Election bannerElection banner
Published:Updated:

670 ரூபாய் சம்பளம் டு கம்பெனிக்கே CEO... L&T நாயக்கின் வெற்றிக்கதை! #BusinessMasters - 4

A. M. Naik
A. M. Naik ( Photo: Vikatan / Karthikeyan.K )

வெறும் 670 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சிறுவன், அந்த நிறுவனத்துக்கே சி.இ.ஓ-வாக உயர்ந்தார். `பத்மபூஷண்’, `பத்மவிபூஷண்’ விருதெல்லாம் அவரைத் தேடிவந்தன. அவர் பெயர், அனில் மணிபாய் நாயக்.

அப்பா கேட்டார்...

``நீ என்னவாகப் போறே?’’ கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொன்னான் மகன்...

``லீடராகப் போறேன்.’’

``உன் கிளாஸுக்கு லீடராகப்போறியா?’’

``இல்லை... அதுக்கும் மேல...’’

இந்தப் பதிலைச் சொன்னபோது அந்தச் சிறுவனுக்கு வெறும் ஆறு வயது. பிசினஸில் வெற்றி பெற புத்தாக்கச் சிந்தனைகள், புதிய வழிமுறைகள் மட்டுமல்ல... பெரும்பாலான நேரங்களில் தீர்க்கமான முடிவுகள்தான் உதவும். அதற்கு அந்தச் சிறுவனின் தீர்மானம் ஓர் உதாரணம்.

வெறும் 670 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சிறுவன், அந்த நிறுவனத்துக்கே தலைவராக உயர்ந்தார். `பத்மபூஷண்’, `பத்மவிபூஷண்’ விருதெல்லாம் அவரைத் தேடிவந்தன. அவர் பெயர், அனில் மணிபாய் நாயக். சுருக்கமாக `ஏ.எம்.நாயக்.’ எல் & டி நிறுவன ஊழியர்களின் மிக நீ...ண்டகால பாஸ்!

L & T
L & T

காந்தியடிகளின் சீடர்

வகுப்பில் லீடராக வேண்டுமா..? நன்றாகப் படிக்க வேண்டும். ஏ.எம்.நாயக் நன்றாகப் படித்தார். கிளாஸ் லீடரானார். அது போட்டியோ, பதவியோ... எதுவாகவும் இருக்கட்டும். முன்னிலையில் இருக்க வேண்டும்; முதல் ஆளாக இருக்க வேண்டும். இதுதான் லட்சியம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதை அடைந்துகொண்டே போனார்.

நாயக், குஜராத்திக்காரர். அப்பா, ஆசிரியர். காந்தியடிகள், `கிராமங்களுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தபோது, அதை முழுமனதாக ஏற்றுக்கொண்டு, மும்பையில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, ஒரு குக்கிராமத்துக்கு இடம்பெயர்ந்தார். அதனால் ஏ.எம்.நாயக்கின் பள்ளிப் படிப்பு கிராமங்களிலேயே கழிந்தது. வல்லப் வித்யாநகர் என்ற சின்ன ஊரிலிருந்த கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றார்.

கனவு நிறுவனம்

பொறியியல் துறையில் படித்தவர்களுக்கு வளர்ச்சி வேண்டுமா? அதற்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமைய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம். அன்றைக்கு குஜராத்தில் இன்ஜினீயரிங் முடித்த மாணவர்களின் கனவு நிறுவனமாக இருந்தது லார்சன் & டூப்ரோ (எல் & டி). ஆனால், அதுவோ ஐ.ஐ.டி மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுத்துக்கொண்டிருந்தது.

L&T construction research and testing centre
L&T construction research and testing centre
Photo: Vikatan / Karthikeyan.K
ஒரு காதல், ஒரு கனவு, ஒரு வெற்றி... Zoom-ஐ எரிக் சாத்தியப்படுத்தியது எப்படி? #BusinessMasters - 2

ஆங்கிலம்தான் பிரச்னை

இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கே உண்டான சாபக்கேடு ஆங்கிலம். பொறியியல் பட்டம் பெற்றுவிட்டாலும், நாயக்குக்கும் ஆங்கிலத்தில் பிரச்னை இருந்தது. அதனாலேயே சிபாரிசு கிடைத்தாலும்கூட, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. `நெஸ்ட்லர் பாய்லர்ஸ்’ என்ற சிறிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். குறுகிய காலத்திலேயே 350 தொழிலாளர்களுக்கு லீடரானார். கூடவே ஆங்கில மொழியைக் கற்பதிலும் கவனம் செலுத்தினார். ஒருகட்டத்தில் நெஸ்ட்லர் பாய்லர்ஸ் மற்றொரு முதலாளியின் கைகளுக்குப் போய்விட, `இனி இங்கே வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை’ என்பதை உணர்ந்துகொண்டவர், அங்கிருந்து வெளியேறினார்.

கரடுமுரடான பாஸ்

விதி அவரை எல் & டி-யை நோக்கி இழுத்தது, ஒரு விளம்பரம் மூலமாக. `வேலைக்கு ஆள் தேவை’ என்ற விளம்பரத்தை ஒரு பத்திரிகையில் பார்த்து நம்பிக்கையில்லாமல்தான் விண்ணப்பம் அனுப்பினார் நாயக். இன்டர்வியூவுக்கு அழைப்பு வந்தது. இன்டர்வியூ செய்தவர் இ.டி.பேக்கர் என்ற பிரிட்டிஷ்காரர். அதுவரை அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்த 40 பேரை நிராகரித்திருந்தார். 41-வது ஆளாகப் போனவர் நாயக். ஆனால், நாயக்கைப் பார்த்தவுடனேயே பேக்கருக்குப் பிடித்துப்போய் விட்டது. நாயக்கின் துறுதுறுப்பும், கண்களில் மிளிரும் கனவும் `இந்தப் பையன் சாதாரண ஆளில்லை’ என்ற நம்பிக்கையை விதைத்தது. விண்ணப்பத்தில் `ரைட் மார்க்’ போட்டு, தன் பாஸ் கன்னார் ஹேன்சன் என்பவரிடம் அனுப்பி வைத்தார்.

அவர், பேக்கரைவிடக் கரடுமுரடானவராக இருந்தார். முகத்தில் சிரிப்பு என்பதே இல்லை. `உதவி இன்ஜினீயர்’ பதவிக்கு விண்ணப்பித்திருந்த நாயக்கிடம், ``உனக்கு ஜூனியர் இன்ஜினீயர் வேலைதான் கொடுப்பேன். இஷ்டமிருந்தால் வேலையில் சேர்ந்துகொள்’’ என்று சொல்லிவிட்டார். சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார் நாயக்.

வாய்ப்பு எப்போதாவதுதான் கதவைத் தட்டும். தங்க மழை பெய்யும்போது ஸ்பூனை நீட்டாதீர்கள்; பக்கெட்டைக் காட்டுங்கள்.
வாரன் பஃபெட் (Warren Buffett), பிரபல அமெரிக்க முதலீட்டாளர், பிசினஸ்மேன்.

முதல் சம்பளம் ரூ.670

அவர் வேலைக்குச் சேர்ந்தது மார்ச், 1965. சம்பளம் 670 ரூபாய். அது ஒரே வருடத்தில் 1,025 ரூபாய் ஆனது. அதற்குப் பிறகு நாயக்கின் வளர்ச்சி வேகமெடுத்தது. மூன்றே வருடங்களில் எல் & டி-யில் உதவி மேலாளர்; பிறகு, ஜெனரல் மேனேஜர்; நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் என உயர்ந்துகொண்டே போனார் நாயக்.

1999-ம் ஆண்டு நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குநர் ஆனார். 2003-ம் ஆண்டு எல் & டி-யின் சேர்மனாகவும் உயர்ந்தார். எல் & டி-யை மற்ற சாதாரண பொறியியல்சார் தொழிற்சாலைகளைப் போல் நடத்துவதில் நாயக்குக்கு விருப்பமில்லை. மிக முக்கியமான துறைகளில் தன் நிறுவனம் தடம்பதிக்க வேண்டும் என்று விரும்பினார்.

பாதுகாப்பு, அணு ஆராய்ச்சி, விண்வெளி, எண்ணெய் வளம் மற்றும் எரிசக்தி, மின்சாரம் எனத் தேசத்தின் அத்தனை முக்கியத் துறைகளிலும் எல் & டி-யின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். செயலில் இறங்கினார். `21-ம் நூற்றாண்டு இந்தியாவை வடிவமைக்கும் நிறுவனமாக அதை வளர்த்தும் காட்டினார். `ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ’ பத்திரிகை, உலகின் மிகச் சிறந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலில் 32-வது இடத்தை நாயக்குக்குக் கொடுத்திருப்பதே அவர் வெற்றிக்குச் சான்று.

A. M. Naik
A. M. Naik
Photo: Vikatan / Karthikeyan.K
மாத்தியோசித்த `மாஸ்டர்'... உலகின் முதல் `ஐஸ் டீ' பிறந்தது இப்படித்தான்! ​#BusinessMasters - 1

நிஜத்திலும் நாயகன்!

ஒரு சாதாரண ஜூனியர் இன்ஜினீயர், ஒரு நிறுவனத்தின் சேர்மன் நிலைக்கு உயர்வது சாதாரண விஷயம் கிடையாது. அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பும், சிறு வயதிலிருந்தே `லீடராக வேண்டும்’ என்ற லட்சியமும்தான் அந்த சிம்மாசனத்தை அவருக்குப் பெற்றுத் தந்தன. இன்றைக்கும் ஓய்வில்லாமல் சுழன்றுகொண்டிருக்கிறார் இந்த பிசினஸ்மேன். எல் & டி-யின் அடுத்தகட்ட தலைவர்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். `ஏ.எம்.நாயக்’ நிஜத்திலும் `நாயகன்.’ இத்தனை ஆண்டுகள் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தைத் தனக்கென வைத்துக்கொள்ளவில்லை அவர். கல்விக்கு ஒன்று, மருத்துவத்துக்கு ஒன்று என இரண்டு டிரஸ்ட்டுகளை ஆரம்பித்து, தன் வருமானத்தில் 75 சதவிகிதத்தை அவற்றுக்குக் கொடுத்துவிட்டார்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாத நிலையில்தான் `ரிஸ்க்’ வருகிறது.
வாரன் பஃபெட் (Warren Buffett), பிரபல அமெரிக்க முதலீட்டாளர், பிசினஸ்மேன்.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் நாயக்... ``ஒவ்வொரு நாள் காலையிலும் அலுவலகத்துக்கு வந்ததும் முதல் நாள் என்ன நடந்தது என்பதை மனதுக்குள் ஓட்டிப் பார்ப்பேன். அதே போல, மாலையில் வீட்டுக்குக் கிளம்பும்போதும் அன்றைய நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பேன். `என்ன நடந்தது, என்ன தவறு செய்தேன், ஒரு விஷயத்தை எப்படிச் சிறப்பாகச் செய்தேன், யாரையாவது காயப்படுத்திவிட்டேனா...’ என்றெல்லாம் அசைபோடுவேன். இன்றைக்கும் அது தொடர்கிறது.’’

வெற்றி பெற இது போதாதா?

(- பாடம் எடுப்பார்கள்)
வாரந்தோறும் திங்கள் கிழமை, பிசினஸ் மாஸ்டர்கள் விகடன் தளத்தில் உங்களுக்கு உற்சாகமூட்டுவார்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு