Published:Updated:

வாழ்க்கையை மாற்றிய வாஷிங் பவுடர் `நிர்மா’ - கர்சன்பாய் படேலின் வெற்றிக் கதை! #BusinessMasters - 14

கர்சன்பாய் படேல்
கர்சன்பாய் படேல்

கர்சன்பாயின் நிர்மா, மக்கள் மத்தியில் வெகு சீக்கிரமே பிரபலமடையக் காரணம் அவர் அதற்கு நிர்ணயம் செய்த விலை. எளிய மக்கள்கூட அதை வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு மிகவும் குறைவாக இருந்தது அதன் விலை.

`ஜிங்கிள்ஸ்’ எனப்படும் விளம்பரப் பாடல் வரிகள்கூட சில பிசினஸ்களை உயரத்துக்குக் கொண்டு போய்விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு ஜிங்கிள் `வாஷிங் பவுடர் நிர்மா...’ ஆனால், விற்பனையில் நிர்மா சக்கைபோடு போட்டதற்கு ஜிங்கிள்ஸ் மட்டுமே காரணம் இல்லை. அதன் நிறுவனர் கர்சன்பாய் படேல், நிர்மாவை எல்லா தரப்பு மனிதர்களுக்குமானதாக உருவாக்கியிருந்தார். குறைந்த விலை... நிறைந்த தரம்... இதற்காக அவர் காட்டிய அக்கறையும் உழைத்த உழைப்பும் அபாரமானது!

`ஒரு பொருளுக்கு ஓரளவு குறைந்த விலையை நிர்ணயிப்பதுகூட ஒரு வகையில் பிராண்டிங்தான்’ என்கிறார் ஹவாயைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பிசினஸ்மேனுமான ரிச்சி நார்ட்டன் (Richie Norton). கர்சன்பாயின் நிர்மா, மக்கள் மத்தியில் வெகு சீக்கிரமே பிரபலமடையக் காரணம் அவர் அதற்கு நிர்ணயம் செய்த விலை. எளிய மக்கள்கூட அதை வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு மிகவும் குறைவாக இருந்தது அதன் விலை.

நிர்மா
நிர்மா

கர்சன்பாய் படேல் குஜராத்தைச் சேர்ந்தவர். 1945-ம் ஆண்டு மெஹ்சனாவுக்கு அருகிலுள்ள ரப்பூர் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். எதையும் ஆர்வத்தோடு படித்தால் அதிலேயே ஆழ்ந்து திளைத்துவிடலாம், அந்தத் துறையில் மாஸ்டர் ஆகலாம் என்பதற்கு உதாரணம், கர்சன்பாய். அவர் படித்தது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி. ரசாயனங்கள், அதன் நுட்பங்கள் அத்தனையையும் தெரிந்துகொள்வதில் அவருக்கு ஓர் அதீத ஆர்வம் இருந்தது. 21 வயதிலேயே ரசாயனங்கள், அதன் சேர்மானங்கள் குறித்த ஒரு தெளிவான பார்வை அவருக்கு வந்திருந்தது.

பட்டம் பெற்றதும் அவர் முதலில் வேலைக்குச் சேர்ந்த இடம் அகமதாபாத்திலுள்ள நியூ காட்டன் மில்ஸ். பிரபல லால்பாய் குரூப்புக்குச் சொந்தமான தொழிற்சாலை. லேப் டெக்னீஷியன் வேலை. அவருக்குப் பிடித்த வேலைதான் என்றாலும், அங்கேயே முழுக்க முழுக்க தன் வாழ்க்கையை ஓட்டிவிட அவர் விரும்பவில்லை. 1969-ம் ஆண்டு குஜராத் மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் (Geology and Mining Department) வேலைக்குச் சேர்ந்தார். அந்த வேலையைப் பார்த்துக்கொண்டே ரசாயனம் தொடர்பான தன் பரிசோதனைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.

கர்சன்பாய் படேல் இருந்தது பத்துக்குப் பன்னிரண்டு அடி அளவேயான சின்னஞ்சிறு வீடு. வீட்டுக்குப் பின்புறம் குட்டியூண்டாக ஓர் இடம். அங்கே சில ரசாயனங்களையும், அவற்றுக்கான சேர்மானங்களையும கொண்டு அவரே சோப்புக் கட்டிகளையும், வாஷிங் பவுடரையும் தயாரிக்க ஆரம்பித்தார். அவற்றின் வாசனை, தரம் எல்லாவற்றையும் பலமுறை பரிசோதித்தார். ஒருகட்டத்தில் அதில் திருப்தியடைந்தார். `இதையும் விற்றுத்தான் பார்ப்போமே...’ என்று தோன்றியது. காரியத்தில் இறங்கினார். அவற்றை பேக் செய்து பையில் போட்டுக்கொண்டார்.

அவருடைய வீட்டிலிருந்து அவர் வேலை பார்க்கும் இடம் 17 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. சைக்கிளை எடுத்துக்கொண்டார். வழக்கமான நேரத்தைவிட சற்று முன்னதாகவே கிளம்பினார். அலுவலகத்துக்குப் போகும் வழியில், வீடு வீடாக வாஷிங் பவுடரை விற்க ஆரம்பித்தார். அன்றைய சூழலில் வாஷிங் பவுடர், சோப்புகளைத் தயாரித்து விற்கும் தொழிலில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், புராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் ஈடுபட்டிருந்தன. அவற்றோடு போட்டி போட்டுத் தன் தயாரிப்புகளை விற்பது சாதாரண காரியமல்ல என்பதை அவர் நன்றாக உணர்ந்தேயிருந்தார். அதே நேரத்தில் `சர்ஃப்’ உள்ளிட்ட அப்போது சந்தையில் விற்கப்பட்டுவந்த வாஷிங் பவுடர்களின் விலை சாமான்ய மக்களை மலைக்க வைத்தது. எனவே, தன் தயாரிப்புகளைத் தரமாக உற்பத்தி செய்து, அதை மிக மிகக் குறைந்த விலைக்கு விற்பது என்பதில் தெளிவாக இருந்தார்.

கர்சன்பாய் படேல்
கர்சன்பாய் படேல்
`இவர் கதை `ஸ்லம்டாக் மில்லியனர்’க்கும் மேல!' - தடைகள் தகர்த்து சாதித்த கல்பனா சரோஜ் #BusinessMasters

பெரிய நிறுவனங்கள் வாஷிங் பவுடருக்கு நிர்ணயித்திருந்த விலையைக் கவனித்தார். அந்த விலையைவிட மூன்றில் ஒரு பங்கு விலையைத் தன் வாஷிங் பவுடருக்கு வைத்தார். ஒரு கிலோ 3 ரூபாய். கர்சன்பாய் பட்டேலின் வாஷிங் பவுடர், பயன்படுத்திப் பார்த்த எல்லோருக்கும் பிடித்துப்போனது. குறிப்பாக, எளிய மனிதர்களை அது ஈர்த்தது. மெல்ல மெல்ல வாய்மொழியாகவே அவருடைய வாஷிங் பவுடர் பிரபலமானது. வியாபாரம் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தது.

மூன்றே ஆண்டுகள்... `சரி, இந்தத் தொழில்தான் நம் எதிர்காலம். முழுவதுமாக இதில் இறங்கிவிட வேண்டியதுதான்’ என்கிற நம்பிக்கை கர்சன்பாய் படேலுக்குப் பிறந்தது. தன் அரசு வேலையைத் துணிந்து ராஜினாமா செய்தார். அகமதாபாத்தில் அவருடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காகவே ஒரு கடையை ஆரம்பித்தார். ஒரு கார் விபத்தில் இறந்துபோன தன் மகள் நிருபமாவின் நினைவாக தன் பிராண்டுக்கு `நிர்மா’ என்று பெயர் வைத்தார்.

முழுக்க முழுக்க அவர் கற்பனையில் உருவான `நிர்மா’ தொலைக்காட்சி விளம்பரம் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு குடும்பமாக, இல்லத்தரசிகளும், ஒரு குழந்தையும் திரையில் தோன்றி `வாஷிங் பவுடர் நிர்மா... வாஷிங் பவுடர் நிர்மா’ என்று பாடும் ஜிங்கிள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் சூடுபிடிக்க ஆரம்பித்த நிர்மா வியாபாரம், மெல்ல மெல்ல அடுத்தடுத்த மாநிலங்களுக்கும் பரவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்றைய டிடர்ஜென்ட் சந்தையில் ஒரு புதிய சகாப்தத்தை நிர்மா படைத்தது. அடுத்த பத்து வருடங்களில் இந்திய டிடர்ஜென்ட் சந்தையில் நிர்மா, தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டது. கர்சன்பாய் படேல் என்ற ஒரு தனி மனிதரால் உருவாக்கப்பட்ட நிர்மா குழுமத்தில் 2004-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி பணியாற்றியவர்களின் எண்ணிக்கை 14,000.

நிர்மா வாஷிங் சோப், வாஷிங் பவுடரைத் தொடர்ந்து வேறு சில தயாரிப்புகளையும் சந்தைக்குக் கொண்டு வந்தார் கர்சன்பாய் படேல். குளியல் சோப், டாய்லெட் சோப், ஷாம்பூ, டூத்பேஸ்ட், `ஷுத்’ சமையல் உப்பு... என்று பல பொருள்கள் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டன. ஆனால், ஏற்கெனவே இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் பிராண்டுகளோடு நிர்மாவின் ஷாம்பூவாலும் டூத்பேஸ்ட்டாலும் போட்டிபோட முடியவில்லை. வட இந்தியாவில் பல முன்னணி வாசனை சோப்புகளுக்கு ஈடாக நிர்மாவின் வாசனை குளியல் சோப்புக்குத் தனி மார்க்கெட் உண்டு. ஷுத் உப்புவுக்கும் நல்ல விற்பனை சந்தை உண்டு.

Nirma University
Nirma University
`200 கடைகள்; அரை மணி நேர டெலிவரி சவால்!’ - டோமினோ’ஸ் பீட்ஸா ஜெயித்த கதை #BusinessMasters - 12

கர்சன்பாய் படேலுக்கு கல்வித் துறையில் அலாதியான ஈடுபாடு. நிர்மாவின் வெற்றியைத் தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். நிர்மா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, நிர்மா யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, நிர்மா லேப்ஸ் என்று பல கல்வி நிறுவனங்களை குஜராத்தில் கட்டியெழுப்பினார்.

2009-ம் ஆண்டு பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை, இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் 92-வது இடத்தில் கர்சன்பாய் படேல் இருப்பதாகப் பட்டியல் வெளியிட்டது. அதே ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2019-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில் 30-வது இடத்துக்கு முன்னேறியிருந்தார் கர்சன்பாய் படேல். `உத்யோக் ரத்னா’ விருது, இந்திய அரசின் `பத்மஸ்ரீ’ விருது, ஃபுளோரிடா அட்லான்டிக் யுனிவர்சிட்டி வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம் என எத்தனையோ விருதுகளும் பரிசுகளும் அவரைத் தேடிவந்தன. இன்றைக்குத் தன் இரு மகன்கள், மகள், மருமகன் கைகளில் நிர்மா என்கிற வெற்றிகரமான பிசினஸை முழுமையாக ஒப்படைத்துவிட்டார் கர்சன்பாய் படேல். எந்தத் துறையாக இருந்தாலும் சரி... அதில் ஆழ்ந்து முக்குளித்தால் முத்தெடுக்கலாம். அந்த முத்து நம் வாழ்க்கையே மாற்றிக் காட்டும் என்பதற்கு அழுத்தமான உதாரணமாக இருக்கிறது கர்சன்பாய் படேலின் `நிர்மா’...

அடுத்த கட்டுரைக்கு