேசித்தேன். பஸ் குறித்த ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இவை எல்லாம் கம்பெனியை மேலும் வெற்றிப் பாதைக்குச் செல்ல வைத்தது. அடுத்தகட்டமாக, சொகுசு ஆம்னி பஸ் தொழிலில் தடம் பதிக்கலாம் என்ற யோசனை வந்தது. பின்னர், 1984-ல் நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரூ.10 லட்சம் முதலீட்டில் புதிதாக இரண்டு சொகுசு ஆம்னி பஸ்கள் வாங்கி னேன். நண்பனின் அம்மா பெயரில் பாதியான ரதி, என்னுடைய அம்மா பெயரில் பாதியான மீனா இரண்டையும் சேர்த்து ரதிமீனா டிராவல்ஸைத் தொடங்கினேன்.

கும்பகோணம் டு சென்னை, சென்னை டு கும்பகோணம் வழித்தடத்தில் இரண்டு ஆம்னி பஸ்கள் ஓடத்தொடங்கின. தொழில் லாபகரமாகச் சென்று கொண்டிருந்த சமயத்தில், 1989-ல் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்க அரசு தடை விதித்தது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானேன். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பல பிரச்னைகள் என்னைச் சூழ்ந்தன அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஆம்னி பஸ் இயக்க விதித்திருந்த தடையை அரசு தளர்த்தியது. அப்போது தான், எனக்கு நிம்மதியே வந்தது. பயணிகளின் திருப்தி தான் முக்கியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு தொழிலை நேர்த்தியாக நடத்தினேன். பஸ்ஸில் ஏறும் பயணிகளிடம் ஃபீட்பேக் கேட்டு அவர்கள் சொல்வதை செயல்முறைப் படுத்துவேன். அதற்குப் பின் எங்கள் டிராவல் பிசினஸ் ஏறுமுகம் தான். அடுத்த இரண்டு வருஷத்துல ஆறு புதிய சொகுசு ஆம்னி பேருந்துகள் வாங்கினேன். அந்தக் காலகட்டத்தில் பார்சலில் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு சேர்க்க பெரிய தேவை இருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் பொருள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது.

50 பஸ்... 75 வேன்... 75 லாரி... வெற்றிப் பயணத்தில் ‘கும்பகோணம்’ ரதிமீனா!

பார்சல் டெலிவரிக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், 1994-ல் ரதிமீனா ஸ்பீடு பார்சல் சர்வீஸ் என்ற பெயரில் லோடு வேன் மூலம் பார்சல் எடுத்துச் செல்லும் கம்பெனி தொடங்கினேன். தென் இந்தியா முழுவதும் இணைக்கும் வகையில் அதைச் செயல்படுத்தினேன். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பார்சல் புக்கிங் ஆபீஸ் ஆரம்பித்தேன். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எங்கள் பார்சலுக்கான சர்வீஸ் ஆபீஸ் செயல்பட்டது. குறைந்த வாடகை, குறித்த நேரத்தில் டெலிவரி என செயல்படுத்தியதால், ஆம்னி பயணிகள் பேருந்து தொழிலைப்போலவே, ஸ்பீடு பார்சல் சர்வீஸ் தொழிலும் படிப்படியாக வளர்ந்தது. மக்களும் பெரும் ஆதரவைத் தொடர்ந்து தந்தனர். பின்னர், சென்னையில் பல இடங்கள், புதுச்சேரி, மதுரை, கும்பகோணம், திருவாரூர் என முக்கிய நகரங்களில் சொந்தமாக இடம் வாங்கி பார்சல் புக்கிங் மற்றும் டெலிவரிக்கான ஆபீஸ் அமைத்து தொழிலை விரிவாக்கம் செய்தேன்.

அத்துடன் கும்பகோணம் டு சென்னை, கும்ப கோணம் டு கோவை, சென்னை டு திருவனந்த புரம், கும்பகோணம் டு பெங்களூரு எனத் தமிழகத்தின் பல முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக் கும் பயணிகள் சொகுசாக செல்கிற வகையில் எங்களுடைய பஸ் சேவை செயல்பட்டு வருகிறது. சொகுசு ஆம்னி குளிர்சாதன பஸ் மற்றும் வால்வோ பஸ் என 50 பஸ்கள் எங்கள் கம்பெனி மூலம் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பார்சல் சர்வீஸுக்குத் தனியாக 75 பார்சல் வேன் இயங்குகின்றன. 2010-ல் சிமென்ட் ஆலைகளில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றி டெலிவரி செய்வதற் கான ரதிமீனா ரோடுவேஸ், சங்கையா ரோடுவேஸ் என்ற பெயர்களில் ரோடு வேஸ் தொடங்கினேன். அரியலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சிமென்ட் கம்பெனியி லிருந்து பல்க்கர் லாரிகளில் மூட்டையாக இல்லாமல் தூளாக சிமென்டை ஏற்றி தமிழகம் முழுக்க டெலிவரி செய்து வருகிறேன். தற்போது, கனரகமான 75 பல்க்கர் லாரிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன’’ என்று பெருமிதத் துடன் முடித்தார் சேகர்.

1972-ல் 10 பேர் வேலை பார்த்த இந்த நிறுவனத்தில், இப்போது 1,300 பேர் வேலை பார்க்கிறார்கள். சேகரின் தம்பி சங்கர், சேகரின் மகன் பிரகாஷ் பிரபு உள்ளிட்டோரும் அவருக்குத் துணையாக இருந்து தொழிலைக் கவனித்து வருகின்றனர்.