Published:Updated:

“என்னால பார்க்க முடியாது... ஆனா, சாஃப்ட்வேர் கம்பெனி நடத்த முடியும்..!’’

கணேசன் அழகுசுந்தரம்

தன்னம்பிக்கை

“என்னால பார்க்க முடியாது... ஆனா, சாஃப்ட்வேர் கம்பெனி நடத்த முடியும்..!’’

தன்னம்பிக்கை

Published:Updated:
கணேசன் அழகுசுந்தரம்

மென்பொருள்களைத் தயாரிக்க சுறுசுறுப்பான மூளை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம், கூர்மையான கண்கள். ஆனால், கணேசன் அழகுசுந்தரத்தால் பார்க்க முடியாது. என்றாலும், நிறுவனங் களுக்குத் தேவையான மென்பொருள்களைத் தயாரித்துத் தரும் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சென்னை கொளத்தூரில் இருக்கும் அவருடைய டேக்டெஸ் இன்ஃபோ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். சாதிக்க வேண்டும் என்று புறப்பட்ட அவரது வாழ்க்கைக் கதையை அவரே சொன்னார்.

 கணேசன் அழகுசுந்தரம்
கணேசன் அழகுசுந்தரம்

“எனக்குப் பிறக்கும்போதே கண்ணுல பார்வை பிரச்னை இருந்துது. அதைச் சரி பண்ண ஆறு மாசக் குழந்தையா இருந்தப்பவே, என் கண்ணுல அறுவைசிகிச்சை செஞ்சாங்க. ஆனா, சிகிச்சை பலன் கொடுக்காம இடது கண்ணுல பிரச்னையை ஏற்படுத்துனுச்சு. அது வலது கண்ணுக்கும் பரவத்தொடங்க, வலது கண்ணை மட்டும் எப்படியோ குணப்படுத்திட் டாங்க. அதனால, ஒரு கண்ணுல மட்டும் எனக்குப் பார்வை இருந்தது. இன்னொரு கண்ணுல எனக்குப் பார்வை இல்லைங்குறத அந்தச் சமயத்துல நான் குறையா நினைக்கல.

இயல்பிலேயே எனக்கு படிப்பு மேல நல்ல ஆர்வம் இருந்துச்சு. ஏதாவது ஒரு விஷயத்தை தனித்தன்மையோட பண்ணணும்ங்குற ஆசை எனக்குள்ள எப்பவும் இருக்கும். கணினி சம்பந்தமான விஷயங்கள்ன்னா எக்ஸ்ட்ரா குஷி ஆகிடுவேன். நான் பத்தாவது படிக்கும் போது வீட்டுல கணினி வாங்கிக் கொடுத்தாரு என் அப்பா. அவரு பேங்குல வேலை பார்த்து வந்ததாலயோ என்னவோ கணக்கு வழக்குகள் மேல இயல்பாவே என்னோட நாட்டம் அதிகமாச்சு. ‘எக்கச்சக்கமான கணக்கு வழக்குகளை மெயின்டைன் பண்றோமே... அதை பேப்பரில் எழுதி வைக்காம கம்ப்யூட்டரில வச்சு பராமரிச்சா நேரமும் மிச்சமாகும் வேலையும் மிச்சமாகுமே’ன்னு நெனைச்சேன். ‘இதுக்குன்னு ஏன் ஒரு பிரத்யேகமான சாஃப்ட்வேர் இல்லை’ன்னு அடிக்கடி யோசிப்பேன். அப்பதான் என்னோட ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமா சாஃப்ட்வேர் பக்கமா திரும்புச்சு. காலேஜுலயும் கணினி சம்பந்தமான படிப்பையே பட்டப்படிப்பா தேர்ந்தெடுத்தேன்.

ஆசைப்பட்ட துறையிலேயே கல்லூரிப் படிப்பும் தொடர, இதைவிட வேறென்ன வேணும்ன்னு வாழ்க்கை இனிமையா போச்சு. அப்பதான் எதிர்பாராதவிதமா பஸ் ஆக்சிடென்ட்ல சிக்குனேன். அதுல, எனக்கிருந்த ஒரே கண்ணோட பார்வையும் பறிபோயிடுச்சு. இனி உலகத்தை ஒரு கண்ணாலகூட பார்க்க முடியாது; என்னைச் சுத்தி வர்ற ஓசையால மட்டுமே என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயம். சின்ன வயசுல ஒரு கண் எனக்குத் திரும்பக் கிடைச்ச மாதிரி, திரும்பவும் எனக்குப் பார்வை வந்துடும். இந்த உலகத்தை மீண்டும் பார்ப்போம் என்கிற ஏக்கத்தோட நாள்கள் போயிட்டு இருந்தது. ஆனா, அந்த ஏக்கம் ஏக்கமாவே தொடர்ந்துகிட்டிருந்தது.

கல்லூரியில படிச்சு முடிச்சவுடனே என் நண்பர்கள் வெளிநாடுகள்ல வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. வாழ்க்கையில அடுத்து என்ன பண்ணப்போறோம்ங்குற மிகப் பெரிய கேள்விக்குறி என் முன்னாடி நின்னுச்சு. என்னால பார்க்க முடியாதுங்கிறதுக்காக நான் மனம் தளர்ந்துடல. யாரை விடவும் நான் சளைச்சவன் இல்லையே... வாழ்க்கையை வாழுறதுக்கான காதலும், திறமையை நிரூபிக்கத் தேவையான ஆர்வமும் இருக்கு. இனிமையான வாழ்க்கையை வாழ எனக்கு இது போதுமே... அப்படிங்குற உத்வேகம் உள்ளுக்குள்ள இருந்தாலும் விழித்திறன் சவாலுடைய என்னை எந்த நம்பிக்கையில வேலைக்கு எடுத்துப்பாங்க, என்னோட திறமையை அவங்களுக்கு நான் எப்படி நிரூபிக்க முடியும் என்கிற கேள்வியும் எனக்குள்ள இருந்துகிட்டே இருந்துச்சு.

 கணேசன் அழகுசுந்தரம்
கணேசன் அழகுசுந்தரம்

எனக்குக் கண் பார்வை இல்லை என்கிறதுக்காக என் மீது யாராவது அனுதாபப்பட்டா அது எனக்கு சுத்தமா பிடிக்காது. என் திறமையைப் பார்த்து வேலை தரணும்னு நினைச்சேன். அதே சமயம், நாம் ஏன் சொந்தமா தொழில் தொடங்கக்கூடாதுங்குற எண்ணம் எனக்குள்ள வந்துச்சு.

அதே வேகத்துல வெறும் மூணே ஊழியர்களோட நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் உருவாக்கி கொடுக்குற ஐ.டி கம்பெனியை சிதம்பரத்துல ஆரம்பிச்சேன். ஒண்ணு ரெண்டு வருஷங்கள் ஐ.டி நிறுவனத்துல வேலை செஞ்சவங்கள வேலைக்கு எடுத்தேன். புதுசா தொடங்கப்பட்ட நிறுவனம் என்கிறதால தரமான சாஃப்ட்வேரைத் தயாரிச்சு கொடுப்பாங்களோங்கிற தயக்கம் எங்களுக்கு புராஜெக்ட் தர்றவங்களுக்கு இருந்திருக்கும் போல. இன்னும் சில பேர் ஒருபடி மேலயே போய், ‘நல்லா இருக்குறவனாலயே சாஃப்ட்வேரை சரியா பண்ணித் தர முடியல. உங்களால எப்படி முடியும்’ன்னு கேட்டப்போ மனசளவுல உடைஞ்சு போனேன். ஆனா, வெளியில காட்டிக்கல. வாடிக்கையாளர் களுக்கு நம்பிக்கை வர்ற அளவுக்கு வேலையை நேர்த்தியா பண்ணிக்குடுக்கணும்ங்கிற வெறியோட உழைக்க ஆரம்பிச்சேன். ஆனா, திறமையானவங்களை வேலைக்கு எடுக்குறது அவ்வளவு ஈஸி இல்ல. வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்குறதுல இருந்து அவங்களுக்கான சம்பளம் கொடுக்குறதுவரை என்னோட சிக்கல்கள் மேலமேல தொடர்ந்துகிட்டே இருந்துச்சு.

பிசினஸ்ன்னா ரொம்ப ஈஸி... ஒரே பாட்டுல ஓஹோன்னு வந்துடலாம் என்கிற நினைப்பு தவிடுபொடியாகுற அளவுக்கு அடி வாங்கினேன். முன் அனுபவம் இல்லாம நேரடியா தொழிலைத் தொடங்கினது ஒரு காரணம். சாஃப்ட்வேர் தொழில்ல முன்னேறனும்னா சிதம்பரத்துல இருந்தா சரிபட்டு வராது; சென்னைக்குப் போனாதான் முன்னேற முடியும்னு நெனைச்சு சென்னைக்கு வந்து, இன்னும் தீவிரமா முயற்சி செஞ்சேன். ஒரு ரீடெய்ல் பிஸினஸ் நிறுவனத்துக்கு சாஃப்ட்வேர் உருவாக்கிக் கொடுக்குற வாய்ப்பு கிடைச்சுது. அதுவே என் வாழ்க்கையோட திருப்புமுனையாவும் மாறுச்சு. கிளைவாரியாக விற்பனை எப்படி நடக்குது, வியாபாரத்துக்கான பொருள்கள் எங்கெங்கே தேங்கி நிற்கிறது என்பது தொடங்கி, பொருள்களுக்கான தேவை எந்த இடத்தில் அதிகம் இருக்கிறது என்பது வரை நிர்வாகி எங்கிருந்து வேண்டுமானாலும் தன் நிறுவனத்தைக் கண்காணிக்கும் படியான சாஃப்ட்வேரை உருவாக்கிக் கொடுத்தோம். அந்த ரீடெய்ல் நிறுவனத்துக்கு நான் உருவாக்கித் தந்த சாஃப்ட்வேர் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

இந்த உலகத்துல நம்ம திறமையை நிரூபிச்சுக் காட்டினா, அதுக்குரிய அங்கீகாரத்தைக் கட்டாயம் கொடுக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அனுபவபூர்வமாக அப்பதான் உணர்ந்தேன். அந்த வெற்றி தந்த தெம்புல அடுத்தடுத்த சாஃப்ட்வேர் புராஜெக்டுகளை வாங்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு அமெரிக்கா, மலேசியான்னு பல வெளிநாடுகளுக்கு சாஃப்ட்வேர் சேவையைத் தர்ற அளவுக்கு என்னோட நிறுவனம் வளர்ச்சி அடைஞ்சிருக்கு. 250-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்டுகளை வெற்றிகரமா முடிச்சிருக்கோம். 40 பேர் என்னோட வேலை பார்க்கிறாங்க. உலகத்திலேயே மிகச் சிறந்த சாஃப்ட்வேர் நிறுவனமா ஆகணும்ங்கிறது என்னோட பெருங்கனவு... அது நிச்சயம் நடக்கும்’’ என நம்பிக்கையுடன் பேசி முடித்தார் கணேசன்.

இத்தனைக்கும் தனக்குப் பார்வை இல்லை என்பதை கணேசன் ஒரு குறையாகவே எப்போதும் எடுத்துக்கொள்ள மாட்டாராம். சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு வந்தபோது பல்வேறு இடங்களுக்கு சென்று வர காரும் டிரைவரும் வைத்திருந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த ஐ.பி.சி.என் கருத்தரங்குக்கு அவர் சென்னையி லிருந்து தனியாகப் போய், அங்குள்ள வாடிக்கையாளர்களைச் சந்தித்து வந்தபின், தற்போது எல்லா இடங் களுக்கும் தனியாகத்தான் போய் வருகிறாராம். ‘‘உலகம் முழுக்க நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு உதவத் தயாராகவே இருக்கிறார்கள். எனவே, நாம் எங்கே யாவது போய் மாட்டிக்கொண்டு விடு வோமோ என்கிற பயமே வேண்டாம்’’ என்று மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் கணேசன் தைரியம் சொல்கிறார்.

இரண்டு கண்களால் இதைப் படிக்கும் நாம் அனைவருமே கணேஷன் அழகுசுந்தரத்துக்கு ஒரு சூப்பர் சல்யூட் அடிக்கலாம்!