Published:Updated:

50 நாடுகள்... 2,000 வாடிக்கையாளர்கள்... கோவையிலிருந்து கலக்கும் டெக்னாலஜி நிறுவனம்..!

கணேஷ் சங்கர், சுந்தர், சங்கர், மணிஷ்
பிரீமியம் ஸ்டோரி
கணேஷ் சங்கர், சுந்தர், சங்கர், மணிஷ்

பிசினஸ்

50 நாடுகள்... 2,000 வாடிக்கையாளர்கள்... கோவையிலிருந்து கலக்கும் டெக்னாலஜி நிறுவனம்..!

பிசினஸ்

Published:Updated:
கணேஷ் சங்கர், சுந்தர், சங்கர், மணிஷ்
பிரீமியம் ஸ்டோரி
கணேஷ் சங்கர், சுந்தர், சங்கர், மணிஷ்

தொழில் முனைவுக்கான ஐடியாவை நாம் செய்யும் வேலையில் இருந்தே கண்டு பிடிக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. கணேஷ் சங்கர், தனது ஸ்டார்ட்அப் பிசினஸுக்கான ஐடியாவை அப்படித்தான் கண்டறிந்தார். ஆர்.எஃப்.பி.ஐ.ஓ (RFPIO) என்னும் நிறுவனத்தைத் தொடங்கி கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். டெண்டர் குறித்த தகவல்களை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் நிறுவனம் இது. கோவை மற்றும் அமெரிக்காவில் சுமார் 400 நபர்கள் இவரு டைய நிறுவனத்தில் பணி யாற்றுகின்றனர். சில நாள் களுக்கு முன்பு சென்னை வந்திருந்த கணேஷ் சங்கரை சென்னையில் உள்ள ஒரு காபி ஷாப்பில் சந்தித்துப் பேசினோம். தனது பிசினஸ் பயணத்தைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

50 நாடுகள்... 2,000 வாடிக்கையாளர்கள்... கோவையிலிருந்து கலக்கும் டெக்னாலஜி நிறுவனம்..!

ஆரம்பகாலம்...

‘‘என் சொந்த ஊர் கோவை. நடுத்தரக் குடும்பம். குடும்பத்தில் பெரும்பாலான வர்கள் அரசுப் பணியாளர்கள். அதனால், நான் படித்து முடித்த பின் வேலைக்குப் போக வேண்டும் என்றுதான் அவர்கள் ஆசைப் பட்டார்கள். ஆனால், என் நண்பர்கள் எல்லாம் சிறு தொழில் செய்பவர்கள்தான். இன்ஜினீயரிங் படிப்பதற் கான ‘கட்ஆப்’ சிறிதளவு குறைந்துவிட்டது. அதனால் பி.எஸ்ஸி படித்தேன். படித்து முடித்தவுடனே எம்.பி.ஏ படித்தேன்.

எம்.பி.ஏ படிக்கும்போதே கேம்பஸில் இந்தியாபுல்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு ஓரிரு வருடங்கள் இருந்த பிறகு, நவ்யா மார்க்கெட்ஸ் நிறுவனத்தில் (சென்னை) சேர்ந்தேன். அங்கு விற்பனை யில் முக்கிய இடத்துக்கு உயர்ந்தேன். நிதி சார்பாக தன்னிறைவாகவே இருந் தேன். அப்போதுதான் 2008-ம் ஆண்டு சப்பிரைம் கிரைசஸ் உருவானது.

இனி புரோக்கிங் துறையில் இருக்க வேண்டாம் என முடிவெடுத்து, டெக்னாலஜி துறைக்கு மாறினேன். அப்போது நிதிச் சேவைகள் தொடர்பான சாஃப்ட்வேரை ஒரு நிறுவனம் உருவாக்கியது. அவர்களுக்குத் தேவையான இண்டஸ்ட்ரி ஆலோசனை வழங்க நான் இணைந்தேன்.

சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு, குடும்பச் சூழல் காரணமாக மீண்டும் கோவைக்கே செல்ல முடிவெடுத்தேன். அப்போது மிகக் குறைந்த டெக்னாலஜி நிறுவனங்களே கோவையில் இருந்தன. என்றாலும், கோவையில் உள்ள எக்ஸ்டெரோ நிறுவனத்தில் எனக்கு பிசினஸ் அனலிஸ்ட் வேலை கிடைத்தது. சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு, அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

பிசினஸ் ஐடியா...

அமெரிக்காவில் நான் புராடக்ட் டீமில் முக்கிய பொறுப்பில் இருந்தேன். ஒரு நிறுவனம் தங்களுக்குத் தேவையான சேவையை வாங்க வேண்டும் எனில், பர்ச்சேஸ் டீம் இருக்கும், விற்பதற்கு சேல்ஸ் டீம் இருக்கும். ஏலம் மூலமே (Request for proposal) வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒரு நிறுவனம் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிவிக்கும். வாடிக்கையாளர்கள் போட்டியிட்டு அந்த ஆர்டரைப் பெறுவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை.

நான் வேலை செய்த நிறுவனத்தில் சேல்ஸ் டீம் அனைத்து வேலைகளையும் பார்த்துவிடும். அதாவது, எந்தெந்த ஏலத்தில் பங்கெடுப்பது, கட்டணம் உள்ளிட்டவற்றை முடிவெடுத்துவிடுவார்கள். ஆனால், புராடக்ட் பற்றிய குறிப்புகளை எங்கள் குழுதான் அனுப்ப வேண்டும். இது ஏற்கெனவே அனுப்பியதாக இருந்தாலும் நாங்கள் ஒரு முறை பார்த்து, தேவைக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்து தான் அனுப்ப வேண்டும். ஒரு வாரத்தில் 30% நேரம் எனக்கு விரயமானது.

ஒவ்வொரு முறை எங்கள் நிறுவனம் ஏதாவது ஒரு ஆர்டரைப் பெறுவதற்கான முயற்சியில் இருக்கும்போது கணிசமான அளவுக்கு மனிதவளம் வீணாகியது. அதனால் இதற்கென டூல்கள் ஏதாவது இருக்கிறதா எனத் தேடினோம். இருக்கும் டூல்களை ஓரளவுக்குப் பயன்படுத்த முடிந்ததே தவிர, எந்த பெரிய நிறுவனமும் இந்த சிக்கலுக்கென எந்த சாஃப்ட்வேரையும் இதுவரை உருவாக்கவில்லை என்பது தெரிந்தது.

அப்போதுதான் நாமே இதற்கென ஒரு நிறுவனத்தை உருவாக்கினால் என்ன என்கிற ஐடியா வந்தது. இந்த ஐடியாவுடன் சில முதலீட்டாளர்களிடம் பேசினோம். இரண்டு மில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் சுமார் 15 கோடி) அளவுக்கு முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கி னார்கள். ஐந்து லட்சம் டாலர்கள் ஆரம்பகட்ட முதலீட்டைத் தந்தார்கள். நான் (கணேஷ் சங்கர்), சங்கர், சுந்தர் ஆகியோருடன் இணைந்து நிறுவனத் தைத் தொடங்கினோம். டெக்னாலஜி குழுவை ஒருங்கிணைக்க எங்களுடைய மற்றொரு நண்பர் மணிஷை இணைத்துக்கொண்டோம்.

கோவையில் அலுவலகம் தொடங்கி புராடக்ட்டை உருவாக்கத் தொடங்கினோம். அமெரிக்காவில் நாங்கள் 83 சதுர அடி அளவு மட்டுமே கொண்ட அலுவலகத்தில் பணியாற்றி னோம். கணிசமான அளவு ஆர்டர் வரும் வரை இதே அலுவலகத்தில்தான் பணியாற்றினோம்.

கணேஷ் சங்கர், சுந்தர், சங்கர், மணிஷ்
கணேஷ் சங்கர், சுந்தர், சங்கர், மணிஷ்

வாடிக்கையாளர்கள்...

சந்தையில் இதற்கென பிரத்யேக தேவை இருந்ததால், நாங்கள் புராடக்டை அறிமுகம் செய்தவுடனே சந்தையில் பிரபலமானோம். தற்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்க ளுக்கு 2,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். பார்ச்சூன் 100 நிறுவனங்களில் 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களுடைய வாடிக்கையாளர். தவிர, எந்தக் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்தும் எங்களுக்கு 1.2 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் வருவதில்லை. அதாவது, எந்த ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனத்தையும் நம்பியும் நாங்கள் இல்லை. அனைத்துப் பகுதிகளில் இருந்தும் எங்களுக்கு வருமானம் வருகிறது.

நிறுவனம் செயல்பட தொடங்கிய 13 மாதங்களில் சீரியஸ் ‘A’ மூலம் 25 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டினோம். அதன் பிறகு, இதுவரை நிதி திரட்டவே இல்லை. சில ஆண்டு களுக்கு முன்பு இரு நிறுவனங் களை நாங்கள் வாங்கினோம். எங்களிடம் சீரான கேஷ் ஃப்ளோ இருந்ததால், பங்குகளை விற்று நிதி திரட்டாமல், கடன் மூலமாக இரு நிறுவனங்களை வாங்கினோம். தற்போது நஷ்டத்தில் இருந்தாலும், கூடுதலாக இரு நிறுவனங்கள் எங்களிடம் உள்ளன.

எங்களுடைய மொத்த வருமானத்தில் அமெரிக்காவில் இருந்து 60% வருகிறது. இந்தியா வில் இருந்து 8% வருகிறது.

நாங்கள் இன்னும் வளர்வதற் கான வாய்ப்பு நிறையவே இருக் கிறது. இப்போதைக்கு 2,000 நிறுவனங்கள் மட்டுமே எங்கள் வாடிக்கையாளர்களாக இருக் கிறார்கள். குறைந்தபட்சம் 10,000 நிறுவனங்களையாவது எங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டுவரும் பணியில் இருக் கிறோம். எங்கள் நிறுவனம் நன்றாக வளர்ச்சி அடைந்து வருவதால் முதலீட்டாளர்கள் வெளியேறுவது குறித்து இப்போது யோசிக்கவேயில்லை. எனவே, எங்கள் வருமானம் பற்றியோ சந்தை மதிப்பு பற்றியோ இப்போது அதிகம் கவலைப்பட வில்லை. எங்கள் பணியாளர்கள் பலருக்கும் எங்கள் நிறுவனத்தின் பங்குகளைத் தந்திருக்கிறோம். அவர்கள் உற்சாகமாக வேலை பார்க்கிறார்கள்’’ என்றார் புன்னகைத்தபடி.

வித்தியாசமான பிசினஸ் ஐடியாவுடன் செயல்படும் இந்த நிறுவனம் நிச்சயம் ஜெயிக்கும்!