Published:Updated:

`200 கடைகள்; அரை மணி நேர டெலிவரி சவால்!’ - டோமினோ’ஸ் பீட்ஸா ஜெயித்த கதை #BusinessMasters - 12

Domino's Pizza
Domino's Pizza ( Photo by Ashwini Chaudhary on Unsplash )

`அரை மணி நேரத்தில் பீட்ஸா டெலிவரி’ என்று புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது டோமினோ’ஸ் பீட்ஸா கடைகள் 200 இருந்தன. `ஒரு நிமிடம் தாமதமானாலும் வாங்க வேண்டாம்’ என்கிற அந்தத் திட்டம் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கத்திரிக்காய் வியாபாரமோ, கப்பல் கம்பெனியோ... எதுவாகவும் இருக்கட்டும், ஒரு பிசினஸில் நாம் விற்பனை செய்யும் பொருள் நான்கு பேருக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் வெற்றி, சாத்தியம். இந்த அடிப்படையைத்தான் `Branding’ என்று பிசினஸில் குறிப்பிடுகிறார்கள்.

தைவானைச் சேர்ந்த பிரபல பெண் தொழிலதிபர் ஈவா சென் (Eva Chen), `உங்கள் பிராண்டை ஒரு லைஃப்ஸ்டைலைப் போல உருவாக்குங்கள்; வாடிக்கையாளர்கள் தாங்களாகவே உங்களைத் தேடிவருவார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

அப்படித்தான், டாம் மோனாகன் வெகு தெளிவாக பிராண்டிங்கில் கவனம் செலுத்தினார். இன்றைக்கு அவர் உருவாக்கிய டோமினோ’ஸ் பீட்ஸா உலகின் மூலைமுடுக்குகளிலெல்லாம் உட்கார்ந்துகொண்டு தன் தர்பாரை நடத்திக்கொண்டிருக்கிறது.

Domino's Pizza Delivery
Domino's Pizza Delivery
Photo by Rauf Allahverdiyev from Pexels

அவரின் முழுப்பெயர் தாமஸ் ஸ்டீபன் மோனோகன் (Thomas Stephen Monaghan). 1937-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனுக்கு அருகிலுள்ள ஆன் ஆர்பர் என்ற இடத்தில் பிறந்தார். குடும்பத்துடன் குதூகலமாக வாழும் வாழ்க்கை டாம் மோனோகனுக்கு வாய்க்கவில்லை. தந்தை இறந்தபோது டாமுக்கு நான்கு வயது. அவருடைய அம்மா குழந்தைகளைத் தனியாளாக வளர்க்க முடியாமல், டாமையும் அவர் தம்பி ஜேம்ஸையும் ஓர் ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்தார். `ஃபெலிசியன் சிஸ்டர்ஸ்’ அந்த இல்லத்தைக் கன்னியாஸ்த்ரீகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது டாமுக்கு வெறும் ஆறு வயது. பின்னாளில் அவர் அம்மாவே குழந்தைகளைத் தன்னோடு அழைத்துப் போய் வளர்த்தார். என்றாலும், அந்த ஆதரவற்றோர் விடுதி டாமுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியது; புதுப்புது விஷயங்களைக் கற்றுத் தந்தது; பலவிதமான மனிதர்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது; எதிர்காலம் குறித்துக் கனவு காண அவருக்கு விதை போட்டது.

டாமுக்கு ஓர் ஆர்க்கிடெக்டாக ஆக வேண்டும் என்று ஆசை. அன்றைய காலத்தில் அமெரிக்காவில் பிரபலமானவராக இருந்தார் ஃபிராங்க் லாய்டு ரைட் (Frank Lloyd Wright) என்ற ஆர்க்கிடெக்ட். அவரைப் போல அழகழகான, விதவிதமான கட்டடங்களை வடிவமைக்க வேண்டும் என்கிற மாபெரும் கனவு டாமுக்கு இருந்தது.

பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு தன் சொந்த ஊரான ஆன் ஆர்பருக்கே திரும்பினார். ஆட்க்கிடெக்ட் படிக்க, மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். படிப்பு ஒரு பக்கம் ஈர்த்தாலும், வாழ்க்கை அவரையும் அவர் தம்பியையும் அலைக்கழித்தபடியே இருந்தது. வாழ்வதற்கு ஆதாரமான பணத் தேவை அவர்களைப் பாடாகப்படுத்தியது. கிடைக்கிற சின்னச் சின்ன வேலைகளை எல்லாம் பார்க்க ஆரம்பித்தார் டாம். ஒருகட்டத்தில் எது செய்தாலும் பணம் கிடைக்க வேண்டும் என்கிற நிலைமை அவரை சொந்தத் தொழிலில் ஈடுபட உந்தித் தள்ளியது.

டாம் மோனகன்
டாம் மோனகன்

அதற்கான வாய்ப்பும் வந்தது. 1960-ம் ஆண்டு. மிச்சிகனின் சிலான்ட்டி (Ypsilanti) என்ற இடத்தில் ஒரு சின்னஞ்சிறு பீட்ஸா கடை. என்ன காரணத்தாலோ அதன் உரிமையாளரால் அதைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. டாமும் அவருடைய தம்பி ஜேம்ஸும் சேர்ந்து அந்தக் கடையை விலைக்கு வாங்கினார்கள். டோமிநிக்’ஸ் (DomiNick’s) என்ற பெயர் கொண்ட அந்தக் கடையின் விலை 900 டாலர். கடையை நடத்த ஆரம்பித்த பிறகு டாம் மோனாகனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. சதா கடையிலேயே பழியாகக் கிடக்க வேண்டியிருந்தது. டாமுக்கு கடையை நடத்துவதில் இருந்த ஆர்வத்தைப் போல ஜேம்ஸுக்கு ஆர்வம் இல்லை. அவர் வேறு வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

ஒருநாள் ஜேம்ஸ் நேரடியாகவே சொல்லிவிட்டார். ``டாம், எனக்கு இந்தத் தொழில் சரிப்படவில்லை. நீயே தனியாக நடத்திக்கொள். என் பங்கை மட்டும் கொடுத்துவிடு.’’ டாம், ஜேம்ஸுக்கு அவருடைய பங்காக அன்றைக்குக் கொடுத்தது பழைய மாடல் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார். இப்போது அந்த பீட்ஸா கடையின் ஒரே உரிமையாளர் டாம். `உரிமையாளர்’ என்று பெயர்தானே தவிர, பிசினஸை வளர்க்கப் போராட வேண்டியிருந்தது. புது வாடிக்கையாளர்களைக் கடைக்கு வரவைக்க வேண்டும். இருக்கிற வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அது மிகப் பெரிய வேலை. 1965-ம் ஆண்டு முதல் வேலையாக தன் பீட்ஸா கடையின் பேரை மாற்றினார். `டோமினோ’ஸ் பீட்ஸா.’ அவருக்கே அந்தப் பெயர் பிடித்துப்போனது.

Pizza (Representational Image)
Pizza (Representational Image)
Photo by serjan midili on Unsplash

தொழில் நஷ்டத்தில் ஓடுவதைத் தடுக்க என்ன செய்வது என்று யோசித்தார். அதிகம் போணியாகாத சாண்ட்விச், கேக் வகையாறாக்களை தன் கடை மெனுவிலிருந்து தூக்கிப் போட்டார். அவற்றுக்குப் பதிலாக விதவிதமான பீட்ஸா வகைகளை மெனு பட்டியலில் சேர்த்தார். பீட்ஸா விற்பனையில் தன் முழுக் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். `ஆர்டர் செய்தால் வீடு தேடி பீட்ஸா வரும்’ என்கிற `ஹோம் டெலிவரி’ முறையை அறிமுகப்படுத்தினார். பிசினஸ் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பீட்ஸாவை வீடு வீடாகச் சென்று டெலிவரி செய்வதாகச் சொல்லியாகிவிட்டது. வாடிக்கையாளரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்வரை அது சூடாகவும், கெட்டுப் போகாமலும், உடைந்து போகாமலும் இருக்க வேண்டுமே... அதற்காகவே பிரத்யேகமாக ஒரு பாக்ஸை வடிவமைத்தார் டாம். நேர்த்தியாக பேக் செய்யப்பட்ட, சுவையான பீட்ஸா. வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தார்கள். அதே ஆண்டு, மேலும் இரண்டு பீட்ஸா கடைகளைத் திறந்தார் டாம்.

டோமினோ’ஸ் பீட்ஸாவின் லோகோவில் மூன்று வட்டப் புள்ளிகள் இருக்கும். டாம் ஆரம்பித்த முதல் மூன்று கடைகளைக் குறிப்பிடத்தான் அந்த மூன்று வட்டப் புள்ளிகள். ஆனால், அவையே டோமினோ’ஸின் அடையாளமாகிப் போயின. வெற்றி எதிரே வந்துகொண்டே இருந்தாலும் தோல்வியும் டாமைத் துரத்தத்தான் செய்தது. அவரது முதல் கடை எதிர்பாராமல் ஒரு தீ விபத்துக்கு உள்ளானது. பெருத்த நஷ்டம். ஆனாலும் நொறுங்கிப் போய்விடவில்லை டாம். அந்த நஷ்டத்தை ஈடுகட்ட என்ன செய்யலாம் என யோசித்தார். மேலும், ஐந்து புதிய கடைகளைத் திறந்தார்.

1970-ம் ஆண்டு. நிறுவனத்துக்குப் பல சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டன; வாடிக்கையாளர்களிடமிருந்து பீட்ஸாவின் தரம் சரியில்லை என்று புகார்கள் எழுந்தன; விற்பனை சரிய ஆரம்பித்தது. எதற்கும் துவண்டுவிடாத டாமின் இதயம் அவற்றையும் எதிர்கொண்டது. நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு பிரச்னையையும் சரி செய்தார்.

`அரை மணி நேரத்தில் பீட்ஸா டெலிவரி’ என்று புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது டோமினோ’ஸ் பீட்ஸா கடைகள் 200 இருந்தன. `ஒரு நிமிடம் தாமதமானாலும் வாங்க வேண்டாம்’ என்கிற அந்தத் திட்டம் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பிசினஸ் அதிவேகமாக மேலே மேலே உயர ஆரம்பித்தது.

`இவர் கதை `ஸ்லம்டாக் மில்லியனர்’க்கும் மேல!' - தடைகள் தகர்த்து சாதித்த கல்பனா சரோஜ் #BusinessMasters
₹8000 வேலை டு `வேலைவாய்ப்பு சாம்ராஜ்யம்' - நாக்ரி நிறுவன சஞ்சீவின் சாதனை கதை! #BusinessMasters - 10

இன்றைக்கு அமெரிக்கர்களுக்குப் பிடித்த பீட்ஸாக்களில் டோமினோ’ஸுக்கு ஐந்தாவது இடம். உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் டோமினோஸ் கடைகள் அதிகம் இருக்கின்றன. ஒரு நாளைக்கு டெலிவரி செய்யப்படும் டோமினோஸ் பீட்ஸாக்கள் 10 லட்சம். ஆர்டர் செய்ய தனி ஆப், ரோபோ மூலம் டெலிவரி (Domino’s Robotic Unit), பீட்ஸா தயாரிப்பதை வாடிக்கையாளர் பார்க்கும் வசதி... என என்னென்னவோ புதுமைகளைப் படைத்துவிட்டது இந்த நிறுவனம். அமெரிக்காவிலிருந்து பங்களாதேஷ் வரை 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000-க்கும் டோமினோஸ் ஸ்டோர்கள் இன்றைக்கு இருக்கின்றன.

இப்படி விரிவாக, உலக அளவில் ஒரு பிசினஸ் பிரபலமடைய காரணமாக இருந்தது டாம் மோனாகனின் பிராண்டிங் உத்தி. எதற்கும் அசராத, முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது என்கிற தொழிலில் அவருக்கு இருந்த அழுத்தமான ஈடுபாடு!

அடுத்த கட்டுரைக்கு