நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

19 வயதில் ரூ.1000 கோடி... ஜெப்டோ நிறுவனத்தை உருவாக்கிய பணக்கார இந்திய இளைஞர்கள்!

ஆதித் பலிச்சா, கைவல்யா வோஹ்ரா, நேஹா நர்கெடே
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதித் பலிச்சா, கைவல்யா வோஹ்ரா, நேஹா நர்கெடே

பிசினஸ் உத்தி

முன்பெல்லாம் ஒருவர் ரூ.100 கோடி சம்பாதிக்க வேண்டுமெனில், 35 வயதுக்கு மேல் ஆகிவிடும். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் 20 வயதுக்குள்ளேயே நூறு கோடி என்ன, ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்த்துவிடுகிறார் கள் இன்றைய இளைஞர்கள்.

ஐ.ஐ.எஃப்.எல் (IIFL) வெல்த் - ஹூரன் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 2022-ல் இளம் தொழில்முனைவோர்களாக திகழ்பவர்கள் ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா. இவர்கள் இருவருக்கும் 19 வயதுதான். ஆதித் பலிச்சா ரூ.1,200 கோடி நிகர மதிப் புடன் 950-வது இடத்திலும், கைவல்யா வோஹ்ரா ரூ.1,000 கோடி மதிப்பில் 1036-வது இடத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் முன்னதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ‘30 அண்டர்ஸ் 30’ பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப் பிடத்தக்கது!

யார் இந்த ஆதித் பலிச்சா, கைவல்யா வோஹ்ரா?

மளிகைப் பொருள்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யும் நிறுவனம்தான் ஜெப்டோ (Zepto). மும்பை யைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தை ஆதித்தும், கைவல்யாவும் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார்கள். இந்த ஆண்டு 2022 ஏப்ரல் மாதம் தான் அந்த நிறுவனம் செயல்படத் தொடங்கியது. ஆனால், ஆரம்பித்த ஆறே மாதங்களுக்குள் இந்த நிறுவனம் மிகவும் பிரபலம் அடைந்ததுடன், நிறுவனத் தைத் தொடங்கிய இந்த இருவரையும் இளம் பெரும் பணக்காரர்களாகவும் உயர்த்திவிட்டது.

ஆதித் பலிச்சா
ஆதித் பலிச்சா

10 நிமிடங்களில் டெலிவரி...

குறுகிய காலத்தில் ஜெப்டோ அடைந்த இந்த பிரபலத்துக்குக் காரணம், 10 நிமிடங்களில் மளிகைப் பொருள்களை டெலிவரி செய்யத் தொடங்கியதுதான்

இந்த நிறுவனம் 2021-ல் 13 வெவ்வேறு பகுதிகளில் 86-க்கும் மேற்பட்ட மொத்த வணிகக் கடை உரிமையாளர் களுடன் இணைந்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான டெலிவரிகளை வெற்றிகர மாகச் செய்தது. கிளவுட் ஷாப் மற்றும் மைக்ரோ வேர்ஹவுஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, மளிகைப் பொருள்களை விரைவாக டெலிவரி செய்யும் நேரத்தை 10 நிமிடங்களுக்குக் குறைத்துள்ளது.

படிப்பை நிறுத்திவிட்டு, பிசினஸ் செய்ய வந்தவர்கள்...

ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ராவும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், கணினி அறிவியல் படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி இந்தியாவுக்குத் திரும்பியவர்கள். இந்தியாவுக்குத் திரும்பியவுடன் மளிகை வணிகத்தைத் தொடங்க ஜெப்டோ நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

ஆதித் பலிச்சா, கணிதம் மற்றும் கணினி அறிவியலில் டிப்ளோமா முடித்த பிறகு, ஸ்டான்ட் ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்றார். 17 வயதில் தன்னுடைய முதல் நிறுவனமாக கோபூலை (GoPool) நிறுவினார். அதன்பிறகு 2020-ல் இதைவிட்டு வெளியேறினார். பின், கிரானகார்ட் மற்றும் ஜெப்டோவை நிறுவினார். ஆதித், கிரானா கார்ட் (Kiranakart) மற்றும் ஜெப்டோ ஆகிய நிறுவனங் களின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனரும் ஆவார்.

கைவல்யா வோஹ்ரா, கிரானா கார்ட் மற்றும் ஜெப்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் முதன்மை தொழில்நுட்ப ஆலோசகரும் ஆவார். இவரும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்றார்.

கோவிட்-19 பரவலின்போது, ஜெப்டோவுக்கான தொடக்கப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. பின்னர், கொரோனா தொற்று குறையத் தொடங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக மளிகைப் பொருள்களை விநியோகிக்கத் தொடங்கினர்.

கைவல்யா வோஹ்ரா
கைவல்யா வோஹ்ரா

பிரபலம் ஆகாமல் போன கிரானாகார்ட்...

ஜெப்டோ நிறுவனம் மக்களின் கவனத்தை ஈர்த்த அளவுக்கு கிரானாகார்ட் (kiranakart) பாராட்டைப் பெறவில்லை. கிரானாகார்ட்டும் ஒரு பல்பொருள் அங்காடி விநியோக சேவையாகும். 45 நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் மளிகைப் பொருள்களை வழங்க கிரானாகார்ட் வணிகர்களுடன் ஏற்பாடு செய்திருந்தது.

ஜெப்டோ தனது 90% ஆர்டர்களை டார்க் ஸ்டோர் மற்றும் மினிவேர் ஹவுஸ் மூலம் மளிகைப் பொருள்களைப் 10 நிமிடங்களில் வழங்குகிறது. இந்தியாவின் விரைவான வர்த்தகப் பிரிவில் ஜெப்டோ செயல்படுகிறது. “மொத்தம் மற்றும் சில்லறை விநியோக மையங்களின் மூலம் டிஜிட்டல் பர்ச்சேஸ்களைப் பெருமளவில் பூர்த்தி செய்ய ஹாட்ஸ்பாட் முறையைப் பயன்படுத்துகிறது. குறைபாடற்ற டெலிவரியை உறுதி செய்ய சராசரி டெலிவரி நேரம் 8 நிமிடங்கள் மற்றும் 47 விநாடிகள் ஆகும்” என்று ஆதித் கூறுகிறார்.

யாருக்கு எவ்வளவு பங்கு..?

நெக்ஸஸ் வென்ச்சர்ஸ் ஜெப்டோவின் பங்குகளில் 20.07% பங்குகளை வைத்திருக்கிறது. ஒய் காம்பினேட்டர், லச்சி குரூம் மற்றும் க்ளேட் புரூக் ஆகியவை முறையே 14.8%, 10.32% மற்றும் 8.7% ஜெப்டோவின் பங்குகளை வைத்திருக்கின்றன. ஆதித் பலிச்சா, தன் உறவினர் கவித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ராவுடன் 15.18% பங்குகளை வைத்துள்ளார்.

பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி - என்.சி.ஆர் ஆகிய பகுதிகளில் ஜெப்டோ வேகமாக வளர்ந்து வரு கிறது. வரும் மாதங்களில் சென்னை, புனே மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் விரைவில் செயல்பட இருக்கிறது. இதன் தொழில்நுட்ப அலுவலகம் பெங்களூரில் செயல் படுகிறது என்றாலும், நிறுவனத்தின் மற்ற செயல்பாடுகள் மும்பை யிலிருந்துதான் மேற்கொள்ளப் படுகிறது.

ஜெப்டோவின் மாதாந்தர வளர்ச்சி விகிதம் 50% என்றும், மாதாந்தர வைப்பு விகிதம் 78% என்றும் ஆதித் பலிச்சா கூறுகிறார்.ஜெப்டோவின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம், ஊபர், ஃப்ளிப்கார்ட், ட்ரீம் லெவன், அமேசான் மற்றும் பார்மசி ஆகிய வற்றிலிருந்து நன்கு அறியப்பட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் நிபுணர்கள் பலர் ஜெப்டோவின் குழுவில் இணைந்திருப்பதுதான்.

அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர்...

கடந்த மே 2, 2022 அன்று கடைசி யாக அறிவிக்கப்பட்டபோது இதன் வருடாந்தர வருவாய் வளர்ச்சி 200 முதல் 400 மில்லியன் டாலர் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டு மார்ச் காலாண்டில் குறைந்தது ஒரு பில்லியன் (100 கோடி) டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெப்டோவின் போட்டியாளர்கள்...

ஜெப்டோ நிறுவனத்துக்குப் போட்டியாக பல நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஜெப்டோ போன்றே மளிகைப் பொருள்களை வேகமாகவும் விநியோகித்து வருகின்றன. பிக் பாஸ்கேட், பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டா மார்ட் ஆகிய நிறுவனங்களும் மளிகைப் பொருள்களை 10 - 15 நிமிடங்களுக்குள் டெலிவரி செய் கின்றன. இவற்றுக்குப் போட்டியாக ஜெப்டோ நிறுவனமும் வளர்ந்து வருகிறது.

இந்தியா முழுக்க இன்னும் அதிகமான இடங்களில் மொத்த வணிகக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், அதிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவும் ஜெப்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. “இந்தியாவில் மார்க்கெட்டிங்கில் இதுவரை யாரும் முழுமையாக தேர்ச்சி பெறவில்லை. இந்த அணுகுமுறையை செயல்படுத்த முயற்சி செய்யும் சில பழைய நிறுவனங்களை ஆய்வு செய்யும்போது, அவை பலவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பதையும், ஒரே மாதிரியில் செயல் படுவதற்கான நிலைத்தன்மை இல்லாததையும் கவனிக்க முடியும். இது ஒவ்வொரு பெரிய நிறுவனத்திலும் உள்ள மிகப் பெரிய பிரச்னையாகும்” என்று சொல்லியிருக்கிறார் ஆதித் பலிச்சா.

சிறு மளிகைக்கடைகளுக்கு சூப்பர் மார்க்கெட்டுகள் போட்டியாக வந்ததுபோல, பெரிய சூப்பர் மார்க்கெட்டு களுக்குப் போட்டியாக இந்த ஜெப்டோ நிறுவனம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் மூலம் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதுபோல, ஜெப்டா நிறுவனம் பெரிய நிறுவனமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நேஹா நர்கெடே
நேஹா நர்கெடே

‘‘என் அடையாளத்தை உருவாக்கினேன்; அது என்னை உருவாக்கியது!’’

- நேஹா நர்கெடே

ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹூரன் நிறுவனங்கள் வெளியிட்ட ‘இந்தியா ரிச் லிஸ்ட்’ பட்டியலில், ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி நிறுவனமான கன்ஃப்ளூயன்ட் (Confluent) மற்றும் அமெரிக்காவில் உள்ள ஓப்பன் சோர்ஸ் மெசேஜிங் சிஸ்டம் அப்பாச்சி காஃப்காவை (Apache Kafka) இணைந்து நிறுவிய நேஹா நர்கெடே (37), இந்தியாவின் இளம் சுயமாக உருவாக்கிய பெண் தொழில்முனைவோராக மாறியுள்ளார். ஐ.ஐ.எஃப்.எல் பட்டியலின்படி ரூ.4,700 கோடி மதிப்பீட்டில் அவர் 336-வது இடத்தில் உள்ளார்.

புனேவில் பிறந்த நேஹா நர்கெடே 2006-ம் ஆண்டு சாவித்ரிபாய் ஃபுலே புனே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார் மற்றும் அதே ஆண்டு தனது முதுகலைப் படிப்புக்காக ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்குச் சென்றார்.

அவர் ஆரக்கிளில் (Oracle) முன்னணி பொறியாளராக இருந்தார். பின்னர் கன்ஃப்ளூயன்ட் நிறுவனத்தை நிறுவுவதற்குமுன் லிங்க்ட்இன் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேஹா நர்கெடேவின் லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவர் இப்போது கன்ஃப்ளூயன்ட்டின் பகுதிநேர குழு உறுப்பினராகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சில முதன்மையான நிறுவனங்களான ஜெம், பிளாக் பார்ட்டி, மெட்டீரியல் பாதுகாப்பு, அபாகஸ் ஏஐ, கார்டெக்ஸ் டேட்டா, யுகாபைட், மெட்டாஃபர் டேட்டா, நேடலிஸ்ட், காமன் ரூம் போன்ற நிறுவனங்களில் முதலீட்டாளர் (அ) ஆலோசகராக இருந்துவருகிறார்.

ஜூன் 2022-ல் ஃபோர்ப்ஸும் நர்கெடேவை அமெரிக்காவின் பணக்கார பெண்களின் பட்டியலில் 57-வது இடத்தில் பட்டியலிட்டது, (அப்போதைய மதிப்பு 490 மில்லியன் அமெரிக்க டாலர்). 2019-ல் லண்டனில் கன்ஃப்ளூயன்ட் ஏற்பாடு செய்த அப்பாச்சி காஃப்கா உச்சி மாநாட்டில், 100 நிறுவனங்களில் 60 சதவிகித நிறுவனங்கள் அப்பாச்சி காஃப்காவைப் பயன்படுத்துவதாக நர்கெடே கூறினார். அது மட்டுமன்றி, வணிகங்கள் எப்படி மாறிவிட்டன என்பதைச் சுட்டிக்காட்டி பேச்சைத் தொடங்கிய நர்கெடே, “கடந்த காலத்தில், நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைத் தவிர்க்க முடியாத செயல்பாடாகவும், முதன்மைத் தகவல் அதிகாரியை (Chief Information officer) தொழில்நுட்பத் துறையின் தலைவராகவும்தான் கருதியது. ஆனால், இன்று தொழில்நுட்பம் ஒரு வணிகமாகவும் முதன்மைத் தகவல் அதிகாரி ஒரு வணிகத் தலைவராகவும் கருதப்படுகிறார்’’ என்று அவர் கூறினார்.

தனது பயணத்தைப் பற்றிக் கேட்டபோது, “என் அடையாளத்தை உருவாக்கினேன்; அது என்னை உருவாக்கியது. நமது சொந்த அடையாளத்துடன் எப்படி வசதியாக இருக்கிறோமோ, அதுவே நமக்கு மதிப்பு சேர்க்கும்’’ என்று கூறினார்.